< Back
சிறப்புக் கட்டுரைகள்
மட் பிளாக் பசுமை வீடுகளும், சில சந்தேகங்களும்...!
சிறப்புக் கட்டுரைகள்

'மட் பிளாக்' பசுமை வீடுகளும், சில சந்தேகங்களும்...!

தினத்தந்தி
|
22 Oct 2022 1:35 PM IST

ஒருகாலத்தில் கான்கிரீட் வீடுகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போது, கான்கிரீட் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களை செய்து பசுமை வீடுகள் அமைப்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். குறிப்பாக சுடுசெங்கற்களுக்கு பதிலாக சுடாத செங்கற்களை பயன்படுத்தி கட்டப்படும் ‘மட் பிளாக்' பசுமை வீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதுதான் இன்றைய ‘ஹாட் டாக்'.

அது என்ன 'மட் பிளாக்', சுடாத செங்கற்கள் கரைந்துவிடாதா, எப்படி கட்டிடங்கள் வலுவாக நிற்கின்றன? போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் தோன்றக்கூடியதுதான். இவை அனைத்திற்கும், புதுக்கோட்டையை சேர்ந்த தனசேகரன் பதிலளிக்கிறார். கட்டிடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற என்ஜினீயரான இவர், தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் பாரம்பரியமாக கட்டமைக்கப்படும் வீடுகள் பற்றிய பல கள ஆய்வுகளை முன்னெடுத்தவர். அதன் ஒரு அங்கமாக 'மட் பிளாக்' வகை கட்டுமானங்கள் சார்ந்தும் பல ஆராய்ச்சிகளை, சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவர் மட் பிளாக் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

* அது என்ன மட் பிளாக் தொழில்நுட்பம்?

இது கேரள பாரம்பரியம். செங்கற்களை சுடாமல், கம்பிரஸ் முறையில் அழுத்தி எடுப்பார்கள். அதைக்கொண்டே, கட்டிடமும் கட்டுவார்கள். இதுதான் 'இண்டர் லாக்கிங் மட் பிளாக்' தொழில்நுட்பம்.

* இது தமிழகத்திற்கு புதியதா?

இல்லை. வெகு காலமாகவே தமிழகம் மற்றும் கேரளாவில், இந்த முறை பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. கான்கிரீட் முறைகளுக்கு மாற்றாக, இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அந்தவகையில், இதுவும் கொஞ்சம் நவீனமாகி, பசுமை முறையில் வந்திருக்கிறது.

* வேறு என்ன ஸ்பெஷல்?

சாதாரண வீடுகளை காட்டிலும், மட் பிளாக் வீடுகளில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். வெளியில் நல்ல சூடான வெப்பநிலை நிலவினாலும், வீட்டிற்குள் குளிர்ச்சியை தக்கவைத்து கொள்ளும் திறன் இந்த சுவர்களுக்கு உண்டு. அதேபோல வெளியில் கடுங்குளிர் நிலவினாலும், வீட்டிற்குள் ஒரே வெப்பநிலையை நிலவ செய்யும். ஏனெனில் செங்கற்களுக்கு நடுவே சிறு வெற்றிடம் இருப்பதால், அதன்மூலம் வெப்பமும், குளிரும் உள்நுழைவது தடுக்கப்படுகிறது.

* சுடாத செங்கல் கரைந்துவிடாதா?

நிச்சயமாக இல்லை. கேரளாவில், மட் பிளாக் முறையில் கட்டப்பட்ட வீடுகள், 80 வருடங்களுக்கும் மேல் சிறு விரிசல்கூட இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது. ஏன்..? தமிழகத்தின் காரைக்குடி பகுதியில், இந்த வகை கட்டுமானங்கள் உறுதியுடனே நிற்கின்றன. ஆரம்பத்தில் எனக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் இருந்தன. அதனால் மட் பிளாக் குறித்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். மட் பிளாக் கற்களை 10 நாட்களாக தண்ணீரில் ஊறவைத்து சோதித்தேன். அப்போதும், அந்த கற்கள் எந்தவித சேதாரமும் இன்றி, கரைந்து போகாமல் உறுதியாக இருந்தன.

* வழக்கமான செங்கலைவிட, இது விலை உயர்ந்ததா?

இல்லை. விலை குறைவுதான். ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ப இதன் விலையை நிர்ணயிக்கிறார்கள். அப்படி இருந்தும், செங்கற்களைவிட குறைந்த விலையிலேயே விற்கப்படுகின்றன.

* மட் பிளாக் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் நீங்கள் வியந்த விஷயம் எது?

கேரளாவின் பல பகுதிகளில் இருக்கும் அரண்மனைகள், இந்த மட் பிளாக் தொழில்நுட்பத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட உறுதியான தொழில்நுட்பத்தை, சாதாரண கான்கிரீட் தொழில்நுட்பம் மறக்கடித்துவிட்டது என்பதுதான், என்னை வியப்பில் ஆழ்த்தியது.

* எப்படி வித்தியாசப்படுகிறது?

மட் பிளாக் முறை கட்டிடம் கட்டுவது ரொம்ப சுலபம். குறைந்த நாட்களிலேயே கட்டிமுடித்துவிடலாம். ஏனெனில் இந்த முறையில் வீடு கட்டும்போது, சுவர்களுக்கு பூச்சு வேலை தேவைப்படாது. பெயிண்ட்டிங் வேலைகளும் இருக்காது. இதனால் வழக்கமான முறையில் கட்டிடம் கட்டுவதைவிட, இதில் செலவு குறைவு.

மேலும் செய்திகள்