< Back
சிறப்புக் கட்டுரைகள்
80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது
சிறப்புக் கட்டுரைகள்

80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது

தினத்தந்தி
|
24 Jan 2023 2:21 PM IST

மொத்தத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்றாள் அவ்வை பெருந்தகை. வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை கடல் கடந்து சென்றாவது ஈட்ட வேண்டும் என்பதே அந்த மூதாட்டியின் அறிவுரை.

இதை செயல்படுத்துவதற்குத்தான் இன்று எத்தனை வாய்ப்புகள்... பரந்து விரிந்த பூமிப்பந்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்று வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் வாய்ப்புகள் மலிந்துவிட்டன.

உலக நாடுகள் பின்பற்றும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளால் அவ்வையின் இந்த முதுமொழியை பின்பற்றுவது இன்று எளிதாகிவிட்டது. நாடுகள் அனைத்தும் எல்லைகளால் பிரிந்து கிடந்தாலும், அவற்றின் மக்கள் என்னவோ ஒன்றாக கூடி வாழும் நிலைதான் காணப்படுகிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா போன்ற வல்லரசுகளை ஒரு காலத்தில் உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்து வியந்த பலரும், இன்று அந்த நாடுகளையே தங்கள் இரண்டாவது தாய்வீடாக மாற்றி வருகின்றனர்.

கம்ப்யூட்டரின் வரவால் உருவான தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) என்ற பெரும் துறையின் வளர்ச்சி சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அந்த வாய்ப்புகளை பெருமளவில் வழங்கியது. உலக ஐ.டி. துறையின் மையமாக விளங்கும் அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கை நோக்கி அவர்களை உந்தி தள்ளியது. நாளடைவில் இது தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் கனவாகவும் மாறிப்போனது. தாய்நாட்டில் படிப்பு, அமெரிக்காவில் செட்டில்டு என்ற கொள்கையை அவர்கள் தாரக மந்திரமாக மாற்றிக்கொண்டனர்.

இத்தகைய வெளிநாட்டு ஐ.டி. வல்லுனர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்க நிறுவனங்களும் பெருமளவில் அவர்களை உள்வாங்கிக்கொண்டன. இதற்காக எச்.1பி, எல்.1ஏ, எல்.1பி என பிரத்யேக விசாக்களையும் அந்த நாடு வழங்கியது.

விளைவு... இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஐ.டி. வல்லுனர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்தனர். இரவு-பகல் பாராமல் தங்கள் அறிவையும், உடலையும் கரைத்தனர்.

இதனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது. அவர்களின் அடியொற்றியே புதிய தலைமுறை தொழில்நுட்ப வல்லுனர்களும் அமெரிக்காவை எட்டிப்பார்க்கும் கனவுகளை வளர்த்து வருகின்றனர்.ஆனால் இவர்களின் கனவில் பேரிடியை அமெரிக்க நிறுவனங்கள் தற்போது இறக்கி இருக்கின்றன. அதாவது புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றும் அறிவித்து உள்ளன. அத்துடன் ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களையும் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த கொடுஞ்செயலை அடுத்தடுத்து பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் முறையே 10 ஆயிரம், 18 ஆயிரம் என ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டன. இதைப்போல பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவும் 11 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. முன்னதாக டுவிட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்கும், முதல் வேலையாக ஊழியர்களின் வயிற்றில்தான் அடித்தார். அவரும் இந்தியர்கள் உள்பட 3,700 பேரை வேலையை விட்டு நீக்கினார்.

பிரபலமான கூகுள் நிறுவனமும் கடந்த வாரம் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து கடைசியாக இந்த பட்டியலில் இணைந்து கொண்டது. கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே ஆப்பிள், இன்டல், லிப்ட், குவால்காம், அப்ஸ்டார்ட், விமியோ, அடோப், எச்.பி. போன்ற நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டன.

மொத்தத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் சுமார் 40 சதவீதம் (80 ஆயிரம் பேர்) இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் எச்.1பி மற்றும் எல்.1 விசா வைத்திருப்பவர்கள் ஆவர்.

எச்.1பி விசா என்பது குடியுரிமை அல்லாத விசா ஆகும். அமெரிக்க நிறுவனம் ஒன்று தனக்கு தேவையான ஊழியர்களை அமெரிக்காவில் கண்டடைய முடியாதபோது, அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரையான காலகட்டங்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டினரை நியமிக்க வகை செய்கிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவை நம்பியுள்ளன. இதைப்போல நிறுவனங்களுக்கு இடையே மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பரிமாற்றம் செய்வதற்கு எல்.1 விசாக்கள் உதவுகின்றன.இந்த விசாக்கள் மூலம் அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் நிலைமை தற்போது பரிதாபத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை வேலை பார்த்து வந்த அவர்கள் சில நொடிகளில் வேலையற்றவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அவர்களுக்கு மனரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எச்.1பி விசா வைத்திருப்பவர்கள் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் புதிய வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே விதிமுறை ஆகும். ஆனால் அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருவதுடன், புதிய பணி நியமனங்களையும் ரத்து செய்துளளன.

இந்த சூழலில் தற்போது வேலை இழந்த ஊழியர்கள் விசா காலக்கெடுவுக்குள் புதிய நிறுவனங்களில் பணியில் அமர்வது சிரமம். எனவே இவர்கள் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். பொருளீட்டும் நோக்கில் கடல் கடந்து சென்று திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அல்லாடி வரும் இந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

எனவே தங்களுக்கு அமெரிக்காவிலேயே புதிய பணியிடத்தை ஏற்பாடு செய்யவோ அல்லது தாய்நாட்டில் உகந்த பணி பெறுவதற்கோ மத்திய அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்