< Back
சிறப்புக் கட்டுரைகள்
இது பென்சில் கதை
சிறப்புக் கட்டுரைகள்

இது 'பென்சில்' கதை

தினத்தந்தி
|
24 May 2022 3:46 PM GMT

இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பென்சிலுக்கு, 500 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. பென்சிலின் கூரில் உள்ள பொருளுக்கு ‘கிராபைட்’ என்று பெயர். இது நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் ஆகும்.

கி.பி.16-ம் நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டில் உள்ள பரோடேல் என்ற இடத்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதன் அடிப் பகுதியில் சாம்பல் நிறத்தாலான ஒரு உலோகம் படிந்திருந்தது. அந்த காலகட்டத்தில் அது கிராபைட் என்பதும், அதை எப்படி பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கிராபைட் கொண்டு ஒரு பேப்பரில் குறித்தால், அது கருப்பு நிறத்தில் அடர்த்தியாக இருப்பதை மட்டும் அறிந்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, காகிதங்களில் சுற்றி எழுத பயன்படுத்தினர். வெளி உலகிற்கு விற்பனை செய்யவும் தொடங்கினர். அதன்பிறகுதான் இதற்கு 'பென்சில்' என்ற பெயர் வந்தது. லத்தீன் மொழியில் 'தரமான பிரஷ்' என்பதற்கு 'பென்சிலியம்' என்று பெயர். அதுவே சுருங்கி 'பென்சில்' ஆனது.

சில ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தின் கெஸ்விக் பகுதியைச் சேர்ந்த ஒரு தச்சர், கிராபைட் துண்டுகளுக்கு இருபுறமும் மரக்கட்டையை வைத்து ஒரு பென்சில் போன்ற அமைப்பை உருவாக்கினார். அது பார்ப்பதற்கு செவ்வக வடிவில் இருந்தது. கிராபைட் கரைந்ததும், இருபக்கமும் உள்ள மரக்கட்டைகளை கத்திகொண்டு சீவிவிட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

கிராபைட் ஏற்றுமதியில் இங்கிலாந்து முன்னணி வகித்தது. இந்த நிலையில் 1793-ம் ஆண்டு பிரான்சு நாட்டின் மீது இங்கிலாந்து போர் தொடுத்தது. போரின் காரணமாக பிரான்சுக்கு, இங்கிலாந்து பென்சில் ஏற்றுமதி செய்யவில்லை. இதனால் பிரான்சில் பென்சில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதற்கு தீர்வுகாண விரும்பிய பிரான்சு நாடு, நிக்கோலாஸ் ஜாக் கான்டே என்ற அறிவியல் அறிஞர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அவர்தான், கிராபைட் துண்டுகளை நேரடியாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, கிராபைட் உடன் வெவ்வேறான அளவுகளில் களிமண் கலந்து பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். களிமண் அதிகமாகவும், கிராபைட் குறைவாகவும் கலந்தால் அடர்த்தி குறைவாக எழுதும் பென் சிலையும், குறைந்த அளவு களிமண்ணும், கிராபைட் அதிகமாகவும் கலந்தால் அடர்த்தி அதிகமாக எழுதும் பென்சிலையும் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்தார். அதோடு கிராபைட்டின் இருபக்கமும் மரக்கட்டைகளை ஒட்டி பயன்படுத்துவதற்கு பதிலாக, மரக்கட்டையில் ஒரு துளையிட்டு, அதில் கிராபைட் மற்றும் களிமண் கலவையை கொட்டி, அதனை இன்னொரு மரப்பொருளால் மூடி பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். இதற்கு 1795-ல் காப்புரிமை பெறப்பட்டது.

1800-களுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்பவர், கிராபைட் மற்றும் களிமண்ணை அரைக்க இயந்திரம், மரத்துண்டில் துளையிட கருவி என்று கண்டுபிடித்தார். 1858-க்குப்பிறகு பென்சிலின் அடியில் ரப்பர் இணைக்கப்பட்டது. இப்படி படிப்படியாக முன்னேறித்தான், பென்சில் தற்போதைய நிலையை எட்டியிருக்கிறது. இன்றும் கூட பென்சில் வடிவமைப்பில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அதில் பயன் படுத்தும் கிராபைட் மற்றும் களிமண் கலவை, கான்டேவின் கண்டுபிடிப்புதான்.

மேலும் செய்திகள்