அலையாத்தி என்ற அதிசயம்..!
|அலையாத்தி காடுகளின் சிறப்புத்தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும்.
அலையாத்தி காடுகள், கடலின் முகத் துவாரங்களில் அமைந்திருப்பவை. கடலில் இருந்து வரும் அலையின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்த மரங்களுக்கு இருப்பதால் இவை, 'அலையாத்தி மரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் 'மாங்குரோவ் காடுகள்' என்று அழைப்பார்கள். இந்தியாவில் சுமார் 4,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு, அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவற்றில் 66 சதவீதம், மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளிலும், குஜராத் காடுகளிலும் உள்ளன. தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் அலையாத்தி காடுகள் உள்ளன.
ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள். இவை அதிக வெப்பம் அல்லது அதிக மழை இருக்கும் இடங்களில் மட்டுமே வளரும். மேலும் கடலோர முகத்துவாரப் பகுதிகள், உப்பங்கழிகள், அலையாத்தி மரங்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில், சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிக்குச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல், காகண்டல், தில்லை, திப்பாரத்தை, உமிரி என்ற மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன.
அலையாத்தி காடுகளின் சிறப்புத் தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும். ஏனெனில் சதுப்பு நிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதற்காக வேர்கள் பூமிக்கு வெளியே தலை நீட்டுகின்றன. அந்த வேர்கள்தான், ஆக்சிஜனை உள்ளிழுத்து, மரங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உதவி புரிகின்றன. அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான், அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.
2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னர்தான், அலையாத்தி காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச் செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு.