சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு
|பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும்.
பெருமைமிகு நம் பாரத மக்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தனர். இந்த அடிமை விலங்கை உடைத்து எறிந்து பாரதத்தை மீட்கப் போராடிய தியாகச் செம்மல்களில் பலர் தமிழ் திருநாட்டில் இருந்தனர். பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும். வானம் பொழியுது பூமி விளையுது. ஆங்கிலேயருக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என வீர முழக்கமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போலவே வீரன் ஊமைத்துரை, வேலுநாச்சியார், சிவகங்கை மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை முதலானோர் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணமடைந்தனர். அவர்களின் உரிமைப்போர் தோற்றாலும் அவர்கள் உண்டாக்கிய விடுதலை உணர்வு வளர்ந்தது.
சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள் பலர். அதில் ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைத்தனர். கல்லுடைத்தார், கசையடிபட்டார். ஆயினும் தம் வாழ்வை விடுதலைக்கு அர்ப்பணித்தார். நாட்டுப்பற்றை துறக்காத துறவி சுப்பிரமணிய சிவா ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளானார். சிறையில் அவருக்கு பல இன்னல்களை தந்தனர்.
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- அது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்றும்
சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்- இனி அஞ்சிடோம்
என்றும் முழங்கி மூலையில் முடங்கி கிடந்தவர்களை தட்டியெழுப்பினார் தேசியக்கவி பாரதியார். கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற ராமலிங்கபிள்ளையின் பாடல் தமிழக விடுதலை வீரர்களின் வேதமந்திரமாக பாடப்பட்டது. தூத்துக்குடி அருகே மணியாச்சி ரெயில் நிலையத்தில் ஆஷ் என்ற ஆங்கில அதிகாரியை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கிவிட்டுத் தன்னையும் மாய்த்துக்கொண்டான் வீரன் வாஞ்சிநாதன். ஏந்திய மூவர்ண கொடியை தனது தலை மண்ணில் சாயும்வரை உயர்த்தி பிடித்து போராடி உயிர் நீத்தவன் திருப்பூர் குமரன். அண்ணல் காந்தியடிகளின் அறவழி போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள் பலர். அவர்களுடைய தியாகம் இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த அவர்கள் எழுச்சியோடு பங்கேற்றதால் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. தற்போது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை காப்பது இம்மண்ணின் மைந்தர்களது கடமையாகும்.