இசை உலக ராணி கே.பி.சுந்தராம்பாள்
|இன்று (செப்டம்பர் 19-ந்தேதி) நடிகை கே.பி.சுந்தராம்பாள் நினைவு நாள். ‘கொடுமுடி கோகிலம்' என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என பல துறைகளிலும் புகழ்பெற்றவர்.
பொதுவாக பாடகர்கள் மூன்றரைக் கட்டையில் தான் பாடுவர். சுந்தராம்பாள் சர்வ சாதாரணமாக ஐந்தரைக் கட்டையை தாண்டுவார்.
பழம் நீயப்பா
திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய 'பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா!' என்ற பாடல் ஆலயங்களில் வேதமந்திரமாக ஒலித்தது. 'ஞானப்பழத்தை பிழிந்து' என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கே.பி.சுந்தராம்பாள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்ற ஊரில் 1908-ம் ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி பிறந்தார். அவரது அம்மா பாலாம்பாள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் ஆரம்ப படிப்பை படித்தார்.
சிறுவயதில் குடும்பம் வறுமை நிலை காரணமாக இவர் ரெயில்களில் பாட்டுபாடி வந்தார். அதைக்கேட்ட நடேசன் ஐயர் என்பவர் இவரை ஒரு நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார்.
பாலபார்ட், ஸ்திரிபார்ட், ராஜபார்ட் ஆகிய வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். இலங்கைக்கு சென்று நாடகங்களில் நடித்தார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவன், ஞானசவுந்தரி போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
திருமணம்
புகழ்பெற்ற நாடக கலைஞர் எஸ்.ஜி.கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் இருவரும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் நடித்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான பாடல்களை அந்த நாடகங்கள் இடையிலேயே கதையுடன் இணைத்து பாடினார். ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. கணவருடன் சேர்ந்து வாழவிரும்பி சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் நெஞ்சை உருக்குவனவாகும். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக 1933-ம் ஆண்டு கிட்டப்பா காலமானார்.
அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்று முதல் அவர் வெள்ளைச்சேலை அணிய தொடங்கினார். எந்த ஒரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார்.
காந்தியின் அழைப்பு
கிட்டப்பாவின் மறைவுக்குப்பின் பாடுவதில்லை என்ற முடிவில் இருந்த சுந்தராம்பாளை மீண்டும் கலை உலகுக்கு அழைத்து வந்தவர் மகாத்மா காந்தி. சுதந்திரப் போராட்ட பிரசார பாடல்களை பாடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சுதந்திரப் போராட்ட பாடல்கள் மூலம் மகாத்மா காந்தியின் பெருமையை பரப்பினார்.
1937-ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ் வீட்டில் உணவருந்தினார். காந்திக்கு தங்கத்தட்டில் உணவு பரிமாறினார் கே.பி.சுந்தராம்பாள் எனக்கு வெறும் சாப்பாடு மட்டும் தானா? இந்த தட்டு கிடையாதா என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்டார். உடனே கே.பி.எஸ். அந்த தட்டை காந்தியிடம் வழங்கினார். அதை காந்தி ஏலத்தில் விட்டு பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்தார். 1935-ம் ஆண்டு தயாரான 'பக்தநந்தனார்' என்ற படத்தில் நடிப்பதற்காக கே.பி.சுந்தராம்பாளை தயாரிப்பாளர் அணுகி அவரது சம்மதம் கேட்டார். அப்போது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். தான் கேட்ட பணத்தை தயாரிப்பாளர் தரமாட்டார் நாம் நடிக்க வேண்டியது இருக்காது என்பது இவர் எண்ணம். ஆனால் தயாரிப்பாளரோ அவர் கேட்ட பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டதால் வேறுவழியில்லாமல் இவர் நடிக்க வேண்டியதாயிற்று. இது அந்தகாலத்தில் மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்ட செய்தியாகும். அப்போது பவுன் விலை 13 ரூபாய்தான். அந்ததொகை இந்திய அளவில் யாருக்குமே தரப்படவில்லை. 1935-ல் இந்த படம் வெளியானது. இதில் 41 பாடல்களில் சுந்தராம்பாள் 19 பாடல்களை பாடினார். பாடலின் இனிமையில் திரையுலகமே சொக்கிப்போனது. கோடம்பாக்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தொடர்ந்து மணிமேகலை படத்தில் நடித்தார். இதில் 11 பாடல்களை பாடினார். அவ்வையார் என்ற படத்தில் அவ்வை வேடம் ஏற்று நடித்தார். இதில் 30 பாடல்களை பாடினார். இந்தப் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் உடல் மொழியிலும், பேசும்மொழியிலும், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார். ரசிகர்கள் பிரமித்தனர். தொடர்ந்து பூம்புகார் படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் கவுந்தியடிகள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, உயிர் மேல்ஆசை, துணைவன், சக்திலீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம், மணிமேகலை ஆகிய 12 படங்களில் பாடி நடித்தார்.
கே.பி.சுந்தராம்பாள் பாடிய பிரபலமான பாடல்கள்: அரியது அரியது என்றும் பாடல் புதியது(கந்தன் கருணை) வாழ்க்கை என்னும் ஓடம்(பூம்புகார்) ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி, தகதகவென ஆடவா(காரைக் கால் அம்மையார்) ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை(திருமலை தெய்வம்) சென்று வா மகனே(மகாகவி காளிதாஸ்) பழனிமலை மீதினிலேகுடிகொண்டு இருப்பவனே(துணைவன்) சினிமாவில் மட்டுமின்றி தனியாகவும் மொத்தம் 200 பாடல்களை அற்புதமாக பாடியுள்ளார்.
கருணாநிதி பாடல்
பூம்புகார் திரைப்படத்தில் வரும் வாழ்க்கை என்னும் ஓடம் பாடலில் நின்று கொல்லும் தெய்வம் சென்றுவிட்டதோ என்ற வரியை கருணாநிதி எழுதியிருந்தார். இறைநம்பிக்கை கொண்ட கே.பி.சுந்தராம்பாள் அதை பாட மறுத்தார். 'பின் நின்று கொல்லும் தெய்வம் வந்துவிட்டதோ' என மாற்றினார். அந்த அளவுக்கு கே.பி.எஸ்.சின் உணர்வுகளை கருணாநிதி மதித்தார்.
கொடுமுடியில் கே.பி.எஸ். என்ற பெயரில் ஒரு திரையரங்கை கட்டினார் சுந்தராம்பாள். அதன் திறப்பு விழாவில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி புகழ்பெற்ற நடிகர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர். நெற்றியில் சுந்தராம்பாள் திருநீறு பூசினார். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர். அழிக்காமல் இருந்தார். சுந்தராம்பாளின் கலைச் சேவையை பாராட்டும் விதத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. துணைவன் படத்துக்காக சிறந்த தேசிய பின்னணி பாடகர் விருது பெற்றார்.
இசை உலகத்துக்கே ராணி
இங்கிலாந்து ராணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது அவர் சந்திக்க விரும்பிய இந்திய திரைப்படப் பிரமுகர் கே.பி.சுந்தராம்பாள். இவர்கள் சந்திப்புக்கு அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் ஏற்பாடு செய்தார். அப்போது இங்கிலாந்து ராணியிடம் காமராஜர் நீங்கள் இங்கிலாந்துக்கு ராணி இவங்க இசை உலகத்துக்கே ராணி என்று பெருமையுடன் கூறினார்.
1958-ம் ஆண்டில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கே.பி.சுந்தராம்பாள் தமிழக மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி கே.பி.சுந்தராம்பாள் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய தவக்குரலால் மக்கள் இதயம் கவர்ந்த சுந்தராம்பாள் தனது கந்தர்வகானம் மூலம் காலத்தை வென்று வாழ்வார்.