தானாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம்
|நீர் வீணாவதைக் குறைப்பதும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதுமே எங்கள் நோக்கம். இந்த இயந்திரம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார் இளம் தம்பதியான தீபிகா மற்றும் சந்தோஷ்.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த தம்பதி அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் மகன் வீட்டில் தங்க உள்ளனர். இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், வீட்டுத் தோட்டத்தை எப்படிப் பராமரிப்பது, தண்ணீர் எப்படி ஊற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்கான தீர்வு அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் தம்பதியான தீபிகா மற்றும் சந்தோஷ் செட்டியிடம் இருந்தது.
ஐ.டி. துறையில் பணியாற்றிய இருவரும், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் இல்லாதபோது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.
சரியான நேரத்துக்கு இந்த இயந்திரம் தண்ணீர் பாய்ச்சுவதுடன், தண்ணீர் பாய்ச்சிய விவரத்தை செல்போனுக்கு குறுந்தகவலாக தெரிவித்துவிடும்.
இந்த இயந்திரத்தை உருவாக்க இருவரும் கடந்த ஓராண்டாக கடுமையாக உழைத்து வந்தனர். நகரத்தில் வசிக்கும் வேலைக்குச் செல்லும் தம்பதியினர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச நேரம் இல்லாதபோது இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் சந்தோஷ்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஐ.டி. துறை பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தேன். கடந்த 15 ஆண்டுகளாக பல நாடுகளுக்குப் பயணித்துள்ளேன். ஐ.டி. துறை சரிவராது என்று முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினேன்.
கொரோனாவின்போது நான் மட்டும் தனியாக அயர்லாந்தில் இருந்தேன். என் மனைவி தீபிகாவும் ஒரு வயது மகள் அத்விதியும் மங்களூருவில் இருந்தனர். குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தீபிகா ஏற்கனவே ஐ.டி. வேலையை விட்டுவிட்டார்.
நீர் வீணாவதைக் குறைப்பதும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதுமே எங்கள் நோக்கம். இந்த இயந்திரம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும் அல்கலைன் பேட்டரியில் இந்த இயந்திரம் இயங்குகிறது. பேட்டரி சார்ஜ் இறங்கி விட்டாலோ, மேல்நிலைத் தொட்டி காலியாக இருந்தாலோ அது குறித்த தகவலை பயனரின் செல்போனுக்கு இந்த இயந்திரம் தெரிவித்து விடும்.
இந்த இயந்திரத்தை தொலைவிலிருந்தே செல்போன் மூலம் ஆன் அல்லது ஆப் செய்யலாம். வானிலை முறைகளின் அடிப்படையில் இதைச் செய்யக்கூடிய அல்காரிதம்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்றார்.
இது குறித்து தீபிகா, "செடிகள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. வெளியே செல்லும் நேரத்தில் தானாக தண்ணீர் பாய்ச்சும் இந்த இயந்திரத்தை உருவாக்க பெரும் முயற்சி எடுத்தோம். இந்த இயந்திரத்தை மழையிலும் சூரிய வெளிச்சத்திலும் வைக்கலாம்.
இந்த இயந்திரத்துக்குள் தண்ணீரும் காற்றும் புகாமல் பார்த்துக் கொள்வது சவாலாக இருந்தது. சர்க்யூட் வடிவமைப்பில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இறுதியாக நாங்கள் வெற்றிகரமாக தானாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரத்தை உருவாக்கினோம்" என்றார்.