< Back
சிறப்புக் கட்டுரைகள்
நாசாவின் நிலவு பயண திட்டம்: நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் தரையிறங்க 13 இடங்கள் தேர்வு - நாசா
சிறப்புக் கட்டுரைகள்

நாசாவின் நிலவு பயண திட்டம்: நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் தரையிறங்க 13 இடங்கள் தேர்வு - நாசா

தினத்தந்தி
|
21 Aug 2022 12:30 PM IST

நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால், அங்கு தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.

சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி. இங்கு மனிதர்கள் கால்பதிக்க வசதியான பகுதிகள் இப்போது கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு 'ஆர்டெமிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.

இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டளவில் முதல் அமெரிக்கப் பெண்ணையும், அடுத்த ஒரு ஆணையும் சந்திரனில் தரையிறக்கும் இலக்கை நாசா நிர்ணயித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் முன்பு மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் இருண்ட பகுதிகளுக்குச் செல்வார்கள்.இது எதிர்காலத்தில் நீண்ட காலம் நிலவில் தங்குவதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும். அங்கு அந்த குழுவினர், மாதிரிகளை சேகரித்து அறிவியல் ஆய்வு நடத்துவார்கள்.

நிலவில் டைட்டானியம் கனிமம் அதிக அளவில் இருக்கிறது. சந்திரயானின் எம்.3 என்ற கருவில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.

நிலவின் தென் துருவத்தில் பனியாக நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நீர் பனியின் ஆழம், விநியோகம் மற்றும் கலவை பற்றிய முக்கியமான தகவல்கள் கிடக்கை வழிவகை செய்யும். நிலவின் நீர் பனி விஞ்ஞான கண்ணோட்டத்தில் வளமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் அதிலிருந்து நாம் உயிர் வாழ மற்றும் எரிபொருளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க முடியும்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டமானது, புதிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு அவர்கள் நீண்ட கால, நிலா காலனியை நிறுவுவார்கள். இந்த காலனி, செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் ஆய்வுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவின் பூமத்திய ரேகை பகுதியில் முதன் முதலாக கால்பதித்தனர்.ஆனால், சந்திர தென் துருவமானது மிகவும் கரடுமுரடான, பள்ளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும்.

நிலவின் தென் துருவத்தில் 13 இடங்களை கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஆர்ட்டெமிஸ்3க்கு பல சாத்தியமான தரையிறங்கும் தளங்கள் உள்ளன.

நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவில் தரையிறங்கியதற்கு பின், முதல் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைத் அனுப்புவதற்கான திட்டத்தில் இது ஒரு மாபெரும் நகர்வாக கருதப்படுகிறது. நிலவின் இந்த பகுதிகளில் சில, 6.5-நாள் காலம் முழுவதும் சூரிய ஒளியைத் தொடர்ந்து பெறும் பகுதிகளாகும்.

ஆர்ட்டெமிஸ்3 இல் முதன்முதலாக பெண் ஒருவர் நிலவுக்கு செல்கிறார். நிலவிற்கு ஆர்டெமி-I ஐ அறிமுகப்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ஆர்ட்டெமி-I என்பது, ஓரியன் விண்கலத்தை சந்திரனுக்கு அப்பால் கொண்டு சென்று திரும்பும் ஒரு ஆளில்லாத மாதிரி திட்டமாகும். ஆகஸ்ட் 29ம் தேதி ஆர்டெமி-I விண்ணில் பாய்கிறது.

மேலும் செய்திகள்