< Back
சிறப்புக் கட்டுரைகள்
மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு
சிறப்புக் கட்டுரைகள்

மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

தினத்தந்தி
|
17 July 2022 4:52 PM IST

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மும்பை, பெங்களூரு போன்ற நகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை உள்ளது. சில சமயங்களில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இப்படி மழைக்காலத்தில் தண்ணீரை வீணாக்கிவிட்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடும் நிலை நிலவுகிறது.

டிரம்மில் துளைகள் இடப்பட்டிருக்கும் காட்சி

இதனை தவிர்க்கும் நோக்கத்தில் மழை நீரை சேமிப்பது பற்றிய விழிப்புணர்வு விதைக்கப்பட்டு வருகிறது. வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி மழை நீரை சேமிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசும் அறிவுறுத்தி வருகிறது. அப்படி உருவாக்கப்படும் கட்டமைப்புகள் நாளடைவில் சிதிலமடைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் பழுது பார்ப்பதற்கு பலரும் முன் வருவதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் எளிய முறையில் மழை நீர் சேமிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார், சுபாஜித் முகர்ஜி. மும்பையை சேர்ந்த இவர் 'மழை மனிதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான லிட்டர் மழை நீர் வடிகால்கள் வழியே வீணாக வெளியேற்றப்படுவதை பார்த்து வேதனை அடைந்தவர் குறைந்த செலவில் மழை நீர் சேமிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டார். இறுதியில் மும்பை ஐ.ஐ.டி என்ஜினீயர்களின் உதவியுடன் மழை நீர் சேமிப்பு உபகரணத்தை உருவாக்கி விட்டார். தண்ணீர் நிரப்பும் பிளாஸ்டிக் டிரம், பி.வி.சி. பைப்புகள், கூழாங்கற்கள் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்றவைதான் அவர் பயன்படுத்தும் பொருட்களாகும். முதலில் வீட்டின் வெளிப் புறத்தில் பிளாஸ்டிக் டிரம் மூழ்கும் அளவுக்கு பள்ளம் தோண்டு கிறார்.

பிளாஸ்டிக் டிரம்மின் பக்கவாட்டு பகுதி முழுவதும் ஆங்காங்கே துளைகள் போட்டுக்கொள்கிறார். பின்பு டிரம்மின் அடிப்பகுதி மேல் நோக்கி இருக்கும் நிலையில் பள்ளத்துக்குள் இறக்குகிறார். டிரம்பின் பக்கவாட்டு பகுதியில் சற்று பெரிய துளை போட்டுவிட்டு அதனுள் மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை வெளிக்கொண்டு வரும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் குழாயை இணைக்கிறார்.

பின்பு டிரம்மை சுற்றி கூழாங்கற்கள், ஜல்லி கற்கள் போன்ற வற்றை நிரப்புகிறார். இறுதியில் டிரம்மை சுற்றி மண்ணை நிரப்பிவிடுகிறார். மழை பெய்யும் காலங்களில் மொட்டை மாடியில் தேங்கும் நீர் நேராக குழாய் வழியாக டிரம்மிற்குள் சென்றடைந்து நிலத்தடிக்குள் சென்றுவிடுகிறது. இந்த மழை நீர் கட்டமைப்பு சிதிலமடைவதற்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவு. அதனால் பராமரிப்பதற்கு அதிக செலவும் ஆகாது. சுமார் 2,500 ரூபாய்க்குள் மழை நீர் கட்டமைப்பை உருவாகி விடுகிறார்.

சுபாஜித் முகர்ஜியின் இந்த மழை நீர் கட்டமைப்பு பள்ளிகள், வணிக நிறுவனங்கள், பூங்காக்கள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், பொது பயன்பாட்டு இடங்கள் என ஏராளமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. குளங்கள், ஏரிகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் போன்ற அருகிலுள்ள பிற நீர்நிலைகளில் நிலத்தடி நீர் மட்டத்தை தக்கவைப்பதற்கு உதவுகின்றன.

மேலும் செய்திகள்