ஜல்லிக்கட்டு களங்களில் கெத்து காட்டும் புலிக்குளம் காளைகள்
|தமிழர்களின் வேளாண் உற்பத்தியில் புலிக்குளம் மாடுகளின் பங்கு அளவிட முடியாதது. புலிக்குளம் கிடைமாடுகள் இயற்கையாக மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படுவதால் வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் தாங்கும் உடல் திறன் பெற்றவை.
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்"- என்கிறது, குறள்.
ஒரு நாட்டின் ஆட்சிமுறை சரியாக இல்லை என்றால் அந்த நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்காது. பால் வளம் குறைந்து போகும், என்கிறார் வள்ளுவர்.
காலம் காலமாக தமிழர்களின் வாழ்வியலானது கால்நடைகளோடு பிணைக்கப்பட்டது. பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் இதை அறியலாம்.
வீர விளையாட்டுகள்
உழவு தமிழர்களின் தலையாய பணி. தமிழகத்துக்கே உரித்தான நாட்டு இன மாடுகள் உழவுக்கு மிகப்பெரும் பங்காற்றின. தங்கள் உயர்வுக்கு மாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்து அவற்றை நம்முன்னோர் பேணி பாதுகாத்தனர். கால்நடைகளுடன் தங்கள் உறவை வலுப்படுத்த அவற்றுடன் விளையாடும் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) மற்றும் மஞ்சு விரட்டு என வீர விளையாட்டுகளை நடத்தினர்.
நல்ல காளைகளையும், பசுக்களையும் கண்டறியும் வகையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கால்நடை சந்தைகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை, அந்தியூர் கால்நடை சந்தை, மதுரை மாட்டுத்தாவணி என்று பல சந்தைகள் சிறப்பு பெற்றவை. இன்றைக்கு நாட்டு மாடுகள் குறைந்து போனதால் பல சந்தைகளும் களை இழந்துவிட்டன.
முன்பு கால்நடைகள் அதிகம் இருந்ததால், இயற்கை வேளாண்மையும் நன்றாக இருந்தது. நஞ்சற்ற உணவை மக்கள் உண்டனர்.
இனி வருங்காலத்தில் மக்களின் நலம் மேம்பட நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தால் இயற்கை விவசாயம் செய்வது அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள், இயற்கை ஆர்வலர்கள்.
புலிக்குளம் இன மாடுகள்
காளை சிற்றினங்களில் ஒன்றான, புலிக்குளம் இனம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விழாக்களில் களமிறக்கப்படும் காளைகளில் புலிக்குளம் இன காளைகள்தான் அதிகம்.
புலிக்குளம் காளைக்கு உண்டான சிறப்புகள் பற்றி கால்நடை டாக்டர் சரவணன் கூறியதாவது:-
தமிழகத்தில் கண்டறியப்பட்ட நாட்டு மாடு இனங்களில் 'புலிக்குளம் மாடுகள்' தனித்துவமானவை. புலிக்குளம் கிடை மாடுகளின் வரலாறு சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. கி.பி. 4-ம் நூற்றாண்டில் புலிக்குளம் கிடைமாடுகள் குறித்து எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளன.
அந்த குறிப்பில், புலிக்குளம் மாடுகள் தென்தமிழகத்தின் முல்லை நிலப்பகுதியில் வளர்க்கப்பட்ட மாட்டினமாக கூறப்பட்டுள்ளன.
மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் சங்க காலத்தில் காடும், காடு சார்ந்த முல்லை நிலம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
மேய்ச்சல் நிலம் அதிகம் கொண்ட இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள், காளைகளுக்கான சில இனப்பெருக்க உத்தி மூலம் உருவாக்கிய இனம்தான் புலிக்குளம் நாட்டு மாடுகள்.
தமிழர்களின் வேளாண் உற்பத்தியில் புலிக்குளம் மாடுகளின் பங்கு அளவிட முடியாதது. புலிக்குளம் கிடைமாடுகள் இயற்கையாக மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படுவதால் வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் தாங்கும் உடல் திறன் பெற்றவை. இந்த இன மாடுகளுக்கு இன்றைய கலப்பின ஜெர்சி மாடுகளுக்கு வரும் எந்த நோயும் வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்டு மாடுகளை பழக்கி...
புலிக்குளம் மாடுகளின் இயல்புகள் குறித்து மானாமதுரை ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
நாங்கள் பரம்பரையாக புலிக்குளம் மாடுகளை கிடை போட்டு வருகிறோம். முற்காலத்தில் இவை காட்டு மாடுகள். நம் முன்னோர்கள் காட்டில் இருந்து பிடித்து வந்து பழக்கி தொழுவத்தில் கட்டி மேய்ச்சலுக்கு ஓட்டி வீட்டு மாடுகளாக மாற்றினார்கள். இந்த மாடுகள் மேய்ச்சலுக்கு போகும் போது பல்வேறு மூலிகைகளை அடையாளம் கண்டு மேயும். இதனால், இதன் சாணம் மற்றும் கோமியத்தில் கணக்கிலடங்காத உரச்சத்துக்கள் இருக்கும்.
இந்த மாடுகளை நிலத்தில் கிடை போடும் போது அவை இடும் சாணமும், கோமியமும் அந்த நிலத்தின் மண்ணை மிகவும் சத்துள்ளதாக மாற்றி விடுகிறது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ரசாயன உர பயன்பாட்டால் மலடாகி உள்ள விவசாய நிலங்களில் மண்ணை வளப்படுத்த நாட்டு மாடுகளை பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிரின சிற்றினங்கள்
தமிழக நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பது பற்றி மதுரையை சேர்ந்த சீமான் கூறியதாவது:-
மரபு என்பது பற்றிய தெளிவான வரையறையை "நிலமும், பொழுதும்'' திணையியலின் முதல் பொருளாக தொல்காப்பியம் பதிவு செய்கிறது. அதாவது, மரபு என்பது ஒரு நிலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களின் இயற்கையான வாழ்வியல் முறை ஆகும். உதாரணமாக, நமது உணவு, உடை மற்றும் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் என்பது, பிற மாநில மக்களின் கலாசாரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அதாவது, மரபு என்பது ஒரு மக்களிடத்தில் காலம்காலமாக, வழிவழியாக வந்து அமையும் பழக்கம் ஆகும்.
இந்த மரபில் ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்வியலுக்கு உதவும் வகையில் உருவாக்கிய உயிரின சிற்றினங்கள் என்று கூறப்படும் விலங்குகள், பறவைகளும் முக்கியத்துவமானவை. நாட்டு மாடுகள், கோழிகள் என்று தமிழர்களின் வாழ்வோடு இணைந்து வாழ்ந்த மரபின சிற்றினங்கள் அதிகம்.
மரபினங்களின் சிற்றினம் என்பது மக்களின் தேவைகளை வைத்தே அமையும். நம் முன்னோர்கள் தங்களுடன் சிறப்பான மாட்டினங்களை உருவாக்கி வளர்த்தனர். அதே போல், நாட்டு ஆடு, சேவல், கோழி, நாய்கள் என்று பல உயிரினங்கள் இருந்தன. இவை ஒவ்வொன்றும் தமிழர்களின் வாழ்வுக்கு பல்வேறு வகையில் துணையாக அமைந்தன. ஆனால், இன்றைக்கு, பல்வேறு மாற்றங்களால் தமிழ் இனம் பேணிக்காத்து வந்த உயிரின சிற்றினங்கள் அழியும் நிலையில் உள்ளன.
மரபு அழிந்தால்...
இதற்கு உதாரணமாக, நாட்டு நாய்கள் இனத்தை குறிப்பிடலாம். அதில் ஒன்றான கோம்பை நாய் அழிந்து வரும் நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகிவிட்டது. ராமநாதபுரம் பகுதிகளில் கண்டறியப்பட்ட ``மண்டைநாய்'' புலியையே எதிர்க்கும் என்று சொல்வார்கள். தற்போது, அந்த இன நாய்களும் மிகவும் குறைந்துவிட்டன.
அதே போல், நம் முன்னோர்கள் பழக்கப்படுத்திய சேவல் ஒரு பெரிய விலங்கையே எதிர்த்து விரட்டிய பலம் கொண்டதாக இருந்தது. இதுவெல்லாம் சங்க கால நூல்கள் சொல்லும் செய்தி.
நாட்டு மாடுகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பொதுவாக, மரபு அழிந்தால் இனமும் அழிவை சந்திக்கும். எனவே, இதனை தடுக்க நாட்டு மாடுகளை காத்து மரபைக் காக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதற்காகவே, நாட்டு மாடுகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜசுழி
அப்பன் திருப்பதியை சேர்ந்த உதயநிதி என்ற பட்டதாரி கூறியதாவது:-
பாரம்பரியமாகவே வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் கடைப்பிடித்த விதி. நாட்டு மாடுகளை வளர்த்தால் வீட்டில் கெட்டது எதுவும் அணுகாது என்பது மக்களின் நம்பிக்கை. வீடுகளில் வளர்ப்பதற்காக புலிக்குளம் மாட்டு இன கன்றுகளை வாங்கும் போது ராஜசுழி என்று கூறப்படும் முன்நெற்றியில் கொம்புகளுக்கு இடையில் சுழி இருக்கும் கன்றை பார்த்து வாங்குவோம். பொதுவாக, இந்த மாடுகளின் பால், தயிர், மோர், நெய்யில் அரிய பல சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை பருகி வந்தால் உடலுக்கு நோய் வராது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.
தற்போது, 5 புலிக்குளம் மாடுகளை பராமரித்து வருகிறேன். வருங்காலத்தில் காங்கேயம், உம்பளாச்சேரி உள்ளிட்ட மாடுகளை வளர்த்து பெருக்கி இயற்கை விவசாயத்தை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாட்டு மாட்டு இனங்களுக்கு எதிராக இருக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சாணம்
தமிழ்நாட்டில் குறைந்து வரும் புலிக்குளம் மாட்டு இனத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் புலிக்குளம் மாடு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் பணிகள் குறித்து நிலையத்தின் இயக்குனர் டாக்டர் சீனிவாசன் விளக்கினார்.
புலிக்குளம் மாட்டினம் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட உழவு மற்றும் ஜல்லிக்கட்டு இனமாகும். இந்த மாட்டினத்தை 2012-ம் ஆண்டு மத்திய அரசு, பாரம்பரிய நாட்டு மாட்டு இனமாக அங்கீகரித்தது. இந்த இனமாடுகள் மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
இந்த இன மாடுகள் உருவத்தில் குட்டையாக காணப்படும். இந்த மாடுகள் சாணத்திற்காக கிடை போடவும் வளர்க்கப்படுகின்றன.
இயற்கை விவசாயத்திற்கு இந்த மாடுகளின் சாணம் மிகவும் சத்துள்ள உரமாகும். நெல்வயல்களில் அறுவடை முடிந்ததும் விவசாயிகள் இந்த கிடை மாடுகளை அந்த நிலத்தில் தங்க விடுகின்றனர். கிடை இல்லாத காலங்களில் மாடுகள் இரவில் தங்கும் இடங்களில் இருந்து சாணத்தை சேமித்து காய வைத்து பைகளில் அடைத்து விற்கின்றனர்.இதன் மூலம், இந்த மாடுகளை பராமரிப்பவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது, இதன் மகத்துவத்தை உணர்ந்த வெளிநாடுகள் இந்த சாணத்தை வாங்குவதால் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது புலிக்குளம் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 40 புலிக்குளம் கிடேரிகளும், 5 காளைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.புலிக்குளம் மாடுகளின் திறன், உற்பத்தி திறன் ஆகியவற்றை மேம்படுவதற்கான ஆராய்ச்சிகள் இந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேய்ச்சல் கால்நடையால் நிலத்தை வளப்படுத்தலாம்
தொழுவம் கபிலன் கூறும்போது, தமிழ் நிலத்தில் சங்க காலம் தொட்டு தொடர்ந்து இன்றுவரை ஆவின பொருளாதாரம் நாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
ஆங்கிலேய தொழில் புரட்சியின் விளைவால் நாட்டின மாடுகள், ஆடுகள், எருமைகள் வளர்ப்பதை பிற்போக்கு தனமான தொழிலாக கருதியதன் விளைவால் மேய்ச்சல் நிலம், மேய்ச்சலில் ஈடுபடும் நாட்டின கால்நடைகள் குறைந்து வருகிறது.
இந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் மண் வளம் பாதிக்கிறது, காலநிலை மாற்றம், கார்பன் தடம் அதிகரிப்பு, பல்லுயிர் சமநிலையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகிய பல்வேறு விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தை வளப்படுத்த முடியும், பல்லுயிர் பெருக்க சமநிலை ஏற்படுத்த உதவும், கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்ற அறிவியல் கூற்றை தமிழக அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் பணியை தொழுவம் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம் என்றார்.
காங்கேயம் காளை
தமிழக மாட்டினங்களில் புலிக்குளம் போல் மற்றொரு தாய் இனமாக கருதப்படுவதுகாங்கேயம் இன மாடுகள்.
வலுவான உடல் அமைப்பு, பளபளக்கும் கொம்பு, கம்பீரமான நடை ஆகியவை காங்கேயம் இன காளைகளின் தனி அடையாளம். கொங்கு மண்டலத்தில் இருந்த 24 ரக நாட்டு மாடுகளில் தற்போது காங்கேயம் காளை மட்டும் தான் மிஞ்சியுள்ளது. இந்த மாட்டினத்தில் மயிலை, பிள்ளை, செவலை, காரி உள்ளிட்ட உட்பிரிவுகள் உள்ளன.
கொங்கு மண்டலத்தில் பழைய பாரம்பரியத்தை விரும்பும் பல விவசாயிகள் காங்கேயம் காளைகளை இப்போதும் தங்களது வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். அதை அவர்கள் ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். காங்கேயம் காளைகளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தபால் துறை, காங்கேயம் காளை படத்துடன் அஞ்சல் தலையையும் வெளியிட்டு உள்ளது.
உம்பளாச்சேரி மாடு
உம்பளாச்சேரி மாட்டின் பெருமை குறித்து 15-ம் நூற்றாண்டில் காளமேக புலவர் பாடிய பாடல்:-
'முத்து முத்தாக விளைந்தாலும்
உம்பளாச்சேரி மோருக்கு சோறு கிடையாது'
தமிழகம் பெற்ற பெருமைகளில் உம்பளாச்சேரி மாட்டினமும் ஒன்று என்று இந்த மாட்டினத்தை சிறப்பிக்கிறார்கள். டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வருபவை உம்பளாச்சேரி மாட்டினம். உழவுக்கு ஏற்ற, நடுத்தரமான சுறுசுறுப்பான வலிமையான உடலை கொண்டது. அதிக கொழுப்புள்ள மற்றும் மருத்துவ குணமுள்ள பாலை தரும் மாட்டினம் ஆகும். இந்த இனமானது, சதுப்பு நிலங்களில் திறமையாக உழவு செய்ய ஏற்ற இனமாக இருந்து வந்துள்ளது. தஞ்சை டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக திகழ இந்த உம்பளாச்சேரி மாடுகளின் அயராத உழைப்பும், அவற்றின் சாணமும் கோமியமும் ஒரு காரணம்.
ஆலம்பாடி மாடு
இந்த இன மாடுகள் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை ஒட்டிய இடங்களில் தோன்றிய பூர்வீகத்தை கொண்டவையாகவே கூறப்படுகின்றன. ஆலம்பாடி மாட்டினங்கள் அதிக பாரத்தை நீண்ட தூரம் இழுத்து செல்லும் திறன் வாய்ந்தவை. போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் ஆலம்பாடி மாடு பூட்டிய வண்டிகளை மக்கள் பயன்படுத்தி நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டனர். இவை ஒரு மணி நேரத்தில் சுமார் 7 மைல் தூரத்திற்கு நடக்கும் திறன் கொண்டவை. மேடு, பள்ளம், மணற்பாங்கான இடங்களிலும், உயரமான மற்றும் சரிவான இடங்களிலும் சமாளித்து, பாரத்துடன் வண்டியை இழுத்து செல்லும் ஆற்றல் உடையவை.