மழலையர் கல்வியில் மாற்றம் புகுத்தும் மங்கை
|மழலை செல்வங்களின் கற்றல் முறையை மேம்படுத்துவதையே, தன்னுடைய குறிக்கோளாக கொண்டிருக்கிறார், ஷோபா மணிகண்டன். சென்னையை சேர்ந்தவரான இவர், அதற்காக கடந்த 20 வருடங்களாக பல ஆராய்ச்சிகளையும், களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மழலை செல்வங்களுடன் நெருங்கி பழகி, கல்வி சம்பந்தமான விஷயங்களில் அவர்கள் எதை விரும்புகிறார்கள், கல்வி முறையை எப்படி எல்லாம் எதிர்பார்க்கிறார்கள், கல்வி கற்பிக்கும் முறையை எப்படி மேம்படுத்தலாம் என்பதை கடந்த 20 வருடங்களாக ஆராய்ந்து, ஆவணப்படுத்தி வருகிறார். மழலைகளுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் ஷோபாவை சந்தித்து பேசினோம். மழலையர் கல்வி தொடர்பான பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
* எப்போது தொடங்கியது இந்த பயணம்?
கல்லூரி படிக்கும்போதே, பொது சேவையில் ஈடுபடும் ஆசை இருந்தது. அதற்காகவே, சோசியாலஜி படிப்பையும் படித்து முடித்தேன். படிக்கும்போதே, பொது சேவையை முன்னிருத்தி, பல முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். அந்த சமயத்தில், அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு சேவையாற்றும் எண்ணமும் இருந்தது. இருப்பினும், அரசியல் எனக்கு ஒத்துவராது என்பதை வெகுவிரைவாக உணர்ந்துகொண்டு, குழந்தைகள் சம்பந்தமான சேவை ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.
* மழலையர் கல்வி தொடர்பான ஆய்வுகளை தொடங்கியது எப்போது?
நான் சோசியாலஜி படிக்கும்போதே, பெண் குழந்தை பாதுகாப்பு, ஆரோக்கியம், பெண்கள் சுய முன்னேற்றம்... போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஆய்வுகளில், என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கூடவே அதே நோக்கத்திற்காக களப்பணியாற்றி வரும் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு களையும் உருவாக்கினேன். ஒருகட்டத்தில், மழலை கல்வி முறையில் இருக்கும் குழப்பங்களுக்கும், அறியப்படாத பிரச்சினைகளுக்கும், தீர்வு காணும் யோசனை வந்தது. அந்தவகையில், என்னுடைய திருமணத்திற்கு பிறகு, 2005-ம் ஆண்டு முதல் இன்று வரை, மழலை கல்வி முறையை ஆராய்ந்து வருகிறேன்.
* மழலை கல்வி முறையை ஆராய்வதற்கும், அதில் மாற்றம் கொண்டுவருவதற்குமான அவசியம் என்ன?
19-ம் நூற்றாண்டில், உருவான கல்வி முறையைத் தான், நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். உலக போர் பதற்றம், குழந்தை தொழிலாளர் முறை... போன்றவற்றில் இருந்து அக்கால குழந்தைகளை மீட்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கிலும்தான் அந்தகால மழலையர் கல்வி முறை கட்டமைக்கப்பட்டது. அது இந்தகாலத்து, குழந்தைகளுக்கு எப்படி பொருந்தும்...?. அதனால்தான், மழலையர் கல்வி முறையில் நவீன காலத்திற்கு தேவையான முன்னேற்றமும், குழந்தைகளின் மனநிலையை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப கல்வி கற்றுக்கொடுக்கும் மாற்றமும் அவசியம் என்கிறோம்.
* இது உலகளாவிய பிரச்சினை. இதற்கு தனியாளாக தீர்வு காணமுடியுமா?
நிச்சயமாக முடியாது. அதனால்தான், இங்கிலாந்தில் இயங்கும் இ.எல்.எஸ்.யு.கே. என்ற மாற்று கல்வி முறையை அடிப்படையாக கொண்ட, உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் கைக்கோர்த்திருக்கிறேன். என்னுடைய நோக்கமும், அவர்களுடைய பணியும் ஒன்றுதான். அதாவது, மழலைகளுக்கு புதுமையான, உற்சாகமான முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம்.
அதை எப்படி சாத்தியமாக்குவது, கல்விமுறையில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குவது, அதை மாதிரி பள்ளிகளில் பரிசோதிப்பது, ஆராய்ச்சி முடிவுகளை ஆவணமாக்குவது... போன்ற பணிகளில்தான், கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன்.
* மழலையர் கல்வி முறையில், எத்தகைய மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறீர்கள்?
இந்தியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா... போன்ற பல்வேறு நாடுகளில் இயங்கும், பலவிதமான பள்ளிகளுக்கு சென்று, அங்கு நடத்தப்படும் மழலையர் பள்ளி வகுப்புகளை கவனித்திருக்கிறோம்.
கூடவே, வகுப்புகளை கவனிக்கும் குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன்படி, 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் மூளை 'கியூரியாசிட்டி' எனப்படும் ஆர்வ மிகுதியினால் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டோம்.
அந்த பருவத்தில், குழந்தைகள் புதிதாக கற்றுக்கொள்ள அதீத ஆர்வமாக இருப்பார்கள். அந்தசமயத்தில், அவர்களை ஒரே இடத்தில் அமரவைத்து, வெறும் 5 பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பது ஏற்புடையது அல்ல. அப்படி நடக்கும்போது, அவர்களின் நியூரோ செல்களின் வளர்ச்சியும் மந்தமாகிறது. அதேசமயம், பழைய கல்வி முறைக்கு மாற்றாக, மொழி அறிவு, எழுத்துப் பயிற்சி, அறிவியல், நடப்பு வாழ்க்கை, உடற்பயிற்சி, உலகம், திறன் அறிவு... என 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், வெவ்வேறான தகவல்களை 15 முதல் 20 நிமிட குறுகிய வகுப்புகளாக கொடுக்கும்போது, அவர்கள் பாடங்களை ஆர்வமாகவும், ஆழமாகவும் கற்றுக்கொள்வதை அறிவியல் பூர்வமாக உணர முடிந்தது. இதுவெறும், கருத்துமட்டுமல்ல. இந்த முயற்சியை, இந்தியா உட்பட நிறைய நாடுகளில் குறிப்பிட்ட மாதிரி பள்ளிகளில் முன்னெடுத்து, அதன்வாயிலாக ஆக்கப்பூர்வமான முடிவுகளையும் பெற்றிருக்கிறோம்.
* இந்த முறையை முயன்று பார்த்திருக்கிறீர்களா?
100 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் கல்வி முறையை ஒரேடியாக மாற்றுவது என்பது முடியாத காரியம். அதேபோல, எங்களது ஆராய்ச்சிகளையும், கருத்துக்களையும் பல வகைகளில், பரிசோதித்து பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஏனெனில் மாற்றம் என்ற பெயரில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சி, அடுத்த 100 வருடங்களுக்காவது நடைமுறையில் இருக்கும். அதனால், இதில் எந்தவிதமான தவறும், நடைமுறை சிக்கல்களும் வந்துவிடக்கூடாது என்பதிலும், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
* தமிழ்நாட்டு பள்ளிகளில், இந்த முறையை நடைமுறைப்படுத்தினீர்களா?
ஆம். 2010-15 வரை பிரத்யேக புராெஜக்ட் மாடலை உருவாக்கி மாதிரி பள்ளிகளிலும், தனியார் பள்ளி களிலும் முயன்று பார்த்தோம். அதற்கு 2019-ம் ஆண்டு திருவண்ணாமலை கலெக்டராக இருந்த கந்தசாமி உறுதுணையாக இருந்தார். அவரது வழிகாட்டுதலின்படி, ஜவ்வாது மலைகளை ஒட்டியிருக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த புதுமையான கல்விமுறை பயிற்சிகளை வழங்கினோம். திட்ட அலுவலர் கந்தனின் முயற்சியினால் 30 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக, தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பயிலும் மழலைகளுக்கு புதுமை கல்வி சில காலம் கற்றுக்கொடுக்கப்பட்டது.
* இப்போது புழக்கத்தில் இருக்கும் மழலையர் கல்வி முறையில், எதை தவிர்க்கவேண்டும் என்கிறீர்கள்?
பாடல் வடிவ பாடங்கள் சிறப்பானதுதான், ஆனால் நம் குழந்தைகள் பயிலும் 'ரிங்கா.... ரிங்கா... ரோசஸ்', 'ஜாக் அண்ட் ஜில்' போன்றவை எல்லாம் மேலை நாடுகளில், தவறான கருத்துகளோடு புரிந்து கொள்ளப்படுகிறது. அந்த பாடல்களை தான், நாம் இங்கு மழலையர் பள்ளிகளில் பயிற்றுவிக்கிறோம். தவறான கருத்துகளை தாங்கியபடிதான் அவை குழந்தைகளிடம் சென்றடைகின்றன. அவர்களும், அதன் உள் அர்த்தம் புரியாமல், கற்கிறார்கள். பாடுகிறார்கள். ரசிக்கிறார்கள்.
* ரைம்ஸ் தவறு என்கிறீர்களா?
இல்லை. தவறான கருத்துகளை கொண்ட ரைம்ஸ் பாடல்களைதான் தவறு என்கிறோம். ரிங்கா... ரிங்கா... ரோசஸ், சில உலக நாடுகளை பொறுத்தவரையில், ஒப்பாரி பாடல். நாம் அதை மகிழ்ச்சி பாடலாக பாடுகிறோம். 19-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பாடலையே, இன்று பயன்படுத்துகிறோம். இதற்கு மாற்றாக, சமீபகால அப்டேட்டுகளுடன், ரைம்ஸ் பாடல்கள் அவசியமாகின்றன. அதற்காகவே இவைகளுக்கு மாற்றாக, தமிழ் மொழியில், நம் தமிழ் கலாசாரம், பழக்க வழக்கம் அடங்கிய ரைம்ஸ் பாடல்களை, மிக கவனமாக உருவாக்கி வருகிறோம். ஏனெனில் எந்தவகையிலும், தவறான கருத்துக்கள் மற்றும் தகவல்கள் மழலைகளை சென்றடையக் கூடாது.
மாற்றம் என்ற பெயரில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சி,
அடுத்த 100 வருடங்களுக்காவது நடைமுறையில் இருக்கும். அதனால், இதில் எந்தவிதமான தவறும், நடைமுறை சிக்கல்களும் வந்துவிடக்கூடாது என்பதிலும், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.