தொப்பையை குறைக்க பின்பற்ற வேண்டிய விதிகள்
|வயது அதிகரிக்கும்போது வயிற்றை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்க முடியாது என்றாலும் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுதான் தொப்பையை குறைக்க வேண்டும் என்றில்லை.
உணவு வழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலமும் தொப்பையை கட்டுக்குள் வைத்து கட்டுடல் அழகை பராமரிக்கலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
நார்ச்சத்து உணவுகளை உண்ணுங்கள்:
பருப்பு வகைகள், சாலடுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களை கொண்டிருக்கும். நார்ச்சத்தானது உட்கொள்ளும் உணவில் உள்ள தண்ணீரை உறிஞ்சி ஜெல் நிலைக்கு மாற்றும். இது வயிற்றில் இருந்து உணவு செரிமானமாகும் செயல்முறையை தாமதப்படுத்தும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசியின்றி உற்சாகமாக செயல்பட வைக்கும். மற்ற உணவுகளை விட நார்ச்சத்து கொண்ட உணவுகளை குறைவாகவே சாப்பிட முடியும். மேலும் உணவிலிருந்து உறிஞ்சப்படும் கலோரிகளின் அளவும் குறைவாகவே இருக்கும்.
கொழுப்புகளை தவிர்க்கவும்:
பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும். இவை உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகளாக குறிப்பிடப் படுகின்றன. இவற்றை அதிகம் உட்கொள்வது உடல்பருமன், இன்சுலின் பாதிப்பு, இதய நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
மதுவை தவிருங்கள்:
அதிக ஆல்கஹால் கொண்ட மது வகைகளை உட்கொள்வது இடுப்பின் சுற்றளவை அதிகரிக்க செய்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் மதுவை தவிர்ப்பது அவசியமானது.
புரதம் அதிகம் சாப்பிடுங்கள்:
புரதம் உள்ளடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். கொழுப்பின் அளவை குறைத்து தசை கட்டமைப்பை வலுப்படுத்த துணைபுரியும். இறைச்சி வகைகள், முட்டை, மீன், பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளலாம். இவற்றில் புரதம் நிரம்பி இருக்கும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்:
மன அழுத்தம் உடலில் கார்டிசால் உற்பத்தியை தூண்டிவிடும். இது மன அழுத்தம் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் சாப்பிடும் உணவின் அளவை அதிகரிக்க செய்யும். கொழுப்பு படிவதை ஊக்குவிக்கும். யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
சர்க்கரையை குறையுங்கள்:
சர்க்கரைக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது. சர்க்கரை முக்கியமாக குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸை உருவாக்குகிறது. இதில் பிரக்டோஸ் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும்.