மாருதி எஸ்-பிரஸ்ஸோ சி.என்.ஜி. அறிமுகம்
|கார் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் திகழும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்-பிரஸ்ஸோ மாடல் மிகவும் பிரபலமானதாகும்.
சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் இந்த மாடலில் தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் காரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5.90 லட்சம். சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ நிலைப்படுத்தப்பட்ட எரிவாயுவுக்கு 32.73 கி.மீ. தூரம் ஓடி எரிபொருள் சிக்கனமான வாகனம் என்ற பெயரைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு வேரியன்ட்கள் எல்.எக்ஸ்.ஐ.எஸ். மற்றும் வி.எக்ஸ்.ஐ.எஸ் என்று வந்துள்ளன. இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.6.10 லட்சம். நிறுவனத்திலேயே சி.என்.ஜி. டேங்க் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் 10-வது மாடல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் 56 பி.எஸ். திறனை 5,300 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,400 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும் வகையில் 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது.
எஸ்-பிரஸ்ஸோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 2.26 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே இதில் சி.என்.ஜி. பொருத்தப்பட்ட காரை இந் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.