< Back
சிறப்புக் கட்டுரைகள்
பாரம்பரிய சின்னத்தில் இடம்பெற்ற படிக்கிணறு
சிறப்புக் கட்டுரைகள்

பாரம்பரிய சின்னத்தில் இடம்பெற்ற 'படிக்கிணறு'

தினத்தந்தி
|
8 Sept 2022 9:52 PM IST

உலக பாரம்பரிய சின்னங்களில் ‘படிக்கிணறு’ ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க படிக்கிணறுகள் அமைக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. ஆமதாபாத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் இருக்கிறது, பதான் நகரம். அங்கு பசுமையான புல்வெளிக்கு நடுவே 'ராணி கி வாவ்' எனப்படும் மிக பிரமாண்டமான படிக்கிணறு உள்ளது. 'படிக்கிணறுகளின் ராணி' என்றே இதை அழைக்கிறார்கள். உலக பாரம்பரிய சின்னங்களில் இதுவும் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

சோலாங்கி வம்சத்தை சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவருடைய மனைவி ராணி உதயமதியால் இந்த படிக்கிணறுக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த படிக்கிணறு, 7 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. கடைசி படிக்கட்டுக்கு கீழே 30 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை சித்பூருக்கு செல்கிறது. போர்க்காலங்களில் அரச குடும்பத்தினர் தப்புவதற்காக இது கட்டப்பட்டிருக்கிறது.

கி.பி 1063 முதல் 1068 வரை இந்த கிணற்றை கட்டி இருக்கிறார்கள். காலப்போக்கில் இந்த படிக்கட்டு கிணறு, கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நீண்ட காலம் மக்களுக்கு அதுபற்றி தெரியாமலே போய்விட்டது. 1960-ம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாகக்கன்னிகள், கண்ணாடியை பார்த்து பொட்டு வைக்கும் பெண், யானைகள் உள்ளிட்டவை போன்று 800-க்கும் அதிகமான சிற்பங்கள் பக்கவாட்டு சுவர்களில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மழை நீரை சேமிக்கும் இடமாகவும் இதுபோன்ற படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன.

மேலும் செய்திகள்