< Back
சிறப்புக் கட்டுரைகள்
சமூகத்தில் மாற்றங்களை விதைக்கும் இளைஞர் குழு
சிறப்புக் கட்டுரைகள்

சமூகத்தில் மாற்றங்களை விதைக்கும் இளைஞர் குழு

தினத்தந்தி
|
9 Sept 2022 7:54 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இளைஞர் விவேக் குராவ். இவர் தனது கல்லூரிக்கு அருகே உள்ள இந்திரயானி ஆற்றில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டார்.

ஆற்றங்கரையில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தார். தனியொரு ஆளாக இதைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்த விவேக், இப்பணியில் தனது கல்லூரி தோழர்களை உடன் இணைத்துக் கொண்டார்.

சுமார் 60 கல்லூரி மாணவ - மாணவிகள் இந்திரயானி ஆற்றங்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கரையோரங்களில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி ஆற்றைச் சுத்தம் செய்தனர். அன்று மாணவர்களுடன் தொடங்கிய சேவையை இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தினமும் காலையில் எழுந்ததும் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறார். அப்போது கண்ணில் தென்படும் மறுசுழற்சி செய்யக் கூடிய குப்பைகளைச் சேகரிக்கிறார். பிளாஸ்டிக் கழிவுகளில் தயாரிக்கப்படும் கற்களை உருவாக்கி தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்குகிறார்.

இது போன்ற பணிகளுக்காக கடந்த 2017-ம் ஆண்டு சிறப்பு குழுவும் நிறுவப்பட்டது. இந்தக் குழுவின் நிறுவனராக விவேக் குரோவ் செயல்பட்டு வருகிறார். இக்குழுவுடன் இணைந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சேவை பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வரை 200 டன் குப்பைகளை அகற்றியுள்ளனர். இந்த குழுவின் சிறப்பு என்னவென்றால் யாரிடம் இருந்தும் இவர்கள் நிதியுதவி பெறுவது கிடையாது. அனைத்து பணிகளையும் சொந்த செலவிலேயே மேற்கொண்டு வருகிறார்கள்.

பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் சிகரெட் துண்டுகளைச் சாலைகளில் வீசிச் செல்வது வழக்கம். இதைத் தடுக்கும் நோக்கத்தில் பெட்டிக்கடை உள்ளிட்ட பொது இடங்களில் வீசப்படும் சிகரெட் துண்டுகளை சாக்பீஸால் வட்டமிட்டு விழிப்புணர்வு வாசகங்களை எழுதினர்.

கடை முன்பு நூற்றுக்கணக்கான சிகரெட் துண்டுகள் குவிந்ததை கண்ட வணிகர்கள் குப்பை பெட்டிகளை வைக்க தொடங்கினர். புகைபிடிப்பவர்களும் சிகரெட் துண்டுகளைத் தூக்கி சாலைகளில் வீசாமல் பெட்டிக்குள் போடத் தொடங்கினர்.

குப்பைகளில் சானிடரி நாப்கின் அதிகளவில் குவிந்து கிடப்பதை கண்ட விவேக், இது தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்