பெருந்தலைவர் என்ற பேராளுமை
|"ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்"என்று ஒரு விழாவில் பேசினார், பெருந்தலைவர் காமராஜர்.
மறுநாள், அதாவது 13-7-1956 அன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், மதிய உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார், அவர்.
எங்கு தெரியுமா?
வயிற்றுக்கு சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் - என்று
பாடிய தீர்க்கதரிசி கவிஞன் பாரதி பிறந்த எட்டயபுரம் மண்ணில், அந்தப் பாரதி படித்த பள்ளிக்கூடத்தில், அந்த முன்னோடித் திட்டம் முதல்முறையாகத் தொடங்கிவைக்கப்பட்டது.
எவ்வளவு பொருத்தம் பாருங்கள்?
வயிற்றுப் பசியை ஆற்றிவிட்டு, கல்வி அறிவை ஊட்டு. பிறகு நாட்டை உயர்த்திக் காட்டு என்று பாரதி எழுதிய அந்தப் 'பாட்டுச் சட்டத்தை' தமிழ்நாட்டில் அப்படியே அடிபிறழாமல் அமல்படுத்தி காட்டியவர் அல்லவா, அந்தப் படிக்காத மேதை!
இன்று கல்வித்துறையில் தமிழகம் எட்டியிருக்கும் வளர்ச்சிக்கு வித்திட்டவர், அவரே.
குலக்கல்வித் திட்டத்தை மூதறிஞர் ராஜாஜி கொண்டுவந்த போது, காங்கிரசில் எதிர்ப்பு வலுக்க, அவர் பதவி விலகவே,1954-ம் ஆண்டு புதிய முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் காமராஜர் முதலில் சிந்தித்தது, ஏழைப் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை தீர்த்து, கல்வி அறிவை எவ்வாறு ஊட்டுவது என்பது பற்றித்தான்.
500 பேர் வசிக்கும் கிராமத்துக்கு ஒரு பள்ளிக்கூடம். பள்ளி இறுதி வகுப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி. இலவச சீருடை போன்ற முன்னோடி திட்டங்களை முன்னெடுத்தார்.
நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றால், சிறந்த ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்தார்.
1955-56 வரவு செலவு திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டத்தை நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். பிறகு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 1961-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அதை விரிவுபடுத்தினார்.
வட்டம், மாவட்டங்கள் தோறும் நூலகங்களை நிறுவினார். பொது நூலகத்திற்கு என்று நாட்டிலேயே முதல் முறையாக சட்டம் இயற்றினார்.
இவ்வாறு தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்துவிட்ட காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளையும் திறந்துவைத்தார்.
'பாய்லர்' என்று சொல்லப்படுகிற ராட்சத கொதிகலன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்துத்தர செக்கோஸ்லோவாக்கியா நாடு முன்வந்தது. அதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார், காமராஜர்.
மத்திய அரசு அதிகாரிகளும், அந்த வெளிநாட்டு நிறுவனத்தினரும் இணைந்து அந்தத் தொழிற்சாலையை தமிழகத்தில் எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பரந்த சமவெளியான இடம், சுத்தமான தண்ணீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்துக்கு ரெயில் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட இடம்தான் அந்தத் தொழிற்சாலைக்குத் தேவை என்று வெளிநாட்டு நிறுவனத்தினர் கூறினர்.
அத்தனை வசதிகளையும் கொண்ட ஓர் இடத்தை தமிழக அதிகாரிகளால் அவர்களுக்குச் சுட்டிக் காட்டமுடியவில்லை. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு, சோர்ந்து போன வெளிநாட்டு நிறுவனத்தினர் தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தகுந்த இடமில்லை என்ற முடிவோடு கிளம்பத் தயாரானார்கள்.
அதை அறிந்த காமராஜர், தமிழக அதிகாரிகளையும், வெளிநாட்டு நிறுவனத்தினரையும் அழைத்து, "எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்தீர்கள்?" என்று விசாரித்தார்.
தமிழக அதிகாரிகள் தாங்கள் அழைத்துச்சென்று காட்டிய இடங்களை பட்டியலிட்டதுடன், வெளிநாட்டு நிறுவனத்தார் எதிர்பார்க்கும் வசதிகள் ஒருசேர அமைந்த இடத்தைக்காட்ட இயலவில்லை என்றனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் தனது காலடி பதிய பயணம் செய்தவராயிற்றே, காமராஜர், ஒரு கணம் சிந்தித்துவிட்டு "திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தை காட்டினீர்களா?" என்று கேட்க, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.
"ஏன்?... இவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே... போய் முதல்ல அந்த இடத்தை காட்டிவிட்டு எங்கிட்ட வாங்க!" என்றார், அந்தப் படிக்காதமேதை.
என்ன ஆச்சரியம்! அங்கே போய் பார்வையிட்ட வெளிநாட்டு நிறுவனத்தாருக்கு, அந்த இடம் பிடித்துப் போய்விட்டது. அது எல்லா வகைகளிலும் தொழிற்சாலை அமைக்கப் பொருத்தமானதாக இருந்தது. அந்த இடமே இறுதியாகத் தேர்வானது. ஏறக்குறைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் மாநில அரசு அதற்காக ஒதுக்கிக் கொடுத்தது. அங்கே புதிய தொழிற்சாலை உருவானது.
ஆரம்பத்தில் "ஹெல்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது.
1-5-1963-ம் ஆண்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் திருச்சி பெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர் தொழில் வளர்ச்சி. தொழில் வளர தடையற்ற மின்சாரம் வேண்டும். இதில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் வழியாகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அனல்மின் நிலையங்களை அமைக்க உதவுவதுதான் 'பெல்' நிறுவனத்தின் முதன்மைப் பணி. 'பெல்' நிறுவனத்தின் பங்களிப்பை எளிய மனிதனின் வார்த்தையில் சொன்னால், நம் வீட்டில் 4 விளக்குகள் எரிந்தால் அதில் 3 விளக்குகள் 'பெல்' நிறுவனத்தின் துணையோடுதான் எரிகின்றன என்பதே. உலக நாடுகளில் தொழில் புரட்சியை ஏற்படுத்தி வந்த 'மின்சாரம்' சென்னைக்கு தாமதமாக 1909-ம் ஆண்டுதான் வந்தது. சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேய அரசு மூன்று மின் திட்டங்களை நிறுவி இருந்தது. மூன்றுமே நீர்மின் திட்டங்களாக இருந்தன. அவைதான் பைக்காரா, மேட்டூர், பாபநாசம்.
காமராஜர் ஆட்சியின் போதுதான் பெரியார், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. கீழ்பவானி, மணிமுத்தாறு, வைகை போன்ற பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. நீர்மின் திட்டங்களை போலவே மின்சார உற்பத்தியில் அனல்மின் திட்டங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டறியப்பட்டு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் அமைந்தது. அது எவ்வாறு அமைந்தது என்பதை வரலாறு எளிதாக மறந்துவிடாது!
கடலூரைச் சேர்ந்தவர் பெருநிலக்கிழார் ஜம்புலிங்க முதலியார். அவருக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது.
கடந்த 1932-33-ம் ஆண்டில் நெய்வேலியில் உள்ள தனது நிலத்தில் விவசாயத்திற்காக அவர், புதிய கிணறு வெட்டினார்.
அப்போது, தண்ணீருடன் கரித்துகள்கள் கலந்து வருவதைக் கண்டார்.
அதை அன்றைய ஆங்கிலேய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார். ஆனால் ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு அவரே தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரை, ஜம்புலிங்கம் முதலியார் அணுகி நிலக்கரி இருப்பது குறித்து விளக்கிச் சொல்ல அவர், அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதன்பிறகு நெய்வேலியைச் சுற்றிலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கே, பெருமளவில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரியவந்தது.
அன்றைய தினம் நிலக்கரி நிறுவனம் தொடங்க ரூ.150 கோடி தேவைப்பட்டதால் அதற்கு நிதி உதவிதர இயலாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இருந்தாலும் காமராஜர் மனம் தளரவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
ஜம்புலிங்கம் முதலியார், நிலக்கரி சுரங்கம் உருவாக தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு தானமாகக் கொடுத்தார். காமராஜருக்கு அது உற்சாகத்தைத் தந்தது. நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அவர் கையில் எடுத்தார்.
மத்திய அரசின் உதவி இல்லாமல் காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசே, நிலக்கரியை வெட்டி எடுக்க முடிவு செய்தது. நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், மின் உற்பத்தியும் செய்யலாம் என்ற உயரிய நோக்குடன் காமராஜர் அந்தப் பணியை முனைப்புடன் தொடங்க உத்தரவிட்டார்.
அதற்குத் தேவையான ராட்சத உபகரணங்கள் ரஷிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் துறைமுகத்தில் இருந்து நெய்வேலிக்கு கொண்டுபோக போதிய வழித்தடம் இல்லை. அதனால் சென்னை துறைமுகத்திலேயே ராட்சத உபகரணங்களைச் சுமந்துகொண்டு கப்பல் ஓராண்டாக நின்றது.
காமராஜர், மத்திய, மாநில பொறியாளர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். சரியான வழித்தடம் அமைத்தால் மட்டுமே உபகரணங்களை கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு காமராஜர், "அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு மட்டும் வழித்தடம் அமைக்காமல், காலம் காலமாக மக்கள் அதைப் பயன்படுத்தும் வகையில் வழித்தடம் அமையவேண்டும்" என்றார்.
உடனடியாக அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடற்கரை ஓரமாக ஒரே மாதத்தில் மண்சாலை அமைக்கப்பட்டது. (அந்தச் சாலைதான் காலத்தால் மறு உருப்பெற்று 'இ.சி.ஆர்.' சாலை என்று இன்றைக்கு அழைக்கப்படுகிறது) அந்த வழியாகத்தான் பல்வேறு வாகனங்களில் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு நெய்வேலியில் நிறுவப்பட்டன.
நெய்வேலியில் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட போது, நீரூற்று காரணமாக சுரங்கம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.
அதன்பிறகு மத்திய அரசு 1956-ம் ஆண்டில் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஓர் அமைப்பை ஏற்படுத்தியது.
நெய்வேலி கிராமத்தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி. ) என பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள சுரங்கத்தை கடந்த 20.5.1957 அன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
என்.எல்.சி. தொடங்கியதோடு காமராஜரின் பணி முடியவில்லை. அவ்வப்போது நெய்வேலிக்கு சென்று சுரங்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்று காமராஜர் எடுத்த பெரும் முயற்சியால் இன்று என்.எல்.சி. ஆலமரமாய் வளர்ந்து, பல கோடி இல்லங்களில் விளக்கு எரிய காரணமாக அமைந்தது.
அது மட்டுமா? சென்னை மாகாணத்தின் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு 5 லட்சம் கிலோ வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணுமின் நிலையத்தை கல்பாக்கத்தில் அமைக்க காமராஜர் முயற்சிகள் மேற்கொண்டார். மத்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, அத்திட்டத்தை பெறுவதில் வெற்றியும் கண்டார். அதன் பயனை தமிழ்நாடு மட்டும் அல்ல; தென் மாநிலங்களே இன்று அனுபவித்து வருகின்றன.
இவ்வாறு கல்வி வளர்ச்சியிலும், தொழில் வளத்திலும் நாட்டை முன்னெடுத்துச் சென்ற காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தில் பேராளுமை முதல்வராக திகழ்ந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 1964-ம் ஆண்டு பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி, புதிய பிரதமராகுவதற்கு உதவினார். சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பிறகு 1966-ம் ஆண்டில் இந்திராகாந்தியை பிரதமர் ஆக்கினார். அகில இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' என அழைக்கப்பட்டார். 2-10-1975 அன்று தனது 78-வது வயதில் இந்த மண்ணைவிட்டு மறைந்தார். ஆனால் மக்கள் மனமெல்லாம் நிறைந்தார்.
வாழ்ந்த காலங்களில் விருதுகளை விரும்பாத, அந்த விருதுப்பட்டி மகாராசனுக்கு இந்திய அரசு 'பாரத ரத்னா' விருதை அளித்து தன்னைக் கவுரவப்படுத்திக் கொண்டது. அவர் பிறந்த ஜூலை மாதம் 15-ம் நாளை (இன்று) கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி மகிழ்கிறது.