மாருதி பலேனோ சி.என்.ஜி
|மாருதி நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சி.என்.ஜி.யில் இயங்கும் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் பலேனோ மாடலை அறிமுகம் செய்கிறது மாருதி சுஸுகி.
இதில் ஜெடா வேரியன்ட் மட்டும் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலாக வந்துள்ளது. இது பெட்ரோல் மாடலை விட ரூ.96 ஆயிரம் அதிகமாகும். இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.12.24 லட்சம். இதில் மேனுவல் கியர் உள்ள மாடல் (டெல்டா எம்.டி.) விலை சுமார் ரூ.8.29 லட்சம் முதல் சுமார் ரூ.9.21 லட்சம் வரை உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் வசதி இரு வகைகளில் செயல்படும் விதமாக உள்ளது. இது வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
இது சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 30.61 கி.மீ. தூரம் ஓடி, எரிபொருள் சிக்கனமான வாகனம் என்பதை நிரூபித்துள்ளது. பிரீமியம் மாடலில் பாதுகாப்புக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. 7 அங்குல ஸ்மார்ட்பிளே தொடு திரை யுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. குரல் வழிக் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடியது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளம் உடையது. எல்.இ.டி. புரொஜெக்டர் முகப்பு விளக்கு, மடக்கும் வகையிலான பின்புற இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
இதில் 1.2 லிட்டர் டியூயல் ஜெட் என்ஜின் உள்ளது. இது 77.49 பி.எஸ். திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,300 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 5 கியர்களைக் கொண்டது.