மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
|மழைக்காலத்தில் பருவ கால நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கும் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்கும் பல்வேறு காய்கறிகள் உள்ளன. அவற்றுள் உலர்ந்த மண்ணில் விளையும் காய்கறிகளை இந்த பருவத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை கோடை காலத்தில்தான் உட்கொள்ள வேண்டும் என்றில்லை. மழைக்காலத்திலும் சாப்பிடக்கூடிய சிறந்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இதை சாலட் வடிவில் பிற காய்கறிகள், பழங்களுடன் கலந்து உட்கொள்ளலாம். சாண்ட்விச்சுகளில் சேர்த்தும் ருசிக்கலாம். வெள்ளரி பல்வேறு சரும நோய்களை எதிர்த்துப் போராடக்கூடியது.
தக்காளி: இதனை காய்கறி பட்டியலில் சேர்த்திருந்தாலும், இது பழ வகையை சேர்ந்தது. தக்காளியை சமையலில் சேர்த்துதான் உட்கொள்ள வேண்டும் என்றில்லை. பல்வேறு வழிகளில் தக்காளியை ருசிக்கலாம். தக்காளி சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
வெண்டைக்காய்: பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது, உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வெண்டைக்காயில் வைட்டமின் கே, போலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இவை ரத்த சோகையை நிர்வகிக்க உதவும் சிறந்த இயற்கை ஊட்டச்சத்துக்களாக கருதப்படுகின்றன. ஹீமோகுளோபின், ரத்த சிவப்பணுக்கள் செயல்பாட்டுக்கு துணைபுரிகின்றன.
சுரைக்காய்: பருவமழை காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இது செரிமானம் சுமுகமாக நடைபெற உதவும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளதால், நோய்த்தொற்றுகளில் இருந்தும் காக்கும்.
பாகற்காய்: பாகற்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவி புரியும். மேலும் மழைக்காலத்தில் புடலங்காய், பீன்ஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளும் தாராளமாக கிடைக்கும். இந்த காய்கறிகளை மழைக்காலத்தில் தவறாமல் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் துணை புரியும்.