பொங்கு தமிழரும் பொங்கல் விழாவும்!
|தமிழர்கள் பெருமிதமாகக் கருதும் பொங்கல் விழா தொன்மைக்காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அனைவரையும் உள்ளத்தால் ஒருங்கிணைக்கும் பண்பாட்டு சின்னம் பொங்கல் விழா.
பொங்கல் விழாவின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்-
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை"
என்று புகழாரம் சூட்டப்பட்ட தமிழ்நாடு இது.
எட்டுத்தொகை நூலான பரிபாடல் இலக்கியத்திலும் இது போற்றப்படுகிறது.
முடிமன்னர்கள் மூவேந்தர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் எண்ணற்ற சிற்றரசு நாடுகளும் இருந்தன. அனைத்தையும் உள்ளடக்கி ஒரே நிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.
"தமிழினம்" என்று சொல்லும்போதே அது தமிழ் மொழிக்குள் தம்மை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொண்ட இனம் என்பது புலனாகும். செழுமையான பண்பாட்டு நெறிமுறைகளையும், கலாசார பெருமைகளையும், கண்ணியங்களையும், வாழ்க்கை முறைகளையும், புலமைகளையும், கலைத்திறன்களையும் கட்டமைத்து உலக அரங்கில் தடம்பதித்து முன்னேற்றமாக வாழும் இனம் இது. இன்றளவிலும் தமிழுக்கும், பண்பாட்டு அடையாளங்களுக்கும் இன்னல் வருகிறதென்றால், எல்லோரும் ஒன்று திரண்டு எழுச்சி கொண்டு எதிர்க்கத் துணிந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே.
இந்தியா முழுவதும் இனம் பல தோன்றி வாழ்ந்து இருந்தாலும், அறிவிலும், ஆற்றலிலும், கல்வி-கேள்விகளிலும், வாழ்வியல் ஆதாரங்களிலும், வளங்களிலும், வீரத்திலும், காதல் வாழ்விலும், இல்லற மேன்மைகளிலும், கொடையிலும், கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், கனிவிலும், கற்பனைத்திறனிலும், விருந்தோம்பலிலும், விண்ணதிர் புகழிலும், இன்னும் சொல்லாத எண்ணற்ற சிறப்புகளிலும் களம் பரப்பி ஓங்கிய வாழ்க்கையைக் கொண்டது தமிழினம் மட்டுமே.
கிரேக்க, சுமேரிய, எகிப்து பண்பாடுகளுக்கும் முந்தையதாக தமிழர் பண்பாடு கருதப்படுகிறது.
தமிழன் தன் வாழ்க்கை முறையில் மிகத்தெளிவாக இருந்தவன். ஐவகை நிலங்களில், தன் தொழில் மற்றும் வருவாய் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என அவற்றை ஐந்திணைகளாகப் பிரித்தான்.
வயல் மற்றும் வயல் சார்ந்த பகுதியே மருதம்;
காடு மற்றும் காடு சார்ந்த பகுதியே முல்லை;
மலை மற்றும் மலை சார்ந்த பகுதியே குறிஞ்சி;
கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியே நெய்தல்;
மற்றும் பாலை நிலம்.
இந்த நிலங்களில் ஐவகையினர் வாழ்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடியதே வியப்பானது. தமிழர் கொண்டாடிய பொங்கல் விழா மனிதநேயம் மிக்கது. கடல் பகுதியில் மீனவர்கள், தங்கள் பழைய வலைகளை எரித்துவிட்டுப் புதிய வலைகளை மாற்றும் நாளில் போகிப்பண்டிகை கொண்டாடினர். பிற நிலத்தவர்கள் அதில் மகிழ்வோடு பங்கேற்றனர்.
மறுதினம் வயல் சார்ந்த நிலத்தவர்கள் அறுவடை செய்த புத்தரிசியில் பொங்கலிட்டு பெரும்பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அங்கு பிற நிலத்தவர்கள் பங்கேற்று அவர்களுடன் கூடிக்கொண்டாடினர். முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு கரும்பாலும், பூக்களாலும் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர். பிற நிலத்தவர் அதில் பங்கேற்றனர்.
மலை சார்ந்தவர்கள், குன்றுகளில் வாழ்பவர்கள், தேனும் தினையும் இட்டு குன்றுப் பொங்கல் கொண்டாடினர். பிற்பாடு அதுவே 'கண்ணுப் பொங்கல்' என்று திரிந்து, பிறகு 'காணும் பொங்கல்' என்றானது. பாலை சார்ந்த மக்கள் எல்லோரது பண்டிகைகளிலும் கலந்து மகிழ்ந்தனர்.
இதுபோன்ற வாழ்முறை இந்திய மண்ணில் வேறு எங்கிலும் உண்டா?
உலகில் தமிழ் மொழியில் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு. முத்தமிழ் என்பது போல் வேறு மொழி முப்பரிமாணமாய் அழைக்கப்படுவதுண்டா?
சங்கத்தமிழ் என்று நாம் கூறுவதுபோல், வேறு மொழி அழைக்கப்படுவதுண்டா? சங்க இலக்கியங்கள் போல் செழுமை வாய்ந்த பண்டைய இலக்கியங்கள் வேறு மொழிகளில் உண்டா? தான் பேசும் மொழியை அன்னை என்று சொன்னவர்கள் தமிழர்கள் மட்டுமே! உலகினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.