கொரோனா ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள்
|3 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அசட்டையாக இருக்கக்கூடாது. சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்படுத்திய தாக்கம் மாதக்கணக்கில் நீடிக்கலாம்.
அவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும் இந்த வைரஸ் நுரையீரல், இதயம் மற்றும் மூளையை சேதப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் நீண்ட கால உடல் நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை சந்திக்க நேரிடும்.
வயதானவர்கள், வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளை எதிர்கொண்டால் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட பின்னரும் சிலர் கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கொரோனாவில் இருந்து குண மடைந்த பின்னரும் எதிர்கொள்ளும் அறிகுறிகள் பற்றியும், அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
சோர்வு:
ஏதேனும் உடல் நல பாதிப்புக்கு ஆளானால் சோர்வு ஏற்படுவது பொதுவானது. அந்த சமயத்தில் சோம்பலும் தலைதூக்கும். உடல் ஆற்றலும் குறைந்து போகும். உடல் இயக்கமும், செயல்படும் திறனும் பாதிப்புக்குள்ளாகும். சிலருக்கு உடல் பலவீனமடைந்து மயக்கம் ஏற்படக்கூடும். கொரோனா தொற்றின் தீவிரத்தை பொறுத்து 3 வாரங்களுக்கு மேலும் இத்தகைய அறிகுறிகள் நீடிக்கலாம்.
மூச்சுத்திணறல்:
கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும் மூச்சுத்திணறல் பிரச்சினை தொடரலாம். வழக்கத்தை விட சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
இருமல்:
கொரோனாவுக்கு பிறகு சிறிது காலம் தொடர்ந்து வறட்டு இருமல் உண்டாகலாம். நாளடைவில் இருமலின் தன்மை அதிகரிக்கலாம். அதிகப்படியான இருமல், எரிச்சல் உணர்வையும், தொண்டையில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். அது இருமலின் தன்மையை மோசமாக்கிவிடும். இருமலை தவிர்க்க சுடுநீர் பருகலாம். நீராவியை முகர்ந்து இருமலின் தன்மையை கட்டுப்படுத்தலாம். எனினும் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
உடல் வலி:
கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்களுக்கு சில காலம் உடல் வலி பிரச்சினை இருக்கும். அது குணமடையாமல் தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது. மூட்டு வலி, மார்பு வலி, தசை வலி அல்லது தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் நோய்களின் பாதிப்பு அதிகமாகிவிடும்.
தூக்கமின்மை:
கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலர் நினைவாற்றல் இழப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவை நீண்ட காலம் நீடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. இல்லாவிட்டால் பல்வேறு பக்கவிளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இதய துடிப்பு:
இதய துடிப்பு அதிகரித்தாலோ, படபடப்பு ஏற்பட்டாலோ உடனே மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் கூட இதய துடிப்பு தற்காலிகமாக அதிகரிக்கலாம். போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. குறிப்பாக காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வாசனை இழப்பு:
கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தால் உணவின் வாசனையையும், சுவையையும் இழக்க நேரிடும். அதிலிருந்து மீண்ட பிறகு வழக்கம்போல் சுவையை உணர முடியும். சில நாட்களுக்கு பிறகும் வாசனை இழப்பு பிரச்சினையை எதிர்கொண்டால் கவனமாக இருக்க வேண்டும்.
தியானம்:
கொரோனா பயம் காரணமாக எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கக்கூடும். அதனால் மனசோர்வை உணரலாம். குடும்பம், எதிர்காலம் பற்றி கவலை நேரிடலாம். தியானத்தின் மூலம் மனச்சோர்வு, பதற்றத்தில் இருந்து விடுபடலாம்.