குதிரையேற்றத்தில் அசத்தும் சிறுவன் கெவின் கேப்ரியேல்
|10 வயது சிறுவனான, கெவின் கேப்ரியேல் குதிரையேற்றத்தில் அசத்து கிறான். 2 வருட பயிற்சியிலேயே, தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறான்.
பதக்கம் வென்ற மகிழ்ச்சியில், குறும்புத்தனம் செய்துகொண்டிருக்கும் கெவினிடம் சிறுநேர்காணல்...
* குதிரையேற்றத்தில் எப்படி ஆர்வமானீர்கள்?
கொரோனா லாக்டவுனில்தான், 'ஹார்ஸ் ரைடிங்' செய்யும் ஆர்வம் வந்தது. குதிரையேற்றம் சம்பந்தமான நிறைய கார்ட்டூன்கள், திரைப்படங்களை பார்த்து ரசித்ததினால், அந்த ஆசை வந்திருக்கலாம் என தோன்றுகிறது. அதுவரை வீடியோ கேம் விளையாட்டுகளில் மூழ்கி கிடந்த எனக்கு, அப்படியொரு ஆசை வந்ததும், அம்மாவிடம் தெரியப்படுத்தினேன். 'அவுட்டோர்' விளையாட்டுகளில், என்னை ஊக்கப்படுத்த ஆர்வமாக இருந்தவர்களுக்கு, 'குதிரையேற்றம்' சிறப்பான பயிற்சியாக தெரிந்ததால், என்னை பயிற்சிக்கு அனுப்பினர். நானும் வெகுவிரைவாகவே, குதிரையேற்றம் கற்றுக்கொண்டேன்.
* குதிரையேற்ற பயிற்சிகள் எப்படி இருந்தன?
'மைண்ட் புளோவிங் எக்ஸிபீரியன்ஸ்'. முதல் நாளில் இருந்தே பயிற்சி ஆரம்பித்துவிடாது. குதிரையேற்ற பயிற்சி களுக்கு முன்பு, நான் சவாரி செய்ய குதிரைகளுடன் பழக வேண்டும். அதனுடன், ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப் போதுதான், நம்முடைய பயிற்சியும், முயற்சியும் கைக் கொடுக்கும். போட்டியில் பங்கேற்க நம்பிக்கை கொடுக்கும்.
* எங்கு பயிற்சி பெற்றீர்கள்? எந்த பிரிவில் பயிற்சி பெற்றீர்கள்?
சென்னையில் இருக்கக்கூடிய, சென்னை ஈக்வெஸ்டேஷன் மையத்தில் இசபெல்லிடம் பயிற்சி பெற்றேன். குதிரையேற்றத்தை பொறுத்தவரையில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அதில்நான் டிரஸ்ஸாஜ் எனப்படும் பிரிவில் பயிற்சி பெற்று, அந்த பிரிவு போட்டியில் பங்கேற்றேன்.
* அது என்ன டிரஸ்ஸாஜ்?
இது ஒரு 'இன்ட்ரஸ்டிங்' ஆன பயிற்சி. குதிரையை கட்டுப்படுத்தி, 4 முதல் 5 நிமிடங்களுக்கு, தொடர்ச்சியாக சிறுசிறு நகர்வுகளை செய்து காண்பிக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு ரகமாக இருக்கும். குதிரையின் மீது அமர்ந்தபடி, அதை நடக்க செய்வது, மிதமான வேகத்தில் ஓட விடுவது, பிறகு வேகமாக சீறிப் பாய்வது, தடைகளை தாண்டுவது, வட்டமடிப்பது, எஸ் வடிவில் குதிரையை வளைத்து நெளித்து ஓட்டுவது... இப்படி, டிரஸ்ஸாஜ் சுற்று சுவாரசியமாக இருக்கும். இந்த பிரிவில்தான் நான் அசத்தினேன்.
* என்ன போட்டியில் பரிசு வென்றீர்கள்?
குதிரையேற்றத்தை பொறுத்தவரையில், மாநில அளவில் நிறைய போட்டிகள் நடத்தி, 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களை தேசிய அளவில் வரிசைப்படுத்துவார்கள். அப்படி தேசிய அளவில் முதல் 25 இடங்களை பிடிப்பவர்களை மட்டுமே அழைத்து, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும். அந்தவகையில், டாப்-25 நபர்களில், ஒருவனாக போபாலில் நடைபெற்ற ஜூனியர் நேஷனல் ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஷிப்பில் தமிழகம் சார்பாக நானும் கலந்துகொண்டேன். இது 10 முதல் 12 வயதிற்குட்பட்டோருக்கான டிரஸ்ஸாஜ் பிரிவு. அதில்தான் சிறப்பாக செயல்பட்டு, தங்கம் வென்றேன்.
* மற்ற விளையாட்டிற்கும், குதிரையேற்றத்திற்கும் என்ன வித்தியாசம்?
மற்ற எல்லா விளையாட்டுகளை விடவும், குதிரையேற்றம் கொஞ்சம் ஸ்பெஷலானதுதான். ஆம்..! மற்ற விளையாட்டுகள் அனைத்தும், உயிரற்ற பொருட்களை, பந்துகளை, மட்டைகளை, வாகனங்களை பயன்படுத்தி விளையாடப்படுகின்றன. ஆனால் குதிரையேற்றம் அப்படியல்ல. மனிதர்களை போலவே உயிருள்ள, உணர்வுள்ள உயிரினத்தை பயன்படுத்தி விளையாடப்படுகிறது. அவற்றுக்கும் நம்மைப் போலவே, உணர்வுகள் உண்டு. போட்டி களத்திற்குள், வரவே மாட்டேன் என அடம்பிடித்த குதிரைகளை எல்லாம், நாங்கள் கண்கூடாக பார்த்தோம். நமக்கும், நாம் பயன்படுத்தும் குதிரைக்குமான நட்புறவு, பந்தம்தான், குதிரையேற்றத்தில் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கும்.
* நீங்கள் குதிரைகளுடன் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டீர்களா?
பொதுவாக, குதிரையேற்ற வீரர்கள், ஒரே குதிரையைத்தான் வெகுநாட்களுக்கு பயன்படுத்துவார்கள். அதில்தான் பயிற்சி களையும் மேற்கொள்வார்கள். ஆனால் நான் போட்டிக்கு தயாரானபோது, 6 மாதத்திற்குள்ளாகவே 5 வெவ்வேறான குதிரைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவை அனைத்துடனும் நட்புறவை உண்டாக்கி, பயிற்சி செய்தேன். இப்போது, எனக்கு புது குதிரையில் சவாரி வருவது, கடினமான ஒன்றாகவே தெரியவில்லை.
* நீங்கள் படிப்பில் எப்படி?
நான் அப்பா-அம்மாவுடன் (கேஷவர்தன்-ஷிபா) துரைப்பாக்கத்தில் வசிக்கிறேன். அங்கு அருகில் இருக்கும் அமெரிக்கன் பள்ளியில், 5-வது கிரேடு படிக்கிறேன். குதிரையேற்றம் போலவே, படிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்துடன், வீடியோ கேம் விளையாட்டுகளும் பிடிக்கும்.