உயரமாக வளர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்
|கானா நாட்டில் வசிக்கும் சுலேமனா அப்துல் சமேட் என்ற நபரின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குழந்தை பருவம் தொடங்கி டீன் ஏஜ் காலகட்டம் வரை உடல் வளர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அதன் பிறகு உயரமாக வளர்வது தடைபடும். ஆனால் கானா நாட்டில் வசிக்கும் சுலேமனா அப்துல் சமேட் என்ற நபரின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 29 வயதாகும் இவரின் தோற்றத்தை பார்ப்பவர்கள் பிரமித்துப் போகிறார்கள்.
இவர் வசிக்கும் கிராமத்தில் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளின் உயரத்தை விட இவருடைய உயரம் அதிகம். அசுர வளர்ச்சி கொண்டிருப்பதால் இவரது உயரத்தை அளவிடுவதற்கு மருத்துவர்களே குழம்பி போய் உள்ளார்கள். எந்த அளவிற்கு என்றால், அவர் 9 அடி வரை வளர்ந்து விட்டார் என்ற செய்தி பரவும் அளவிற்கு. அது காட்டுத்தீயாக பரவி உலகின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. உண்மையிலேயே 9 அடி வளர்ந்து விட்டாரா? என்று தீவிரமாக விசாரிக்க தொடங்கியபோதுதான் அவரை பற்றிய விஷயங்கள் மருத்துவர்களுக்கு புரிய தொடங்கி உள்ளது.
சுலேமனா, மார்பன் சிண்ட்ரோம் எனப்படும் பரம்பரை நோய் கோளாறுக்கு ஆளாகி இருக்கிறார். இது இணைப்பு திசுக்களை பாதிக்கும் தன்மை கொண்டது. இதயம், கண்கள், ரத்த நாளங்கள் மற்றும் எலும்புகளையும் பாதிக்கும்.
இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட கைகள் மற்றும் கால்களை கொண்டிருப்பார்கள். கை, கால்களின் விரல்களும் நீண்டிருக்கும். அதனால் உயரமாகவும், மெல்லிய தோற்றத்துடனும் காட்சியளிப்பார்கள். சுலேமனா, 22 வயதில் தனது உடல் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்ததாக கூறுகிறார்.
அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுலேமனாவின் உயரத்தை அளப்பதற்கு முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த அளவிடும் கருவி, அவரது உயரத்தை விட குறைவாக இருந்ததால் சுவரின் அருகே நிற்க வைப்பது, மின் கம்பத்தில் சாய்ந்து நிற்க வைப்பது என பல வழிகளில் முயற்சித்திருக்கிறார்கள்.
இறுதியில் 7 அடி 4 அங்குலம் உயரம் கொண்டிருப்பதாக உறுதி செய்துள்ளார்கள். ஆனால், ''அவர்கள் என்னை அளவிடும் விதம் எல்லாம் சரியானது என்று என்னால் கூற முடியாது'' என்கிறார், சுலேமனா.
மருத்துவர்களின் அளவீடுபடி சுலேமனா, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள உலகின் உயரமான மனிதரான துருக்கியின் சுல்தான் கோசனை விட ஒரு அடி உயரம் குறைவாக இருக்கிறார். தன்னுடைய வளர்ச்சி நிற்கவில்லை என்கிறார், சுலேமனா. "நான் இன்னும் உயரமாக வளர்ந்து வருகிறேன். ஒரு நாள் நானும் அந்த உயரத்திற்கு வரலாம்" என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
சுலேமனாவின் வளர்ச்சியைத் தடுக்க மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். தான் இன்னும் உயரமாக வளர்ந்து கொண்டே இருப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.