< Back
சிறப்புக் கட்டுரைகள்
போலீசார் நடத்திய சைக்கிள் பேரணியில் சாதனை
சிறப்புக் கட்டுரைகள்

போலீசார் நடத்திய சைக்கிள் பேரணியில் சாதனை

தினத்தந்தி
|
26 Jun 2022 9:13 PM IST

சைக்கிள் விழிப்புணர்வை தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமின்றி காவல் துறையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக மும்பை போலீசார் மேற்கொண்ட சைக்கிள் பேரணி சாதனை நிகழ்வாக பதிவாகி இருக்கிறது.

போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுவை கட்டுப்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் உடல்-மன நலன் குறித்த விழிப்புணர்வை விதைக்கவும் தன்னார்வ நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன. தினமும் குறைந்த பட்சம் சில நிமிட தூரங்கள் சைக்கிள் சவாரி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார்கள். அதனால் பலரும் சைக்கிள் சவாரி மீது நாட்டம் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

இத்தகைய விழிப்புணர்வை தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமின்றி காவல் துறையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக மும்பை போலீசார் மேற்கொண்ட சைக்கிள் பேரணி சாதனை நிகழ்வாக பதிவாகி இருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பேரணி பாந்த்ராவில் தொடங்கி வொர்லி கடல் இணைப்பு வழியாக சென்றடைந்தது. இதில் மும்பையின் அனைத்து பகுதியை சேர்ந்த சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர். காலை 5.30 மணிக்கு தொடங்கி 9.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த சைக்கிள் பேரணி நான்கு மணி நேரத்தில் 95.65 கி.மீ தூரத்தை கடந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் மும்பை காவல் துறை 'சண்டேஸ்ட்ரீட்ஸ்' என்ற திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது. அதன்படி நகரின் முக்கிய இடங்களில் செல்லும் சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். அந்த வழியே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஜாக்கிங் செய்யலாம். நடனம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடலாம். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு சைக்கிள் பேரணி நடத்த அழைப்பு விடுத்தனர். போலீசார்-பொதுமக்கள் இடையேயான நல்லுறவு சைக்கிள் பேரணியில் எதிரொலித்திருக்கிறது. சைக்கிள் பேரணியில் அதிகபட்ச மக்கள் பங்கேற்றதாக 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் `ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்புகள் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளன.

இந்த சைக்கிள் பேரணிக்கு மகத்தான வரவேற்பு அளித்த மும்பைவாசிகள் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சைக்கிள் ஓட்டுதல் போன்ற மாற்று போக்குவரத்து முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும். இந்த விஷயத்தில் மும்பைவாசிகள் காவல்துறையினரோடு இணைந்திருக்கிறார்கள் என்பதை இந்த சைக்கிள் பேரணி நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது'' என்றார்.

மேலும் செய்திகள்