சுற்றுலாத் தலமாக மாறிய நினைவிடங்கள்
|பண்டைய காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் பலவும் தனித்துவமிக்க கட்டிடக்கலை அம்சங்களை தாங்கியபடி இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.
அவை நினைவுச்சின்னங்களாக மட்டுமின்றி நினைவிடங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.அவை சுற்றுலா தலங்களாக மாறி பலருடைய கவனத்தையும் ஈர்க்கின்றன. அப்படி உலக அளவில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நினைவிடங்கள் சிலவற்றின் பட்டியல் இங்கே...
தாஜ்மஹால், ஆக்ரா:
'இந்தியாவின் பளிங்கு அற்புதம்' என்று வர்ணிக்கப்படும் தாஜ்மஹால், முகலாய கட்டிடக்கலையின் சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாகும். வெள்ளை சலவை கற்களால் பளிச்சென்று மின்னும் அதன் அழகும், வசீகரிக்கும் கட்டிடக்கலையும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கவைக்கிறது.
ஆக்ராவில் மிளிரும் இந்த வெள்ளை மாடத்தின் அழகை பிரபல கவிஞர் ரவிந்திரநாந்த் தாகூர் 'காலத்தின் கன்னத்தில் ஒரு கண்ணீர் துளி' என்று வர்ணித்தார். தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக 1631 முதல் 1648-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஷாஜஹானால் இது கட்டப்பட்டது.
ஹுமாயூன், டெல்லி:
முகலாய பேரரசர் ஹுமாயூன் நினைவிடம் 1570களில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் தோட்ட கல்லறை யாகும். 150-க்கும் மேற்பட்ட முகலாய குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருப்பதால் இந்த இடம் 'முகலாயர்களின் தங்குமிடம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது டெல்லியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
கிசா பிரமிடுகள்:
எகிப்தின் பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பிரமிடுகள் இதுவாகும். அரசாட்சி புரிந்த மன்னர்கள், அரச குடும்பத்தினர் ஆகியோர், தங்கள் மரணத்திற்கு பிறகு கடவுளாக மாறுவார்கள் என்று நம்பினர்.
அதற்கேற்ப கோவில்கள் மற்றும் பிரமிட் கல்லறைகளை அமைத்தனர். மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை வழிநடத்த தேவையான அனைத்தையும் பிரமிடுகளில் நிரப்பினர். அப்படி அமைக்கப்பட்ட மன்னர்களின் பிரமிடுகளின் அருகில் சிறிய பிரமிடுகளும் உருவாக்கப்பட்டன. அவை மன்னர்களின் மனைவிகள், பிரபுக்களின் கல்லறையாக விளங்கின.
டூடுங்காமுன் நினைவிடம்:
எகிப்தின் லூசார் அருகில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ஹோவர்ட் கார்ட்டர் தலைமையிலான குழுவினர் 1922-ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி இதனை கண்டுபிடித்தனர். இது 'கிங் டூட்டின் கல்லறை' என்றும் அழைக்கப்படுகிறது. கி.மு. 1333 முதல் 1323-ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த டூட் மன்னரின் கல்லறையாக அறியப்படுகிறது.
அவர் தனது 19-வது வயதில் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. பாரம்பரிய மரபுகளின்படி அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது அவர் பயன்படுத்திய நகைகள், கலைப்படைப்புகள், பொக்கிஷங்கள் போன்றவையும் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய எகிப்தியர்களின் மகத்துவத்தை உலகறிய செய்யும் வகையில் மம்மி உருவகமாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஷா-இ-ஜிந்தா, உஸ்பெகிஸ்தான்:
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் அமைந்துள்ள பிரபலமான நினைவிடங்களில் இதுவும் ஒன்றாகும். ஷா-இ-ஜிந்தா என்றால் வாழும் ராஜா என்று பொருள். முஹம்மது நபியின் உறவினரான குத்தம் இப்னு அப்பாஸ் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நினைவிடம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமாக விளங்குகிறது.