முதுகுவலியை தவிர்க்க மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
|பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நல பிரச்சினைகளில் முதுகுவலி தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது. ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
சில சமயங்களில் முதுகுவலி தானாகவே சரியாகிவிடும். ஆனால் அடிக்கடி முதுகுவலியால் அவதிப்பட்டால் அலட்சியம் கொள்ளக் கூடாது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. முதுகுவலியை தவிர்க்க மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு...
1. நீண்ட நேரம் உட்காருவதை தவிருங்கள்:
அலுவலக வேலை பார்க்கும் பெண்கள் அன்றைய நாளின் பெரும்பகுதியை ஒரே நிலையில் அமர்ந்தபடியே செலவிடுகிறார்கள். அப்படி உட்கார்ந்திருப்பது முதுகு வலியை உண்டாக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சிறிதளவு நேரமாவது எழுந்து நடமாட வேண்டும். மீண்டும் ஒரே நிலையில் அமர்வதை தவிர்க்க வேண்டும். பெரிய அளவில் உடல் அசைவு இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது முதுகு தசைகளை பலவீனப்படுத்திவிடும்.
2. மெத்தையை மாற்றுங்கள்:
தூங்குவதற்கு சவுகரியமாக மெத்தை அமைந்திருக்க வேண்டும். கடினமாகவோ, மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது. 10 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மெத்தையை மாற்றிவிட வேண்டும். பொதுவாக மெத்தைகள் முதுகெலும்பு பகுதி வளைந்து கொடுக்கும் வகையிலும், அதன் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. அதன் தன்மையில் இருந்து மெத்தை மாறுபட்டால் முதுகு தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக முதுகு வலி உண்டாகலாம்.
3. நன்றாக தூங்குங்கள்:
மெத்தை சமச்சீரற்ற நிலையிலோ, மேடு பள்ளமாகவோ இருந்தால் உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அது தூக்கத்தை பாதிக்கும். இரவில் சவுகரியமாக படுக்கமுடியாமல் அடிக்கடி எழுவது முதுகுவலியை உண்டாக்கிவிடும்.
4. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்:
உடல் எடைக்கும், முதுகுவலிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. உடல் எடையை சீராக பராமரிப்பது முதுகுவலியை தடுக்க உதவும். அதிக உடல் எடையுடன் இருப்பது முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உடல் எடையை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
5. மோசமான தோரணையை தவிருங்கள்:
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காரும் பட்சத்தில் உடல் தோரணையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏெனனில் மோசமான உடல் தோரணை காரணமாக முதுகுத்தண்டு, இடுப்பு போன்ற பகுதிகளில் அழுத்தம் ஏற்படும். நாளடைவில் அந்த பகுதியில் இருக்கும் தசைகள் தளர்வடைந்து முதுகுவலியை ஏற்படுத்தும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் உடலுக்கு அசைவு கொடுங்கள். சரியான உடல் தோரணையை பராமரியுங்கள்.
6. புகைப்பிடிப்பதை தவிருங்கள்:
புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும், முதுகுத்தண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பிடிப்பதால் முதுகுவலி ஏற்படலாம். ஏனெனில் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து விடும். புதிய எலும்புகளின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
7. உடற்பயிற்சி செய்யுங்கள்:
உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்று பவர்கள் அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தவறான உடல் அசைவை கையாள்வது முதுகு வலிக்கு வழிவகுக்கும். அதிக எடையை தூக்குவது, மோசமான தோரணையில் உடற் பயிற்சி செய்வது முதுகு வலி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
8. ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு:
கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உட்கொள்ளவில்லை என்றால், முதுகுவலி அபாயம் அதிகரிக்கக் கூடும்.
9. ஹை ஹீல்ஸ் அணிவதை தவிருங்கள்:
நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது பெண்களுக்கு முதுகு மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். அவை கால்கள் மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தத்தை தரும். ஹை ஹீல்ஸ் அணிவது நாகரிகமாக தெரியலாம். ஆனால் அடிக்கடி அணிவது ஆரோக்கியமானது அல்ல.
10. அதிக எடையை சுமக்காதீர்கள்:
தோளில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும்.