< Back
சிறப்புக் கட்டுரைகள்
எட்வர்ட் நினோ - குள்ள மனிதரின், பெரிய ஆசை...!
சிறப்புக் கட்டுரைகள்

எட்வர்ட் நினோ - குள்ள மனிதரின், பெரிய ஆசை...!

தினத்தந்தி
|
18 Sept 2022 7:55 PM IST

உலகின் மிகவும் குள்ள மனிதரான கொலம்பியாவின் எட்வர்ட் நினோ, கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.

1986-ம் ஆண்டு பிறந்த அவரது தற்போதைய உயரம் 2 அடி 4 அங்குலம். கடந்த 2010-ம் ஆண்டு 2 அடி 3.6 அங்குலம் உயரம் இருந்தபோதே கின்னஸ் உலக சாதனை படைத்தார். அந்த சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த 2 அடி 2.4 அடி உயரம் கொண்ட ககேந்திர தாபா மகர் முறியடித்தார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி ககேந்திர தாபா 27 வயதில் காலமானார். அதனால் 2 அடி 4.38 அங்குலம் உயரம் கொண்ட எட்வர்ட் மீண்டும் உலகின் குள்ள நபரானார்.

தங்கள் குழந்தை அவனது நண்பர்களைப் போல் வளரவில்லையே என்பதை எட்வர்ட்டின் பெற்றோர் உணர்ந்தனர். மருத்துவ உதவியை நாடியும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. தான் குள்ளமாக இருப்பதைப் பற்றி எட்வர்ட் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். மாடலிங் மற்றும் நடனக்காரராகவும் பணியாற்றினார்.

இசைப் பிரியரான எட்வர்ட் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் வல்லவர். தன் நடனத்தைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்தபோது, அவருக்குப் பெருமிதம் ஏற்பட்டது. இது குறித்து எட்வர்ட், "என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு நடனம் ஒரு கருவியாக இருக்கிறது. என் சிறு உடம்பிலிருந்தும் என்னால் இசை ஒலியை வெளிப்படுத்த முடியும்.

நான் நினைப்பது கிடைப்பதற்கு ஏதும் தடையாக இல்லை. நான் உருவத்தில்தான் சிறியவன், உள்ளத்தில் பெரியவன். நான் யார் என்று உலகுக்குக் காட்ட விரும்புகிறேன். என் புன்சிரிப்பால் இந்த உலகை ஆள விரும்புகிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்