பலாப்பழத்தில் 400 உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி
|கேரளாவை சேர்ந்த ராஜஸ்ரீ, பலாப்பழத்தில் 400-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறார். பாஸ்தா, சாக்லேட், மாவு போன்றவையும் இதில் அடங்கும். ராஜஸ்ரீ குடும்பத்துடன் கத்தாரில் வசித்து வந்தார்.
அங்கிருந்து சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் அவரது தாயார் பலாப்பழம் மற்றும் அதன் கொட்டைகளை உலர வைத்து கொடுத்தனுப்புவது வழக்கம். அவ்வாறு வெயிலில் நீண்ட நேரம் உலர்த்திய பிறகும் பலாப்பழத்தின் வாசனை நீடித்திருக்கிறது.
''கத்தாரில் வசிக்கும் பெரும்பாலான நண்பர்கள் பலாப்பழத்தை விரும்பினார்கள். ஆனால் அவர்களுக்கும் பலாப்பழ வாசனை பிடிக்கவில்லை. அதனால் வாசனையை நீக்குவதற்கான வழிகளை தேடத்தொடங்கினேன்'' என்பவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தனது குடும்பத்துடன் கத்தாரில் வசித்திருக்கிறார். குழந்தைகளின் படிப்பு காரணமாக 2016-ம் ஆண்டு கேரளாவுக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அப்போது சொந்தத்தொழில் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர், பலாப் பழத்தை தேர்ந்தெடுத்துவிட்டார்.
''பலாப்பழத்தை பல்வேறு வகைகளில் உபயோகிக்கலாம். அதனை நன்கு உலர்த்தி பதப்படுத்தினால் மைதா போன்ற மாவுகளுக்கு நல்ல மாற்றாக இருக்கும். அதன் வாசனையை மட்டும் நீக்க விரும்பினேன். அதை சாத்தியமாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தேடத் தொடங்கினேன்" என்கிறார் 50 வயதாகும் ராஜஸ்ரீ.
உணவு பொருட்கள் தயாரிப்புக்கான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமம் பெற்றவர், காயம்குளத்தில் இயங்கும் பலாப்பழ கூழ் மற்றும் கொட்டைகளை உலர்த்தி உயர்தர தூள் தயாரிக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்திருக்கிறார். அதனை பின்பற்றி பலாப்பழ மாவு முதல் பாஸ்தா வரை விதவிதமான மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறார்.
''காயம்குளத்தில் ஏற்கனவே பலாப்பழத்தை பயன்படுத்தி வெவ்வேறு பொருட்களை தயாரித்தனர். அந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டேன். அதனை அப்படியே பின்பற்றாமல் வேறு ஏதாவது பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். என் மகன்களுக்கு பாஸ்தாவும், பர்கரும் ரொம்ப பிடிக்கும். அந்த வகை உணவுகள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மைதாவுக்கு மாற்றாக பலாப்பழ மாவை பயன்படுத்துவது பற்றி யோசித்தேன்.
அது பற்றி ஆராய்ந்தபோது பலாப்பழ மாவை பயன்படுத்தி வேறு யாரும் பாஸ்தா உருவாக்க முயற்சி செய்யவில்லை என்பதை கண்டறிந்தேன். பரிசோதனை அடிப்படையில் பலாப்பழ பாஸ்தா தயாரிக்க தொடங்கினேன். அந்த முயற்சி கைகூடியது. எனினும் முழு அளவில் பாஸ்தா தயாரிக்க இயந்திரம் தேவைப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.டி.சி.ஆர்.ஐ) மரவள்ளிக்கிழங்கு மாவு தயாரிப்பு இயந்திரம் இருந்தது.
அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி பலாப்பழ பாஸ்தாவை தயாரிக்க முயற்சித்தேன். அது சாத்தியமானது. பின்னர் தொழில்நுட்பங்களை பின்பற்றி தயாரிக்கப்பட்ட பலாப்பழ பாஸ்தாவை அறிமுகப்படுத்தினேன்'' என்கிறார்.
பலாப்பழ பாஸ்தாவை தவிர, பலாப்பழ பர்கர், பஜ்ஜி, வரமிளகாய், பாயசம், மாவு, சாக்லேட், தேநீர், பலாப்பழ ஒயின், ஐஸ்கிரீம், புட்டு, கேக், பலாப்பழ வாசனை கொண்ட தயிர், மோர் என பலாப்பழத்தை பயன்படுத்தி சுமார் 400 மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரித்து வருகிறார். அவற்றை உணவு திருவிழாக்கள், கண்காட்சி கள் போன்றவற்றிலும் காட்சிப்படுத்தி வருகிறார்.
ஆலப்புழா மாவட்டம் நூரநாட்டில் உள்ள தனது சொந்த இடத்தில் பலா மரங்களை நட்டு பராமரிக்கிறார். அந்த பகுதியில் உள்ள எல்லா வீடுகளிலும் 5 முதல் 10 பலா மரங்கள் இருக்கின்றன. அங்கு விளையும் பழங்களை வாங்கி மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார். இந்த பணிக்காக 10 பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். பலாப்பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், தனது பண்ணையில் விளையும் மரவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், முருங்கை மற்றும் அரிசி ஆகியவற்றில் இருந்தும் உணவு பொருட்கள் தயாரிக்கிறார்.
''எனது தயாரிப்புகள் அனைத்தும் முற்றிலும் இயற்கையானவை. எந்தவிதமான ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை'' என்றும் சொல்கிறார்.