மாற்றுத்திறனாளி நண்பருக்காக 'மினி ஜீப்' தயாரித்த மெக்கானிக் பாப்பர் சிங்
|பஞ்சாப்பை சேர்ந்த மெக்கானிக் பாப்பர் சிங், தனது மாற்றுத்திறனாளி நண்பருக்காக மினி ஜீப்பை உருவாக்கி இருக்கிறார். அவரது கண்டுபிடிப்புக்கு மாற்றுத்திறனாளிகளிடம் மட்டுமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நான்கு சக்கர வாகனம் ஓட்டத்தெரியாவிட்டாலும் கூட இந்த மினி ஜீப்பை சுலபமாக ஓட்டி விடலாம் என்பது தான் அதற்கு காரணம். 66 வயதாகும் பாப்பர் சிங், மான்சா பகுதியில் சிறிய மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். ஸ்கூட்டர் ஓட்டும் செயல்முறையின் அடிப்படையிலேயே மினி ஜீப்பை உருவாக்கி இருக்கிறார்.
''சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி நண்பர் சக்தி என்னிடம் ஜீப் ஓட்ட விரும்புவதாக கூறினார். ஆனால் அவரது உடல் அமைப்பு ஜீப் ஓட்டுவதற்கு ஈடு கொடுக்காது என்பதால் மினி வாகனம் ஒன்றை உருவாக்க சொன்னார். அவர் ஸ்கூட்டர் ஓட்டுவதில் அனுபவம் வாய்ந்தவர். அதனால் இரு சக்கர வாகனத்தை போலவே செயல்படும் ஜீப்பை ஏன் வடிவமைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஒருமுறை உறவினர் ஒருவர் அவரது பெரிய ஜீப்பில் எங்கள் வீட்டுக்கு வந்தார். அதன் வடிவமைப்பு என்னை கவர்ந்தது.
அதுபோலவே சிறிய உருவம் கொண்ட ஜீப்பை வடிவமைக்க தீர்மானித்தேன். அதற்கு என் நண்பர் சக்தி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் என் பணி சுலபமானது. கடையில் எனது வேலையை முடித்த பிறகு ஜீப் வடிவமைப்பு பணியை தொடங்குவேன். சாதாரண ஜீப்பின் மாதிரியை நகலெடுத்து அதில் சிறிய வடிவத்தை உருவாக்கினேன்'' என்கிறார்.
ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் 100 சி.சி. மோட்டார் என்ஜினையும், மாருதி காரின் ஸ்டீயரிங்கையும் பொருத்தி ஜீப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறுகிறார்.
ஸ்கூட்டர் சவாரியை போல் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்தில், வேறு எந்த சிக்கலான உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஆட்டோமேட்டிக் என்ஜினில் இயங்கும் இந்த மினி ஜீப் நான்கு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சுமார் 70 ஆயிரம் ரூபாய் செலவானது என்றும் சொல்கிறார். ஜீப்பை வெற்றிகரமாக வடிவமைத்த பிறகுதான் சக்தியை போலவே நான்கு சக்கர வாகனத்தை மிக எளிதாக இயக்க ஆசைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது பாப்பருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மினி ஜீப் வடிவமைப்பில் மும்முரமாக ஈடுபட தொடங்கி இருக்கிறார். இதுவரை 15 ஜீப்புகளை உருவாக்கி உள்ளார். ''இந்த ஜீப், கியர்கள் இல்லாத வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முக்கிய அமைப்புகளும் ஸ்டீயரிங் அருகிலேயே பொருத்தப்பட்டுள்ளது. எனது நண்பரைப் போல, உடல் ஊனமுற்ற அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்" என்கிறார்
பாப்பர் சிங்கின் ஜீப்பை வாங்கியவர்களில் ஒருவரான ஜஸ்பீர் சிங் கூறுகையில், "நான் இரண்டு கால்கள் செயல்படாத நிலையில் பிறந்தேன். நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது பற்றி என் வாழ்நாளில் நினைத்து பார்த்ததில்லை. இந்த மினி ஜீப் பற்றி உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். பாப்பர் சிங் வடிவமைத்த ஜீப் மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஓட்டுவதற்கு மிகவும் வசதியானது. விலையும் மலிவானது'' என்கிறார்.
பஞ்சாப் மட்டுமின்றி ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாப்பர் சிங்க்கு பாராட்டும், ஆர்டரும் கிடைத்துள்ளது.
"சொந்தமாக ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது சிறுவயது கனவாக இருந்தபோதிலும், அது நிறை வேறியபோது எனக்கு 56 வயது. எனது கண்டுபிடிப்பு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை, முன்பை விட சற்று எளிதாக்குகிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவது ஆத்ம திருப்தியை தருகிறது'' என்கிறார்.