< Back
சிறப்புக் கட்டுரைகள்
சுடு நீரில் துணி துவைக்கலாமா?
சிறப்புக் கட்டுரைகள்

சுடு நீரில் துணி துவைக்கலாமா?

தினத்தந்தி
|
30 Aug 2022 6:39 PM IST

சுடு நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணி விரைவில் பாதிப்படைவதை தடுக்கலாம்.

துணியில் ஏதேனும் கறை படிந்தால் அதனை நீக்குவதற்கு டிடெர்ஜெண்ட் பயன்படுத்துவார்கள். அதனை சுடு நீரில் ஊறவைத்து அழுத்தி தேய்த்தால் கறை போய்விடும் என்று பலரும் அந்த வழிமுறையை பின்பற்றுகிறார்கள். அப்படி சுடு நீரை பயன்படுத்தி கறைகளை போக்கும்போது துணி பளிச்சென்று காட்சி அளிக்கும். அந்த துணியை அணிந்தால் இறுக்கமாக இருக்கும். உடனே உடம்பு குண்டாகி விட்டதாக பலரும் கருதுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. துணிக்கு சுடுநீரை பயன்படுத்தும்போது சுருங்கி போய்விடும். மேலும் சுடு நீரை தொடர்ந்து பயன்படுத்தி துணி துவைத்தால் நிறம் மங்கி போய்விடும். சுடுநீரில் உள்ள வெப்பம் துணியில் உள்ள நிறத்தின் அடர் தன்மையை நீக்கிவிடும். அதனால் துணி பொலிவின்றியும், நிறம் மங்கியும் காட்சி அளிக்கும். சுடு நீரில் அலசும்போது துணி சுருங்குவதோடு அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்து போய்விடும்.

பொதுவாக சோப் போடும்போது துணியில் இருக்கும் அழுக்குகளை போக்குவதற்காக பிரஷ் கொண்டு அழுத்தி தேய்ப்பார்கள். அப்படி சுடுநீரை பயன்படுத்தி துணி துவைக்கும்போது பிரஷ் பயன்படுத்தினால் நூலிழைகள் வலுவிழந்து துணிகள் கிழிந்து போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

உடைகள் வாங்கும் போது அதில் எப்படி துவைக்க வேண்டும் என்ற குறிப்பு இடம் பெற்றிருக்கும். அதனை படித்து பார்த்து அந்த வழிமுறையை பின்பற்றியே துணி துவைக்க வேண்டும். முக்கியமாக சுடு நீரில் ஆடையை துவைக்கலாமா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பருத்தி ஆடைகளை சுடு தண்ணீரில் அலசலாம். ஆனால் எந்த வழிமுறையில் அலச வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். சுடு நீர் பயன்படுத்தி துணியை அலச விரும்பினால் முதலில் துணியின் ஒரு பகுதியை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது துணி சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் மங்க தொடங்கினாலோ சுடுநீர் பயன்படுத்தக்கூடாது.

சுடுநீரில் அலசுவதற்குரிய துணியாக இருந்தாலும் 10 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் சுடுநீரில் வைத்திருந்தால் எந்த துணியானாலும் சுருங்கத்தொடங்கிவிடும்.

சுடு நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணி விரைவில் பாதிப்படைவதை தடுக்கலாம். ஆடைகளை நீண்ட நாட்கள் பயன்படுத்த விரும்பினால் சுடுநீரில் அலசுவதை தவிர்ப்பதுதான் நல்லது. கறைகளை போக்க சுடு நீர் பயன்படுத்துவதற்கு பதிலாக எலுமிச்சை, பேக்கிங் சோடா, வினிகர் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம்.

மேலும் செய்திகள்