< Back
சிறப்புக் கட்டுரைகள்
உறவையும்.. உதவியையும் மறக்கடிக்கும் பணம்
சிறப்புக் கட்டுரைகள்

உறவையும்.. உதவியையும் மறக்கடிக்கும் பணம்

தினத்தந்தி
|
20 Nov 2022 7:34 PM IST

செய்த உதவிக்கு உரிய நேரத்தில் நன்றி தெரிவிக்கும் பண்பை கடைப்பிடிக்காவிட்டால், நட்பில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

கல்லூரியில் படிக்கும் என் மகளுக்கு செமஸ்டர் கட்டணம் செலுத்துவதற்கு இரண்டாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான எனது நண்பரை அணுகினேன். அவரிடம் இரண்டு நாளில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி அந்த தொகையை பெற்றேன். நான் வாக்கு கொடுத்தபடியே பணத்தை திருப்பி கொடுப்பதற்கு நண்பரின் வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டில் இல்லை. அவரது மகன், ''அப்பா ஊருக்குச்‌ சென்றிருக்கிறார்'' என சொல்ல, அவரிடம் பணத்தை ஒப்படைத்தேன். ''அப்பாவிடம் தெரிவித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு மாதத்திற்கு பின்னரே நண்பரை சந்திக்க நேர்ந்தது. எப்போதும் கலகலப்பாக பேசும் நண்பரின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. பொதுவான உரையாடலுக்கு இடையே அவர் மெதுவாக ''மறந்து போய்ட்டீங்களா...?'' என்றார். நான் குழப்பத்துடன்‌ ''எதைச் சொல்கிறீர்கள்?'' என கேட்க, இரண்டாயிரம் பணம் வாங்கினீர்களே...! என்றார்.

அவர் அப்படி கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்பு மகனிடம் பணத்தை கொடுத்து விட்ட விஷயத்தை சொன்னேன். அதனை எதிர்பாராதவர் வருத்தம் தெரிவித்தார். அவரது குரலில் வேதனை வெளிப்பட்டது. எனக்கும் மனதுக்கு கஷ்டமாகிவிட்டது. ''தக்க சமயத்தில் பணம் தந்து உதவியதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் வருந்துவதற்கு ஒன்றுமில்லை'' என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன். அவரும் அரை மனதுடன் விடை பெற்றார். பணம் பெற்றதை மகன் சொல்ல மறந்ததால், நண்பருக்கு ஒரு மாதமாக என்னை பற்றிய நல்ல அபிப்பிராயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருக்கும்.

அதற்கு நானும் ஒரு காரணம். மகனிடம் பணம் கொடுத்த உடன் நண்பரை கைபேசியில் தொடர்பு கொண்டு உதவிக்கு நன்றி தெரிவித்து விட்டு நயமாக மகனிடம் பணம் கொடுத்து விட்டதையும் சொல்லிஇருக்க வேண்டும். செய்த உதவிக்கு உரிய நேரத்தில் நன்றி தெரிவிக்கும் பண்பை கடைப்பிடிக்காவிட்டால், நட்பில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவர்களிடம் மீண்டும் பழையபடி சுமுக உறவையும், உதவியையும் எதிர்பார்ப்பதில் அர்த்தமுமில்லை.

-ம.விருதுராஜா, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி.

மேலும் செய்திகள்