குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள்
|குழந்தை பருவத்திலேயே ஒருசில விஷயங்களை பெற்றோர் குழந்தை களுக்கு வாழ்க்கை பாடமாக போதித்துவிட வேண்டும். அவை அவர்களை நல்வழிப்படுத்தும்.
சமூக பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு வழிகாட்டும். எதிர்காலத்தில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பான நபர்களாகவும் மாற்றும். பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகளிடத்தில் படிப்பை மட்டுமே திணிக்கக்கூடாது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பல குழந்தைகள் தோல்வி பயத்தில் போட்டியில் பங்கேற்பதற்கு தயங்குவார்கள். வெற்றியோ, தோல்வியோ அதை பற்றி கவலைப்படாமல் போட்டியில் ஆர்வமாக பங்கேற்பதற்கு பிள்ளைகளை தயார் படுத்த வேண்டும். அது போட்டி மனப்பான்மையை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கும்.
ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை கட்டாயம் கற்றுக்கொடுக்க வெண்டும். பெற்றோரை பார்த்தே பெரும்பாலான விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் தந்தை முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
பிறரை மதிக்கும் செயலை குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். வயதுக்கு மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
பணத்தின் மதிப்பையும் குழந்தை பருவத்திலேயே உணர்த்திவிட வேண்டும். கடின உழைப்பு மூலமே பணத்தை திரட்ட முடியும் என்பதையும், அதை சிக்கனமாக செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தந்தை போதிக்க வேண்டும்.
நெருக்கடியான வேலைகளை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்கலாம் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில் குழந்தைகளிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அது தயக்கமில்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு அவர்களை தயார்படுத்தும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.
கவலைகள் மகிழ்ச்சியை சிதைப்பதோடு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலை, கோபம் கொள்வதற்கு இடமளிக்காமல் குழந்தைகளிடம் அன்பாக பேசி அதில் இருந்து விரைவாக மீள்வதற்கு வழிகாட்ட வேண்டும். கவலை நிம்மதியை குலைத்துவிடும் என்பதை சிறுவயதிலேயே போதித்து, மகிழ்ச்சியான மன நிலையை தக்க வைக்க பழக்கிவிட வேண்டும்.