< Back
சிறப்புக் கட்டுரைகள்
அட்டையில் உருவான ராணுவ தளவாடங்கள்
சிறப்புக் கட்டுரைகள்

அட்டையில் உருவான 'ராணுவ தளவாடங்கள்'

தினத்தந்தி
|
16 Sep 2022 9:26 AM GMT

பார்ப்பதை, காகித அட்டை சிற்பங்களாக மாற்றுவதில் ஆனந்தராஜ் கைதேர்ந்தவர். இதுவரை நிறைய தத்ரூப சிற்பங்களை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக ராணுவ தளவாடங்களை அச்சு அசலாக செய்து அசத்துகிறார்.

பீரங்கி வாகனம், ஏவுகணை வாகனம், போர்க்கப்பல், போர் விமானம் என இவரது கைவண்ணத்தில், பலவிதமான ராணுவ தளவாடங்கள் உயிர்பெற்றுள்ளன. அவை கம்பீரமாக அணிவகுத்து, இவரின் கலைவண்ணத்தை பறைசாற்றுகின்றன.

காகிதத்தில் 'குட்டி ராணுவம்' உருவாக்கி இருக்கும் ஆனந்தராஜிடம் பேசினோம். அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

''புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருக்கும் நமணசமுத்திரம் குறிச்சிப்பட்டியில் பிறந்து வளர்ந்தேன். அங்கிருக்கும் அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தேன். பிறகு மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தேன். என்னுடைய பெற்றோர் விவசாய பின்னணி கொண்டவர்கள். மழை நீரையும், கால்வாய் பாசன வரப்பு நீரையுமே நம்பி விவசாயம் செய்பவர்கள். அதனால் குடும்ப சூழல் காரணமாக துறை சார்ந்த வேலைகளும், துறை சாராத வேலைகளும் செய்து வருகிறேன்'' என்றவர், காகிதத்தில் கலைப்பொருட்கள் செய்ய தொடங்கியது பற்றி பகிர்ந்து கொண்டார்.

''6-ம் வகுப்பில் இருந்தே காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து வருகிறேன். பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளுக்காக செய்ய தொடங்கி, பிறகு எனக்கு பிடித்த உருவங்களை எல்லாம் தத்ரூப காகித மாதிரியாக செய்யப் பழகினேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது பொக்லைன் எனப்படும் மணல் அள்ளும் வண்டியை, தத்ரூபமாக உருவாக்கினேன். ஆசிரியர்கள், சகமாணவர்கள் என அனைவரும் வியந்து பாராட்டினர்.

இந்நிலையில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, சென்னையில் பணியாற்றியபோதுதான், வாகன மாதிரிகளை உருவாக்க தொடங்கினேன். நான் பணியாற்றிய அலுவலகத்திற்காக, முதன்முதலில் வால்வு மற்றும் சிலிண்டர்களை கொண்டு கதவு திறக்கும் மாதிரியிலான வாகனத்தை உருவாக்கி கொடுத்தேன். அதற்கு ஊக்கத்தொகையுடன் கூடிய உயர்வு அலுவலகத்தில் கிடைத்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே முடங் கியபோதுதான் புதுமையான ராணுவ தளவாடங்களை அச்சு அசலாக உருவாக்கினேன்'' என்றவருக்கு சிறுவயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் ஆசை இருந்துள்ளது. அது நிறைவேறாத பட்சத்தில்தான், ராணுவ தளவாடங்களை காகித அட்டையில் அச்சு அசலாக செய்து தன்னுடைய ராணுவ ஆசையை நியாயப்படுத்துகிறார்.

''ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றமுடியவில்லை என்றாலும் என்னுடைய கை வண்ணத்திலேயே ஒரு குட்டி ராணுவப்படையை உருவாக்கி இருக்கிறேன். தரைப்படையினர் பயன்படுத்தும் ஏவுகணை வாகனம், பீரங்கி, மெஷின்கன் போன்றவற்றோடு கடற்படையினர் பயன்படுத்தும் பேட்டில்ஷிப், டிஸ்டிராயர், விமானம் தாங்கிய போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றையும் காகிதத்தில் அச்சு அசலாக உருவாக்கி இருக்கிறேன்.

அதேபோல விமானப்படையில் இருக்கும் தேஜாஸ் போர் விமானம், எப் 22 ராப்டர், எப்.ஏ.37 கேலன், சீ ஹாக் ஹெலிகாப்டர், பி2 பாமர், சி-17, எப்-35, சூக்கி 37 போன்றவற்றையும் தத்ரூபமாக உருவாக்கி உள்ளேன். இதில் சிலவற்றுக்கு மின் மோட்டார் இணைப்பு செய்திருப்பதால், சில ஹெலிகாப்டர்களின் இறக்கை சுற்றும். இவற்றுடன் பி.எஸ்.எல்.வி.ராக்கெட், நீராவி ரெயில் என்ஜின், பொக்லைன், ஜே.சி.பி., லாரி போன்ற கனரக வாகன மாதிரியையும் உருவாக்கி உள்ளேன்'' என்பவர், பல சிரமங்களுக்கு இடையில்தான், கலை படைப்புகளை உருவாக்குகிறார்.

''போர் விமானம் ஒன்று செய்ய திட்டமிட்டால், அது சம்பந்தமான புகைப்படங்களை சேகரித்து கொள்வேன். குறிப்பாக போர் விமானத்தின் முன், பின், பக்கவாட்டு வடிவங்களை குறித்து, அதற்கேற்ப பாகங்களை உருவாக்குவேன். காகிதத்தை நீட்டி, மடக்கி, சுருட்டி, கிழித்து என பல வேலைகளுக்கு பிறகுதான் தத்ரூப போர் விமானம் தயாராகும். ஒரு மாதிரி வாகனத்தை உருவாக்க, குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும். இந்திய விமானப்படையின் சமீபத்திய சேர்க்கையான ரபேல் போர் விமானங்களையும் உருவாக்கி வருகிறேன். அவை வெகு விரைவில் தயாராகிவிடும்'' என்று உற்சாகமாக பேசும் ஆனந்த், தற்போது காகிதத்தில் செய்திருக்கும் ராணுவ தளவாடங்களை, இயங்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன்படி போர்க்கப்பல் நீரில் இயங்கும்படியும், போர் விமானங்கள் ஆகாயத்தில் பறக்கும் வகையில் முயன்று வருகிறார். இவரது கைவண்ணத்தையும், ஆர்வத்தையும் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கள், முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, ராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு அரசு நிகழ்வில், இவரது படைப்புகள் மொத்தமும் காட்சிப்படுத்தப்பட்டு, கவுரவிக்கப்பட்டன. விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

''உருவ மாதிரிகளை தத்ரூபமாக எப்படி செய்வது என சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுகிறேன். பள்ளி குழந்தைகளுக்கும் இதனை கற்றுக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏதேனும் ஒரு பள்ளியில் இதனைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவோ அல்லது ராணுவத்திற்கு தயாரிக்கும் பொருட்களை டிசைனிங் செய்யும் பணி வாய்ப்போ கிடைத்தால் நன்றாக இருக்கும். அதற்காக முயற்சித்து கொண்டிருக்கிறேன்'' என்ற கருத்தோடு விடைபெற்றார்.

மேலும் செய்திகள்