படகுப்போட்டிகளில் பட்டைய கிளப்பும் 'குட்டி சாம்பியன்' ரித்திகா
|‘போட் ரோவிங்’ எனப்படும் துடுப்பு படகு போட்டியில் பட்டைய கிளப்புகிறார், சென்னை நந்தனம் பகுதியில் வசிக்கும் ரித்திகா. இவர் மைலாப்பூரில் இருக்கும் வித்யா மந்திர் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். தமிழ்நாட்டின் சார்பாக, தேசிய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கும், அவருடன் சிறு நேர்காணல்...
'போட் ரோவிங்' விளையாட்டு உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
2019-ம் ஆண்டு வரை எனக்கு 'போட் ரோவிங்' விளையாட்டு பற்றி தெரியாது. ஏனெனில் அதற்கு முன்பு வரை, ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதில் தேசிய அளவில் பங்கேற்றதுடன், மாநில அளவிலும் பல போட்டிகளை வென்றிருந்தேன். இருப்பினும் ஸ்கேட்டிங் பயிற்சியில், தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டதால், அதை தொடர முடியவில்லை. அதற்கு பிறகுதான் 'போட் ரோவிங்' பயிற்சி பெறத் தொடங்கினேன்.
போட் ரோவிங் விளையாட்டிற்குள் ஐக்கியமானது எப்படி?
2019-ம் ஆண்டு, மெட்ராஸ் போட் கிளப் சார்பாக கோடைகால பயிற்சிகள் நடத்தப்பட்டன. அங்குதான் 'போட் ரோவிங்' பற்றி தெரிந்து கொண்டேன், கற்றுக்கொண்டேன், பயிற்சி பெற்றேன். ஒரு மாத பயிற்சிக்கு பிறகு, அங்கேயே சிறப்பு போட்டி ஒன்றை ஒருங்கிணைத்தனர். அதில் இருவர் பிரிவில் தங்கப்பதக்கமும், நால்வர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. கூடவே, போட்ரோவிங் விளையாட்டில் சாதிக்கும் ஊக்கமும் பிறந்தது.
இந்த விளையாட்டில் தீவிரம் காட்டியது எப்போது?
'போட் ரோவிங்' என்பது, மிகவும் சுவாரசியமான விளையாட்டு. கை மற்றும் கால்களை ஒருசேர இயக்கும் விளையாட்டு. உடலையும் வலுவாக்கும். மனதையும் அமைதியாக்கும். மற்ற விளையாட்டுகளில் இருந்து தனித்துவமான விளையாட்டாக தெரிந்ததால், அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். மெட்ராஸ் போட் கிளப்பிலேயே பயிற்சி பெறத் தொடங்கினேன்.
வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?
மெட்ராஸ் போட் கிளப், ஒருங்கிணைத்த மழைக்கால போட்டியில், 'சப் ஜூனியர்' பிரிவில் (15 வயதிற்கு உட்பட்டோர்) பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றேன். பிறகு இந்த ஆண்டு, தமிழ்நாடு அளவில் நடத்தப்பட்ட மாநில போட்டியில் இரட்டையர் பிரிவில் கலந்துகொண்டு, வெள்ளிப்பதக்கம் வென்றேன். இதற்கிடையில், ஆசிய அளவில் நடத்தப்பட்ட விர்சுவல் போட்டியிலும் அசத்தினேன். சமீபத்தில் கூட, காஷ்மீரின் தால் ஏரியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், தமிழ்நாடு சார்பாக 500 மீட்டர் நால்வர் பிரிவில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றேன்.
மறக்கமுடியாத அனுபவம் உண்டா?
காஷ்மீரின் தால் ஏரியில், கடுங்குளிருக்கு மத்தியில் படகிற்கு துடுப்பு போட்டதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஏனெனில் சென்னையில் வெப்பமான சீதோஷண நிலையில் பயிற்சி பெற்ற எங்களுக்கு காஷ்மீரின் கடுங்குளிரான தால் ஏரியில் துடுப்பு போடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. கைகள் உறைந்துவிட்டன. உடல் நடுங்க ஆரம்பித்தது. இருப்பினும், குளிரான சீதோஷண நிலையையும் சமாளித்து துடுப்பு போட்டோம். வெற்றி பெற்றோம்.
குறுகிய காலத்தில், நம்பிக்கையூட்டும் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறீர்கள். எப்படி சாத்தியமானது?
பயிற்சி பெற தொடங்கிய 3 ஆண்டிற்குள்ளாகவே, தேசிய அளவில் பதக்கம் வென்றிருக்கிறேன். இதை நினைத்து, நானும் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டது உண்டு. இருப்பினும், தொடர் பயிற்சிக்கும், உழைப்பிற்கும் நிச்சயம் பலன் உண்டு என்பதை, இதன் வாயிலாக உணர்ந்து கொள்கிறேன்.
உங்களுடைய ஆசை என்ன?
இந்தியாவிற்காக, ரோவிங் விளையாட்டில் தங்கம் வெல்வதே, என்னுடைய ஆசை. அதேபோல, 15 வயதை பூர்த்தி செய்வதற்குள் (இப்போது 14 வயது) சப்-ஜூனியர் பிரிவில் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதிலும் ஆர்வமாய் இருக்கிறேன்.
உங்களை உற்சாகப்படுத்தும் விஷயம் எது?
அம்மா லாவண்யா, தாத்தா ராஜேந் திரன், பாட்டி உமாராணி ஆகியோரின் உற்சாகமும், தாரா அமைப்பின் தலைவர் பாலாஜி, சிறப்பு பயிற்சியாளர் பாஸ்கர் மற்றும் எம்.பி.சி. பயிற்சியாளர் கஜேந்திரன் ஆகியோரின் ஊக்கமும், சக தோழிகள் பிரியதர்ஷினி, அபிநயா மற்றும் ரோகிணி பிரியா ஆகியோரின் ஒத்துழைப்பும்... என்னை உற்சாகமாக நகர்த்தி செல்கிறது.
'போட் ரோவிங்' விளையாட்டில் யாரெல்லாம் ஈடுபடலாம்? பாதுகாப்பான விளையாட்டா?
11 வயது நிரம்பியவர்கள், அதேசமயம் நீச்சல் பயிற்சி பெற்றவர்கள்... போட் ரோவிங் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பார்ப்பதற்கு செலவு நிறைந்த விளையாட்டாக தெரிந்தாலும், மெட்ராஸ் போட் கிளப் மூலமாக மிக குறைவான கட்டணத்திலேயே பயிற்சி பெறலாம். ஆபத்தான விளையாட்டு போல தோன்றினாலும், பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும். அதனால் தைரியமாக இந்த பயிற்சியை பெறலாம்.