< Back
சிறப்புக் கட்டுரைகள்
மாணவர்கள் நடத்தும் டீ கடை
சிறப்புக் கட்டுரைகள்

மாணவர்கள் நடத்தும் டீ கடை

தினத்தந்தி
|
28 Aug 2022 6:21 PM IST

கேரள பல்கலைக்கழகத்தின் முதுகலை படிக்கும் மாணவ-மாணவிகள் முயற்சியால் பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்ட ‘தி சாய் ஸ்பாட்’ பழைய சூழலையே மாற்றிவிட்டது.

கேரள பல்கலைக்கழகத்தின் காரியவட்டம் வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை சில மாதங்களுக்கு முன்பு வரை வெறிச்சோடி காணப்பட்டது. முதுகலை படிக்கும் மாணவ-மாணவிகள் அம்ருதா, ஸ்ரீநாத் மற்றும் தீபேந்து ஆகியோரின் முயற்சியால் பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்ட 'தி சாய் ஸ்பாட்' பழைய சூழலையே மாற்றிவிட்டது.

தற்போது மாலை 4 முதல் அதிகாலை 2 மணி வரை தேநீர், காபி மற்றும் மோஜிடோ பிரியர்களால் பல்கலைக்கழக வளாக பகுதியும், சாலையும் பரபரப்பாக இருக்கிறது.

இந்த மாணவ-மாணவிகள் மூன்று பேரும் கொல்லத்தை சேர்ந்தவர்கள். பெற்றோருக்கு எந்த விதத்திலும் சுமையாக இருக்காமல் சொந்தக் காலில் நிற்க விரும்பினார்கள். முதுகலை பட்டதாரியான 25 வயது அம்ருதா, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தார்.

ஆனால், தொழிலதிபராக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. அதற்கு அடித்தளமிடும் வகையில் ஆரம்பக்கட்டமாக டீக்கடை தொடங்குவது பற்றி சிந்தித்தார். ஆனாலும் `தட்டுக்கடை' தொடங்குவது கேள்விக்குறியாக இருந்தது.

ஏனெனில் அவருக்கு சமைக்க தெரியாது. நண்பர்கள் உதவியுடன் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் `சாயா தட்டு' கடையை வடிவமைத்தார்.

"எனக்கு மூன்று மூத்த சகோதரிகள். எங்களை வளர்ப்பதற்கு என் தாயார் ரொம்பவும் சிரமப்பட்டார். நாங்கள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவருக்கு தொந்தரவு கொடுக்காமல் சொந்த வருமானத்தில் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

சிறியதாக கடை தொடங்கி இருப்பது குறித்து குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆரம்பத்தில் அவர்கள் என்னை நம்பவில்லை. படிப்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், என் சாயா கடையில் இருந்து நண்பர்கள் பாடும் வீடியோவைப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதையே மூன்று முறை பார்த்ததாக கூறினார்" என்கிறார் அம்ருதா.

பூஸ்டர் டீ, ஸ்பெஷல் டீ, ஸ்பாட் டீ மற்றும் கிராம்பு, இஞ்சி, காந்தாரி மிளகாய், ஏலக்காய் போன்ற பல வகையான மசாலாப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு `சுலைமானி' தேநீரும் தயாரிக்கப்படுகிறது.

சுற்றுப்புறச் சூழல், தரமான சேவை, தனித்துவமான தேநீர் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மலிவு விலை என வாடிக்கையாளர்களை சில நாட்களிலேயே சுண்டியிழுத்து விட்டார்கள்.

மேலும் செய்திகள்