அதிவேக ஆம்புலன்ஸ் சேவை
|பிரதீப் சங்க் தமது இணை நிறுவனர்களான ஆன்டைன் பார்சன், ஜோஸ் லியோன் ஆகியோருடன் இணைந்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியிருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மளிகைப் பொருட்கள் வீடுகளுக்கு 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுகின்றன. ஆனால், உயிர்காக்க அவசியமான ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடங்கள் கூட ஆகி விடுகிறது.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, பிரதீப் சங்க் தமது இணை நிறுவனர்களான ஆன்டைன் பார்சன், ஜோஸ் லியோன் ஆகியோருடன் இணைந்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியிருக்கிறார்.
ஒருவர் அழைத்தால் 15 நிமிடங்களில் அவரது வீட்டுக்கே சென்றடையும் வகையில் தங்கள் சேவையை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அவசர அழைப்பு வந்த 6 நொடிகளுக்குள் தங்கள் ஆம்புலன்ஸ் சாலையில் பறக்கத் தொடங்கி விடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பிரதீப் சிங் கூறும்போது, ''தற்போது ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூரு, கோயம்புத்தூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் 50 மருத்துவமனைகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்.
அடுத்த 18 மாதங்களில் 15 நகரங்களில் 500 மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றுவதே எங்கள் குறிக்கோள். அழைத்தவுடன் சென்றடையும் நேரத்தை 8 நிமிடமாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நோயாளிகளின் உறவினர்கள் நேரடியாகவோ அல்லது காப்பீடு நிறுவனம், மருத்துவர் அல்லது மருத்துவமனை மூலமோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
இவர்களது துரித சேவை பல உயிர்களை காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை. இந்தியா முழுவதும் இந்த சேவை விரிவடைந்தால், சுகாதாரத்துறையில் நாம் அடுத்த மைல்கல்லை எட்டி விடுவோம் என்பதில் சந்தேகமில்லை.