< Back
சிறப்புக் கட்டுரைகள்
இந்தியாவில் புதிய வகை கொரோனா..? புதிதாக உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் கண்டுபிடிப்பு
சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் புதிய வகை கொரோனா..? புதிதாக உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
5 July 2022 2:40 PM IST

கொரோனாவின் புதிய வடிவமான பிஏ.2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் பரவியது. மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஒமைக்ரான் ஆக்கிரமித்தது.

ஒமைக்ரான் வைரஸ் பற்றி இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக இந்தியாவில் 10 நகரங்களில் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் மிக மிக அதிகளவு இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் புதிய வகை ஒமைக்ரான் இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவை தவிர இந்த புதிய வகை வைரஸ் மேலும் 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் வேகம் எந்தளவுக்கு உள்ளது? அது மனிதர்களை தாக்கும்போது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது எவ்வளவு காலம் நீடிக்கும் ஆற்றலுடன் இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிஏ2.75 வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவில்லை என்றும், அது இந்தியாவில் தான் உருவானது என்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், 'கொரோனா வைரசில் பிறழ்வுகள் ஏற்படுவது தற்போது மிக மிக சகஜமான ஒன்றாக உள்ளது. அடிக்கடி கொரோனா வைரஸ் பிறழ்வு வந்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது. இந்த புதிய வகை வைரசால்தான் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறதா? என்பதை யும் உறுதிபடுத்த இயலாது' என்றார்.

இந்திய விஞ்ஞானிகள் புதிய வைரஸ் குறித்த அடுத்தக் கட்ட ஆய்வை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்