< Back
சிறப்புக் கட்டுரைகள்
பொறுப்பான பஞ்சாயத்து தலைவி
சிறப்புக் கட்டுரைகள்

பொறுப்பான பஞ்சாயத்து தலைவி

தினத்தந்தி
|
25 Sep 2022 4:22 PM GMT

தன்னுடைய நகைகளை அடகு வைத்து கிராமத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்திருக்கிறார், பஞ்சாயத்து தலைவி ஆஷா.

இவர் மத்தியபிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிரி பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். இவரது பஞ்சாயத்துக்குட்பட்ட பக்கத்து கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் திடீரென்று காணாமல் போனான். எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசாரின் உதவியுடன் கிராம மக்கள் தேடினார்கள். இரண்டு நாட்கள் கழித்து ஜல்கான் பகுதியில் அந்த சிறுவன் கண்டு பிடிக்கப்பட்டான்.

சி.சி.டி.வி. கேமரா இருந்திருந்தால், சிறுவனை எளிதாகக் கண்டறிந்திருக்க முடியும் என்று போலீசார் கூறி இருக்கிறார்கள். அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் சி.சி.டி.வி. கேமரா வைக்குமாறும் போலீசார் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். இதையடுத்து தனது பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ஆஷா முடிவு செய்தார். நிர்வாக ரீதியாக பணம் ஒதுக்கி உடனே சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்பதால் தனது நகைகளை அடகு வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை கிராமங்கள் முழுவதும் பொருத்திவிட்டார்.

இது குறித்து பஞ்சாயத்து தலைவி ஆஷா கூறுகையில், "நான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் எனது டிஜிட்டல் கையெழுத்து இன்னும் உருவாக்கப்படவில்லை. இதனால் கேமராவுக்காக பஞ்சாயத்தில் இருந்து பணம் பெற முடியவில்லை. எனது திருமணத்தின்போது பெற்றோர் கொடுத்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றேன். அந்த பணத்தில் சி.சி.டி.வி. கேமரா வாங்கினேன்.

நானும் என் கணவரும் காண்ட்ராக்டர்களாக இருக்கிறோம். எங்கள் சேமிப்பில் இருந்த ரூ.55 ஆயிரத்தையும் கேமரா வாங்குவதற்கு பயன்படுத்தினோம். மொத்தம் ரூ.82 ஆயிரம் செலவானது. பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்க்கும்போது பணம் பெரிய விஷயமல்ல" என்கிறார்.

சொந்த நகையை அடகு வைத்து பஞ்சாயத்துக்காக சி.சி.டி.வி. கேமரா வாங்கிய ஆஷாவுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களிலும் பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்