< Back
சிறப்புக் கட்டுரைகள்
நிலவு வடிவ சொகுசு விடுதி
சிறப்புக் கட்டுரைகள்

நிலவு வடிவ சொகுசு விடுதி

தினத்தந்தி
|
30 Sept 2022 9:04 PM IST

‘நிலவு ரெசார்ட்’ துபாய்க்கு புது அடையாளம் சேர்க்க இருக்கிறது. சந்திரன் வடிவ சொகுசு ரிசார்ட்டுக்கு 5 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட நவீன கட்டிடக்கலை நுட்பங்களால் துபாய் உலகையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான கலைவேலைப்பாடுகளுடனும், கண் கவர் அம்சங்களுடனும் பிரமாண்ட கட்டிடங்கள் அங்கு எழும்பிக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் 'நிலவு ரெசார்ட்' துபாய்க்கு புது அடையாளம் சேர்க்க இருக்கிறது. சந்திரனை போன்ற உருவமைப்பில் பிரமாண்டமாக அது கட்டமைக்கப்படுகிறது.

இந்த சந்திரன் வடிவ சொகுசு ரிசார்ட்டுக்கு 5 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 40 ஆயிரம் கோடி. இந்த கட்டிடம் 735 அடி உயரத்தில் நிலவு போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கும். இதன் கட்டுமானம் 48 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திரன் வடிவ மெகா ரிசார்ட்டில் பல நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ஸ்பா மையம் மற்றும் இரவு நேர கேளிக்கை கொண்டாட்டங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் கேசினோக்கள் 23 சதவீதத்தையும், இரவு விடுதிகள் 9 சதவீதத்தையும், உணவகங்கள் 4 சதவீதத்தையும் ஆக்கிரமித்திருக்கும். மொட்டை மாடியின் பெரும்பகுதியை ஆடம்பரமான கேளிக்கை அம்சங்கள் வசப்படுத்திக்கொள்ளும்.

இந்த நிலவு ரெசார்ட் எமிரேட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய்க்கு அருகே உள்ள கத்தாரில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இருப்பினும், கத்தாரில் இடப் பற்றாக்குறை காரணமாக, கால்பந்து ரசிகர்களில் பெரும்பாலானோர் துபாய்க்குத்தான் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப துபாயில் இருந்து கத்தாருக்கு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் துபாயில் ஏராளம் இருப்பதால் கால்பந்து போட்டி துபாயின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, நிலவு ரெசார்ட்டின் வரவும், அதனை பற்றிய எதிர்பார்ப்பும் துபாயின் கட்டிடக்கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்