< Back
சிறப்புக் கட்டுரைகள்
விவசாயம் காப்போம்...! வளமாக வாழ்வோம்...!
சிறப்புக் கட்டுரைகள்

விவசாயம் காப்போம்...! வளமாக வாழ்வோம்...!

தினத்தந்தி
|
22 July 2022 9:54 PM IST

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயமே விளங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவையான உணவு பொருள்களையாவது உற்பத்தி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

நமது இந்திய திருநாட்டில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் போன்றவை ஆகும். இந்த மூன்றையும் பெறாத மனிதன் அரை மனிதன் ஆகிறான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... எத்தனையோ தொழில்களை செய்து வந்தாலும் உணவு அளிக்கும் உழவு தொழிலே முதன்மை பெறுகிறது. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயமே விளங்குகிறது. 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்றினால் அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டது. நகரத்தில் இருப்பவர்கள் அத்தியாவசிய பொருளுக்காக அதனை தேடி, ஓடி அலைந்தனர். ஆனால் கிராமத்து மக்களோ இயல்பான வாழ்க்கையை இனிதே வாழ்ந்தனர். தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கொல்லையில் விளைந்த கீரை வகைகள், வயலில் விளைந்த கை குத்தல் அரிசி, வீட்டில் வளர்க்கப்பட்ட பசுமாட்டின் பால் என சத்தான உணவு பொருள்களையே உண்டனர்.

இன்னும் 50 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சுமை போல இந்தியாவிற்கும் வரலாம் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவையான உணவு பொருள்களையாவது உற்பத்தி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதனை செய்வதற்கு நிலம் வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. வீட்டில் அருகில் இருக்கக்கூடிய இடம். ஏன்? இன்று மாடி வீட்டில் கூட தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் நாளைய தலைமுறை துன்பப்படாமல் இருக்க அவர்களுக்கு வழிகாட்டியாக நாம் ஒவ்வொருவரும் விவசாயம் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகிறது.

அதற்காக வயலில் இறங்கி நெல் உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. நம்மால் முடிந்த அளவு உணவு பொருள்களை உற்பத்தி செய்தால் கூட போதும்தான். தனி மனித உற்பத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியும். எனவே வீட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், நாளைய தலைமுறையினருக்கும் உதவுவோம். விவசாயம் காப்போம். வளமான வாழ்க்கையினை வாழ்வோம்.

மேலும் செய்திகள்