< Back
சிறப்புக் கட்டுரைகள்
பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், மொழிப்பெட்டி
சிறப்புக் கட்டுரைகள்

பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், 'மொழிப்பெட்டி'

தினத்தந்தி
|
22 Oct 2022 12:45 PM IST

‘‘மொழி அறிவு தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. அதுதான் கலாசாரத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது. ஆனால் உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழிகளாகவே பல உள்ளன. இந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் பேசும் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் உருவானதுதான் மொழிப்பெட்டி’’ என்று பொறுப்பாக பேச தொடங்கினார், ரவிகுமார். இவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆனால், ‘மொழி பாதுகாவலர்' என்பதிலேயே அதிகம் சந்தோஷம் கொள்கிறார். ஆம்..! இவரது முயற்சியினால், அழியும் தருவாயில் இருந்த பழங்குடியின மொழி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தொலைதூர ஆதிவாசி கிராமமாக செம்மனாரை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி பயிலுவதற்காக இங்கு அரசு உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 35 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமையாசிரியர்தான் ரவிகுமார். பள்ளியை சிறப்பாக நிர்வகிப்பதோடு, அழியும் நிலையில் இருந்த பழங்குடியின மொழியையும் மீட்டெடுத்து வருகிறார்.

''இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்களுக்கு எழுத்து வடிவிலான மொழி எனத் தனியாக இல்லை. இருப்பினும் அவர்களுக்கு பேச்சு வழக்கில் மொழி இருக்கிறது. அதுவும் செல்போன் மோகத்தால் மெதுவாக அழிந்து வருகிறது. இளைய தலைமுறையினர், பழங்குடியின மொழியில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். அந்த மொழியின் வழியாகத்தான், பழங்குடியின மக்களின் பூர்வீக தொழில் நுணுக்கங்கள், கடவுள் வழிபாட்டு முறைகள், மூலிகைகளின் பயன்பாடு, பாரம்பரிய மருத்துவம், கலாசாரம் குறித்து அறியமுடியும். அதன் காரணமாகவே, அதை மீட்டெடுக்க போராடுகிறோம்'' என்பவர், 'மொழிப்பெட்டி' என்பதை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் பழங்குடியின மொழியை கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாக்குகிறார்.

''பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பழங்குடியின சொற்களை காகிதத்தில் எழுதி இந்த மொழிப் பெட்டியில் ஆவணப்படுத்தவேண்டும். அவ்வாறு மொழி பெட்டியில் இருந்து சேகரிக்கப்படும் வார்த்தைகளுக்கான பொருளை பழங்குடியின மக்களிடம் கேட்டறிந்து, அதற்கான தமிழ் வார்த்தை மற்றும் பொருளோடு மொழி பெயர்த்து முறையாக ஆவணப்படுத்துகிறோம். இதன் மூலம் அவர்களது பேச்சு வழக்கிலான மொழி பாதுகாக்கப்படுவதுடன், தெரியாத ஒருசில வார்த்தைகளையும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.

இதே போல அதிக வார்த்தைகளை எழுதி மொழிப் பெட்டியில் போடும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வார்த்தைகள் சேகரிக்கப்பட்ட பின் அந்த வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளுடன் அகராதி தயாரிக்கும் பணியும் நடைபெறும். இதற்கான பணியை திருமூர்த்தி மகேந்திரன் மற்றும் ஆசிரியர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பழங்குடியின மக்களின் மொழி மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படும்'' என்றவர், இந்த பணியை முழுமைப்படுத்த, சில தொண்டு நிறுவனங்களுடன் கைக்கோர்த்திருக்கிறார்.

மொழியின் வழியாகத்தான்,

பழங்குடியின மக்களின் பூர்வீக தொழில் நுணுக்கங்கள், கடவுள் வழிபாட்டு முறைகள், மூலிகைகளின் பயன்பாடு, பாரம்பரிய மருத்துவம், கலாசாரம் குறித்து அறியமுடியும். அதன் காரணமாகவே, அதை மீட்டெடுக்க போராடுகிறோம்

மேலும் செய்திகள்