< Back
சிறப்புக் கட்டுரைகள்
விமான கனவை நிறைவேற்றிய வீடு
சிறப்புக் கட்டுரைகள்

விமான கனவை நிறைவேற்றிய வீடு

தினத்தந்தி
|
12 Feb 2023 9:51 PM IST

விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வுடன் அந்த விமான வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கம்போடியா நாட்டைச் சேர்ந்த கிராக் போவ்.

சிறு வயதில் வானில் பறந்து செல்லும் விமானத்தை அண்ணாந்து பார்த்து ஆனந்தத்துடன் குதூகலிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. என்றாவது ஒரு நாள் நாமும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசைக்கனவு குழந்தை பருவத்திலேயே மனதில் பதிந்துவிடும். இந்தக் கனவு இளமை பருவம் வரை நிறைவேறவில்லை என்றால் ஏக்கமும், ஏமாற்றமும் குடிகொள்ளும்.

அத்தகைய சிறு வயது கனவை நனவாக்க முடியாதவர் விமானம் போன்ற வடிவமைப்பில் வீட்டையே கட்டிவிட்டார். விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வுடன் அந்த விமான வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த நபரின் பெயர் கிராக் போவ். 43 வயதாகும் இவர் கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த விமான வீடு இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள் கொண்டது. கிராக் போவ், கட்டுமான தொழிலாளி. அதனால் தனது கற்பனை விமான வீட்டுக்கு சிரமமின்றி முழு வடிவம் கொடுத்துவிட்டார். இவரே அனைத்து கட்டுமான வேலைகளையும் செய்து, தான் விரும்பியபடி விமான வீட்டை வடிவமைத்துவிட்டார்.

''இந்த வீட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஏனெனில் ஒரு உண்மையான விமானம் போலே எனக்கு தெரிகிறது. வீட்டின் உள்ளே செல்லும் போது விமானத்தில் நுழைவது போல் உணர்கிறேன். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த வீட்டைக் கட்டி இருக்கிறேன். எனது சிறுவயது கனவு 40 வயதை கடந்தும் நிறைவேறாமல் போனதால் ஏமாற்றமாக இருந்தது. இனி கனவை நிறைவேற்ற முடியாது என்று கருதியதால் இப்படியொரு வீட்டைக் கட்டி விட்டேன்'' என்று கூறுகிறார்.

இந்த வீட்டு கட்டுமானத்திற்கு கிராக் போவ் சுமார் 20 ஆயிரம் டாலர்கள் அதாவது சுமார் 17 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசலாக விமானம் போலவே தோற்றமளிப்பதால் இந்த வீட்டை தினமும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு செல்கிறார்கள். இந்த வீட்டை கட்டுவதற்கு கிராக் போவ் 30 வருடங்களாக பணம் சேமித்து வந்திருக்கிறார். இந்த வீடு தரையில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போலவே என்ஜின்கள், இறக்கைகள், இருக்கைகள் போன்றவற்றை கான்கிரீட் கட்டுமானம் மூலமே வடிவமைத்திருக்கிறார்.

''எனது கனவை இன்னும் 100 சதவிகிதம் நிறைவேற்றவில்லை. விமானத்தில் பறக்கும் கனவு அப்படியே இருக்கிறது. ஒருநாள் நிச்சயம் விமானத்தில் பறப்பேன்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார். சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவதால் விமான வீட்டின் அருகில் காபி ஷாப் திறக்க திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் விமானத்தில் பயணித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்