நல் தீவு
|பூமத்திய ரேகையும், பிரைம் மெரிடியன் ரேகையும் ஜீரோ டிகிரியில் சந்திக்கும் இடத்தைதான் ‘நல் தீவு' என்கிறார்கள்.
ஒரு தீவு. அங்கே தான் ஒவ்வொரு நாளும் ஆயிரம் செல்பிக்களுக்கும் மேலாக எடுக்கப்படுகின்றன. எண்ணற்ற திருமண விழாக்கள் நடக்கின்றன. பல பிரியாவிடைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் மனிதர்கள் வந்து போகிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்கள் கூட பலமுறை அங்கே சென்று வந்திருப்பீர்கள். அதன் பெயர் 'நல் தீவு'. சோகம் என்னவென்றால், அப்படி ஒரு தீவு இந்த உலகத்திலேயே இல்லை.
பூமத்திய ரேகையும், பிரைம் மெரிடியன் ரேகையும் ஜீரோ டிகிரியில் சந்திக்கும் இடத்தைதான் 'நல் தீவு' என்கிறார்கள். இந்த இடம் சரியாக ஆப்பிரிக்காவிற்கு மேற்கில், கினியா வளைகுடாவில், கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வருகிறது. நடுக்கடலான இந்த இடத்தில் இருப்பது வானிலையைக் கண்டறிய உதவும் ஒரு மிதவை மட்டுமே.
சரி, இங்கு மக்கள் செல்கிறார்களா?, செல்பி எடுக்கிறார்களா? என்றால் 'இல்லை' என்றே சொல்லவேண்டும். நீங்கள் 'லோகேஷன்' ஆன் செய்யாமல் பதிவேற்றும் புகைப்படங்களும், தகவல்களும் இங்கே இருந்து நீங்கள் அப்லோட் செய்ததாக தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பிரபலமான ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவது இல்லை. ஒழுங்காக புரோகிராம் செய்யப்படாத மென்பொருளில் நீங்கள் போட்டோ பதிவேற்றும் போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
இணையத்தில் உலாவும் பெரும்பாலான புகைப்படங்களும், தகவல்களும் நல் தீவையே பூர்வீகமாக கொண்டுள்ளன. இந்த நல் தீவில் நிறையப் பேர் சென்று நிஜமாகவே படங்கள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.