< Back
சிறப்புக் கட்டுரைகள்
லிப்மன்: பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்..!
சிறப்புக் கட்டுரைகள்

லிப்மன்: பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்..!

தினத்தந்தி
|
24 March 2023 9:30 PM IST

லிப்மன், பெண்டுலம் கடிகாரம் ஒழுங்கற்ற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு கருவியை உருவாக்கினார்.

இன்று செல்போனில் கேமரா என்பது அத்தியாவசியமாகிவிட்டது. ஆனால், புகைப்படக் கலையில் முதன்முதலாக வண்ணம் புகுந்தபோது அது எத்தனை பெரிய அதிசயமாக இருந்திருக்கும். அப்படியொரு அதிசயத்துக்கு ஆணிவேராக இருந்தவர்தான் பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞர் கேபிரியேல் லிப்மன். இந்தக் கண்டுபிடிப்புக்காக 1908-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு தரப்பட்டது.

பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக 1845 ஆகஸ்டு 16-ந் தேதி லக்சம்பர்க்கில் பிறந்தார் லிப்மன். பள்ளி, கல்லூரி பருவத்தில் அவர் சரியாகப் படிக்கவில்லை. அதனால் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தோல்வியைத் தழுவினார். ஆனால், பிற்காலத்தில் லிப்மன், தான் ஆர்வம் காட்டிய துறைகளில் எல்லாம் அனைவரையும் விட சிறந்து விளங்கினார்.

அறிவியல் ஆசிரியருக்கான தேர்வில் அவர் தோல்வியடைந்தாலும், லிப்மனின் திறமை கருதி சார்போன் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராக பணியில் அமர்த்தப்பட்டார். அங்குதான் தனக்கு இயல்பிலேயே ஆர்வம் இருந்த துறையான இயற்பியலோடு அவர் நெருங்கிப் பழகினார்.

ஒரு துளி பாதரசத்தில் கந்தக அமிலத்தை விட்டு, ஒரு மெல்லிய இரும்புக் கம்பியால் பாதரசத்தைத் தொட்டபோது, சிறிய அளவு மின்னோட்டம் ஏற்பட்டு அது சுருங்கி விரிந்தது. இதைக்கொண்டு, லிப்மன் மிக நுட்பமான எலெக்ட்ரோ மீட்டரை உருவாக்கினார். மிக மிக மெல்லிய மின் அதிர்வையும் கண்டறியும் என்பதால், இக்கருவி இதயத் துடிப்பை அளக்கப்பயன்பட்டது. அதுதான் முதல் இ.சி.ஜி. எனலாம்!

அதன்பின் அவர், வண்ண ஒளிப்படங்களை உருவாக்குவது பற்றி தீவிரமாக ஆராய்ந்தார். அதில் ஆரம்பக்கட்டத்தில் பல தோல்விகள் கண்ட பின்னரும், துவளாமல் முயன்றார். கடைசியில் 'ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீட்டு விளைவு முறையில் வண்ணப் படங்களை உருவாக்க முடியும்' என அவர் நிரூபித்தார்.

இது தவிரவும் லிப்மனின் கண்டுபிடிப்புகள் ஏராளம். பெண்டுலம் கடிகாரம் ஒழுங்கற்ற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு கருவியை உருவாக்கினார். வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, தானாகவே அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை வடிவமைத்தார். தந்தி அலைகளைப் பயன்படுத்தி நில நடுக்கத்தைப் பதிவு செய்வதோடு, அது எவ்வாறு பரவிச் செல்கிறது என்பதையும் லிப்மன் கண்டுபிடித்த கருவி பதிவு செய்தது. வானவியலில் கொயலோஸ்டாட் என்ற கருவியைக் கண்டறிந்தார். 1921-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி வட அமெரிக்காவிற்கு ஒரு குழுவினருடன் கப்பலில் பயணம் சென்று, கனடாவில் இருந்து பிரான்ஸ் திரும்பும்போது அவர் மரணமடைந்தார்.

பெண்டுலம் கடிகாரம் ஒழுங்கற்ற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு கருவியை உருவாக்கினார். வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, தானாகவே அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை வடிவமைத்தார்.

மேலும் செய்திகள்