< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறுதானியம் விதைக்கும் நவீன எந்திரம்
சிறப்புக் கட்டுரைகள்

சிறுதானியம் விதைக்கும் நவீன எந்திரம்

தினத்தந்தி
|
19 March 2023 6:34 PM IST

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தட்சணாமூர்த்தி டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். தனது நவீன சிறுதானிய விதைப்பு எந்திரம் கண்டுபிடித்ததை குறித்து தட்சணாமூர்த்தி நம்முடன் பகிர்ந்து கொண்டது...

ஐக்கிய நாடுகள் சபையில் 2021-ம் ஆண்டு இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கும் இந்த காலகட்டத்தில் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை இந்தியா செய்து வருகிறது. இதில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்களை சுலபமாக விதைப்பதற்கு ஏதுவான எந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். தனது நவீன சிறுதானிய விதைப்பு எந்திரம் கண்டுபிடித்ததை குறித்து தட்சணாமூர்த்தி நம்முடன் பகிர்ந்து கொண்டது...

''என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி இடும்பன்காடு. பெற்றோர்: சிங்கார வேலு-பூங்கொடி. இருவரும் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தம்பி செந்தில்குமார், மேட்டூர் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறான்.

நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து இருந்தாலும், விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு. நான் கற்ற கல்வியைக் கொண்டு தந்தையின் விவசாய பணிக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். அப்போது என்னுடைய தந்தை ''விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறி விட்டது. அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் வரவுக்கு மீறி செலவாகிறது'' என்று அடிக்கடி வருத்தப்படுவதை கேட்டிருக்கிறேன். மேலும் எங்கள் பகுதியில் மழை குறைந்து வறட்சி நிலவுவதால் சிறுதானியங்கள் உற்பத்தியை நாங்கள் அதிகமாக நம்பி இருக்கிறோம். ஏனெனில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் மகசூல் தரக்கூடியவை. வறட்சியான இடத்திலும் வளரக்கூடியவை. ஆனால் அதனை விதைக்கவோ, நிலத்தை பண்படுத்தவோ பெருமளவு பணம் செலவாகிறது. இவை அனைத்திற்கும் தீர்வு காண முடியுமா.. என்று சிந்தித்தேன்'' என்பவர், பழைய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சிறுதானியம் விதைக்கும் எந்திரத்தை உருவாக்க திட்டமிட்டார்.

அதை அவரே விளக்குகிறார்...

''என்னுடைய வீட்டில் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது. அதனை பயன்படுத்தி நவீன எந்திரம் ஒன்றை உருவாக்கலாமா என்ற முயற்சியில் ஈடுபட்டேன். அந்த எந்திரத்தை சிறுதானிய விதைப்புக்கு பயன்படுத்த விரும்பினேன். ஆனால் நான் நினைத்த அளவில் அந்த திட்டம் கைகூடவில்லை. பல மாதங்களாக பல்வேறு கட்ட சோதனைகளை சந்தித்தேன். ஆனாலும் அப்படி ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை. அதன்படி என்னுடைய கனவு எந்திரம் நிஜத்தில் உருவானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்றவரிடம், எப்படி பழைய மோட்டார் சைக்கிள் விதைப்பு எந்திரமாக மாறியது என்ற கேள்வியை கேட்க, டெக்னிக்கலாக பதிலளித்தார்.

''பழைய மோட்டார் சைக்கிளின் பாகங்களை பிரித்து... விதைப்பு கருவி உருவாக்கத்திற்கான பாகங்களை மட்டும் எடுத்துக்கொண்டேன். அதன்படி பழைய மோட்டார் சைக்கிளின் 2 சக்கரங்கள், என்ஜின், பெட்ரோல் டேங்க், காலால் மிதித்து ஸ்டார்ட் செய்யும் ஸ்டாட்டர் இவற்றுடன், தானியங்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக்கால் ஆன டப்பா, தானியங்களை விதைக்க சல்லடை, தானியங்கள் சீராக நிலத்தில் விழும் வகையில் கட்டுப்பாட்டு கருவி, எந்திரத்தின் வேகத்தை கட்டுபடுத்த கருவி, நிலத்தை பண்படுத்த அதாவது உழுவதற்கு சிறிய கலப்பை ஆகியவற்றை பொருத்தி, விதைப்பு மற்றும் விளைநிலத்தை உழுது பண்படுத்தும் இயந்திரத்தை உருவாக்கினேன்'' என்று பெருமிதப்படும் தட்சணாமூர்த்தி, இந்த கருவியை மிக குறைந்த விலையிலேயே உருவாக்கியதாக கூறினார்.

''விதைப்பு எந்திரம் உருவாக்க 6 மாத கால பயிற்சியும், முயற்சியும் தேவைப்பட்டது. பலகட்ட சோதனைகளுக்கு பிறகுதான், எந்திரம் முழு வடிவம் பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கியதால், செலவு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. ரூ.7 ஆயிரம் வரை செலவு செய்தேன். அதுவே பழைய மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் இன்றி, புதிதாக பொருட்களை வாங்கி உருவாக்கியிருந்தாலும், செலவு குறைவுதான். என்னுடைய கணக்குபடி, ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே செலவாகி இருக்கும். இதுகிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் உருவாகக்கூடிய நவீன எந்திரம்தான்'' என்றவர், எந்திரத்தை மட்டுமல்ல, இதன் பயன்பாட்டை மிக எளிமையாக்கி விவசாயிகளுக்கு செலவை குறைத்திருக்கிறார். அதன் காரணமாய், அக்கம் பக்கத்து ஊர் விவசாயிகளின் பாராட்டுகள் இவரது செவிகளை குளிர்வித்துக்கொண்டே இருக்கின்றன.

''பொதுவாக சிறுதானியங்கள் விதைக்கும்போது ஒருவர் முன்னால் விதைகளை விதைத்தபடி செல்வார். பின்னால் டிராக்டர் மூலம் ஒருவர் உழுது கொண்டே செல்வார். ஆனால் இந்த எந்திரத்தை ஒருவர் மட்டும் இயக்கினால் போதும். விதைகளை அதுவே விதைத்து, உழுதுவிடும்.

டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் தானியங்கள் விதைக்க சுமார் ஒரு மணி நேரமாகும். அதற்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இந்த விதைப்பு எந்திரத்தில் ஒன்று அல்லது 2 லிட்டர் பெட்ரோல் (ரூ.200 வரை மட்டுமே) ஊற்றினாலே போதும். டிராக்டர் விதைப்பு போலவே, இதுவும் 1 மணி நேரம் முதல் 1½ மணி நேரத்துக்குள் பணிகளை மிக நேர்த்தியாக முடித்துவிடும். குறைந்த செலவில் சிறுதானிய விதைப்பு பணிகளை செய்வதுடன், விதைப்புக்கு முன்னதாக நிலத்தை பண்படுத்தவும் இந்த கருவியை பயன்படுத்தலாம்'' என்றவர், ''இந்த எந்திரத்தை இயக்குவது எப்படி?'' என்பதற்கும் பதில் கொடுத்தார்.

''விதைப்பு எந்திரத்தில் முதலில் டேங்கில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்பு தானியங்கள் சேகரிக்கும் டப்பாவில் தானியங்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். எந்திரத்தை ஸ்டார்ட் செய்து விட்டு எந்த வேகத்தில் இயக்க வேண்டுமோ அந்த வேகத்தில் அதனை இயக்கலாம். அதற்காக பிரத்யேகமான கருவி ஒன்று வலது கைப்பிடி அருகில் அமைக்கப்பட்டுள்ளது. எந்திரம் இயங்க தொடங்கியவுடன் விதைகள் சீராக விழும் வகையில் உள்ளது. பின்னால் கலப்பை உழுது கொண்டே செல்லும். இந்த எந்திரம் விதைகளை விதைப்பது பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது'' என்று தன்னுடைய படைப்பை, ரசித்து பேசுபவர், இதுபோல பல பயனுள்ள கருவிகளை உருவாக்குவதில் ஆர்வமாய் இருக்கிறார்.

''தண்ணீரில் செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் மின்சாரத்தை 'ஷாக்' அடிக்காமல் பயன்படுத்தும் யுக்திகளையும் ஆராய்ந்து வருகிறேன். மேலும் எங்கள் பகுதியில் கால்சியம் கற்கள் அதிக அளவு கிடைக்கிறது. அந்த கற்களை சில வேதிமுறைகளுக்கு உட்படுத்தினால் அதன் மூலம் என்னால் சமையல் எரிவாயு தயாரிக்க முடியும். அதற்கான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

தற்போது விதைப்பு கருவியை என்னுடைய விவசாய நிலத்தில் பயன்படுத்தி வருகிறேன். என்னதான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தாலும் அதனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல, நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. அதனை திரட்டும் வழிமுறைகள் எனக்கு தெரியவில்லை. அரசாங்கம் மற்றும் தனியார் அமைப்புகளின் வழிகாட்டுதல்கள் கிடைத்தால், என்னுடைய கண்டுபிடிப்புகள் பலருக்கும் உதவியாக இருக்கும்" என்று பொறுப்பாக பேசினார்.

இந்திய அரசு 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக முன்னெடுத்து செல்லும் இந்த வேளையில் தட்சணாமூர்த்தியின் இந்த சிறுதானியங்கள் விதைக்கும் எந்திரம் வேளாண்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பொதுவாக சிறுதானியங்கள் விதைக்கும்போது ஒருவர் முன்னால் விதைகளை விதைத்தபடி செல்வார். பின்னால் டிராக்டர் மூலம் ஒருவர் உழுது கொண்டே செல்வார். ஆனால் இந்த எந்திரத்தை ஒருவர் மட்டும் இயக்கினால் போதும். விதைகளை அதுவே விதைத்து, உழுதுவிடும்.

மேலும் செய்திகள்