வறண்ட ஏரியை வளமாக்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி
|பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமனகள்ளி என்ற ஏரிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார்.
63 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ரேவதிக்கு இயற்கை மீது ஆர்வம் அதிகம். அதனால் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமனகள்ளி என்ற ஏரிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார். இதுபற்றி விளக்குகிறது, இந்த கட்டுரை...
இல்லத்தரசியான ரேவதிக்கு 1994-ம் ஆண்டு முதல்தான் இயற்கையை ரசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. மரக்கன்றுகளை நடுவதற்கும், கொடிகள், கீரைகள் மற்றும் தாவரங்களைப் பயிரிடுவதற்கும் இந்த ஆர்வம் வழிவகுத்தது. 2019-ம் ஆண்டு சோமனகள்ளி கிராமத்தில் ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, காலியாக கிடந்த நிலத்தில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தார். இதற்கான அனுமதிக்காக கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை அணுகினார். பஞ்சாயத்து உதவியுடன் வேம்பு, ஜாமூன், பலா மற்றும் வெளிநாட்டு ரகங்களைப் பயிரிட்டார். அருகில் உள்ள ஏரி தூர்ந்து போனதால், தண்ணீர் இன்றி நட்டு வைத்த தாவரங்கள் காய்ந்து போயின. இதனால் ரேவதி சற்று தடுமாற்றம் அடைந்தார். இந்த ஏரி குறித்து விசாரித்தார். அப்போது 3.5 கி.மீ. நீளத்துக்கும், 60 அடி ஆழத்துக்கும் கால்வாய் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
இதனால்தான் ஏரிக்குக் கால்வாயில்இருந்து நன்னீர் வரத்து இல்லாமல் போனது என்பதை அறிந்து கொண்டார்.
"வாய்க்கால் மற்றும் ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. கிராமத் தலைவரின் உதவியுடன் அவற்றை அகற்றினேன். பெரிய அளவில் கட்டிடங்கள் ஏதும் கட்டப்படவில்லை. வேலிகள்தான் போட்டிருந்தனர்.
ஜே.சி.பி.யைக் கொண்டுவந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினேன். பின்னர், 6 மாதங்கள் வண்டல் மண்ணை அகற்றினோம். ஏரியை 30 அடிக்கு உயர்த்தி பலப் படுத்தினோம். இதனால் கடந்த இரண்டு பருவங்களாக ஏரிக்குள் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, சோமனகள்ளி ஏரியில் இருந்து காவிரியின் கிளை நதியான சுவர்ணமுகிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஏரி நீரை 50 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள கிராம மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி இருக்கின்றனர்.
எப்படியாவது அதன் பழைமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இயற்கை ஆர்வலர் என்ற முறையில், இந்தப் பகுதியின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் முடிந்தது. பங்கு வர்த்தகத்தில் பணியாற்றும் என் இரு மகன்களிடம் இருந்துதான் உதவி பெற்றேன். இன்றைக்கு சோமனகள்ளி ஏரி, தண்ணிரால் நிரம்பி வழிகிறது. பறவைகளின் சத்தம் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நான் இங்கு 4 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சவும், பராமரிக்கவும் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் செலவழித்தேன். தற்போது மரக்கன்றுகள் வளர்ந்து, ஏரிப்பகுதி முழுவதும் அழகாகக் காட்சியளிக்கிறது. கால்வாயை சுத்தப்படுத்தாமல் இருந்திருந்தால், சமீபத்திய மழையில் இந்தப் பகுதி மூழ்கியிருக்கும். ஒவ்வொரு மழைக்கும் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வந்த இந்த கிராம மக்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்" என்றார்.
தனி மனுஷியாக ஏரியை மீட்டெடுத்து, இயற்கையின் பாதுகாவலராக மாறியிருக்கிறார் ரேவதி. இவரது சேவை இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நான் இங்கு 4 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சவும், பராமரிக்கவும் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் செலவழித்தேன். தற்போது மரக்கன்றுகள் வளர்ந்து, ஏரிப்பகுதி முழுவதும் அழகாகக் காட்சியளிக்கிறது.