கிரிக்கெட் அரங்கில் புது சாதனை..!
|ஆண், பெண் வேறுபாட்டை களைந்து பாலின சமத்துவத்தை பின்பற்றும் நோக்கத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு போட்டிக்காக வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக இனி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டு கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஆண் மற்றும் பெண் வீரர்கள் விளையாட்டு ரீதியாக ஒரே ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்படுவது உலக கிரிக்கெட் அரங்கில் இதுவே முதன் முறையாகும்.
"ஆண்களுக்கு இணையாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பெண் வீராங்கனைகள் ஒரே ஒப்பந்தத்தில் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விளையாட்டு உலகில் மிகப்பெரிய முன்னேற்றம்" என்று நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோபி டிவைன் கூறியிருக்கிறார்.
"இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க உடன்பாட்டை எட்டியதற்காக வீரர்களுக்கும், முக்கிய சங்கங்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் விளையாட்டில் மிக முக்கியமான ஒப்பந்தம். பெண்கள் கிரிக்கெட் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த புதிய மாற்றத்தால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஒப்பந்த எண்ணிக்கை 54-ல் இருந்து 72-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தக்கவைப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்கிறார், நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டேவிட் வைட்.