< Back
சிறப்புக் கட்டுரைகள்
கத்தார் அன்றும்..! இன்றும்..!
சிறப்புக் கட்டுரைகள்

கத்தார் அன்றும்..! இன்றும்..!

தினத்தந்தி
|
9 Dec 2022 2:17 PM IST

ஒரு காலத்தில் வறுமை உழன்று வந்த கத்தார், மூன்று முக்கியமான நிகழ்வுகளால், பணக்கார நாடாகி, உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குறைந்த அளவே மக்களைக் கொண்டிருந்தது. யாரும் குடியிருக்க முடியாத நிலம் அதன் வசம் இருந்தது. மீனவர்கள், முத்து சேகரிப்போரை கொண்ட குடியிருப்புகள் மட்டுமே அந்த நாட்டில் இருந்தன. பெரும்பாலான குடிமக்கள் நாடோடியாக வந்து குடியேறியவர்கள்.

முத்துக்கள் வளர்ப்பு முறையை ஜப்பான் கண்டறிந்த பின்னர், கத்தாரின் பொருளாதார வளம் சரிந்தது. 1939-ம் ஆண்டு இங்கு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும், பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால், 1950-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாரில் அற்புதங்கள் நிகழத் தொடங்கின. எண்ணெய் வளம் உலக நாடுகளை ஈர்க்க, கத்தாரின் கஜானா நிரம்ப தொடங்கியது.

அதன்பிறகு, அந்த நாடு வறுமை என்பதை பார்க்கவே இல்லை. ஆம். வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே பரிசாக கிடைத்து வருகிறது. உலகின் செல்வ வளம் மிகுந்த குடிமக்களில் சிலராக அந்நாட்டு மக்கள் மாறினர். இப்போது கத்தார், வானளாவிய கட்டிடங்கள், ஆடம்பரமான செயற்கை தீவுகள் மற்றும் அதி நவீன விளையாட்டு மைதானங்கள் என மேம்பாடு அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு மூன்று காரணிகளே முக்கிய காரணம்.

ஒன்று எண்ணெய் வளம், இரண்டாவது இயற்கை எரிவாயு. உலகளவில் அதிக அளவு இயற்கை எரிவாயு கொண்ட நாடாக கத்தார் விளங்கி வருகிறது. மூன்றாவதாக அரசியல் மாற்றம், அரண்மனை ஆட்சி கவிழ்ப்பு, பொருளாதார ஏற்றத்திற்கு வழிவகுத்தது. இரட்டை இலக்க ஜி.டி.பி. வளர்ச்சி, கத்தாரை வலிமை மிக்க நாடாக்கியது.

கத்தாரின் தனிநபர் ஜி.டி.பி., கடந்த ஆண்டு 61,276 டாலர் ஆக இருந்தது. இதேபோன்று, மக்கள் தொகையும் அந்நாட்டிற்கு சாதகமாக இருக்கிறது. கத்தார் மக்கள் தொகை 3 லட்சம் முதல் 3.50 லட்சம் மட்டுமே. மற்றவர்கள் அதாவது சுமார் 26 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்.

அதிக சம்பளம், பொது கல்வி, பொதுசுகாதார முறைகளிலும் கத்தார் வலுவாக திகழ்கிறது. இதுவே அந்நாட்டை உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தூண்டியது. வல்லரசு நாடுகளே வியக்கும் அளவுக்கு உலக கோப்பை போட்டிக்காக பெருந்தொகை செலவிட்டுள்ள கத்தார், புதிய சாதனையை படைத்து இருக்கிறது.

மேலும் செய்திகள்