கண்ணதாசனும் கடவுளும்...
|கண்ணதாசன்... தமிழ்த்தாயின் தவப்புதல்வன்... இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற கவிஞன்... வாழ்க்கையை, அதன் பாதையிலேயே சென்று வாழ்ந்து ருசித்த ரசிகன்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத குழந்தை... கவிதையால் உலகை அளந்த படிக்காத மேதை... ‘நடிக்கத் தெரியாத' பாமரன்... எதிரிகளும் விரும்பும் செல்லப்பிள்ளை... வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் மறைக்க விரும்பாத திறந்த புத்தகம்...
குளத்தில் நீந்துபவனுக்கு ஆற்றில் நீந்துவது சிரமம். ஆற்றில் நீந்துபவனுக்கு கடலில் நீந்துவது கஷ்டம். ஆனால் கண்ணதாசன் சகலகலா வல்லவன். கவிதை, திரையிசைப்பாடல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், புதினங்கள், நாடகம், உரைநூல்கள் என தமிழின் அத்துணை சாகரங்களிலும் நீந்தி கரைகண்டவர்.
கருவறை முதல் கல்லறை வரை மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்தையும் தனது பாடல்கள் மூலம் படம்பிடித்து காட்டிய சிந்தனையாளர். காதல், வீரம், பிரிவு, இயலாமை, ஏக்கம், இன்பம், துன்பம், மகிழ்ச்சி, குதூகலம், சோகம், கோபம், ஆற்றாமை, கவலை, எழுச்சி, உற்சாகம், விரக்தி, கையறுநிலை என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் சொல்லி, வாழ்க்கையின் இனிமையை-நிலையாமையை மனிதகுலத்துக்கு பாடமாக போதித்த வித்தகர்.
''காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே'' என்று குழந்தைக்கு தாலாட்டு பாடிய அவர், ''நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே'' என்று இல்லற வாழ்வின் சுகத்தை அனுபவித்து சொன்னதோடு, ''வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசிவரை யாரோ'' என்று இறுதி யாத்திரைக்கு இரங்கற்பாவும் பாடினார்.
இறைவனுடன் அவர் ஆத்மார்த்தமான உறவு வைத்திருந்தார். பாமாலைகளால் இறைவனை ஆராதித்ததோடு, பலமுறை அவனுடன் மல்லுக்கட்டி இருக்கிறார். ஒரு பக்தன் என்ற நிலையில் இருந்து மட்டும் பார்க்காமல், உற்ற தோழனாக கருதி அவனோடு அன்பு பாராட்டியதோடு கோபத்தில் செல்லச் சண்டை போட்டு இருக்கிறார்; சாபம் கொடுத்து இருக்கிறார்; சரணடைந்தும் இருக்கிறார்.
அதெல்லாம் தாயிடம் குழந்தை அடம்பிடிப்பது போல்...பிஞ்சுக் கால்களால் நெஞ்சில் உதைப்பதுபோல்... சுகமான வலிகள்...
கண்ணதாசன் மதவாதியல்ல; ஆன்மிகவாதி. அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய அவர், ஏசு காவியமும் படைத்தார்.
காவியங்கள், பக்தி படங்கள் மட்டுமின்றி, சமூகப் படங்களிலும் இறைவனைப் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார்.
இலக்கியங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை தனது பாடல்களில் எடுத்து கையாண்டு, பாமர மக்களுக்கு புரியும்படி எளிமையாக சொன்ன படைப்பாளர். பாடல்களில் இதிகாச சம்பவங்களை கொண்டு வந்து படத்தின் கதையோட்டத்தை ரசிகனுக்குள் எளிதாக கடத்தி இயக்குனரின் வேலையை எளிதாக்கிய மாமேதை அவர்.
திரையிசைப்பாடல்கள் மூலம் கண்ணதாசன் கடவுளை எப்படியெல்லாம் பார்த்தார்? அவனிடம் என்னென்ன கேட்டார்? எதற்காகவெல்லாம் வாக்குவாதம் செய்தார்? என்றெல்லாம் அலசிப் பார்த்தால், அது ஒரு பெரிய கடல்.
அதில் சில துளிகளை பார்ப்போம்...
தெய்வங்களை நெருங்கிய தோழனாக-தோழியாக கருதி வாடா-போடி என்று ரீதியில் உரிமையுடன் அழைத்தவர் கண்ணதாசன்.
சிவாஜிகணேசன் நடிப்பில் 1975-ல் வெளியான ''மனிதனும் தெய்வமாகலாம்'' என்ற படத்தில் ஒரு பாடலின் பல்லவியில் முருகப்பெருமானை உற்ற நண்பனைப் போல் பாவித்து, ''என்னடா தமிழ்க்குமரா... என்னை நீ மறந்தாயோ? நான் பார்த்தும் பொய் என்றால், நீ வந்ததும் பொய் என்றால் பக்தியின் விலை என்னடா?'' என்று கேட்டு இருப்பார்.
'ஆதிபராசக்தி' படத்தில் சக்தியை தோழியாக கருதி, ''ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னுபுட்டி போடியம்மா'' என்று ஒரு பாடல் மூலம் இல்லத்துக்கு உண்ண அழைத்து இருப்பார். மற்றொரு பாடலில், ''சொல்லடி அபிராமி, வானில் சுடர் வருமோ, எனக்கு இடர் வருமோ'' என்று கேட்டு உதவிக்கு கூப்பிட்டு இருப்பார்.
கண்ணனை அவருக்கு ரொம்ப பிடிக்கும். இதனாலேயே முத்தையா என்ற தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார். கண்ணனை பற்றியும், கிருஷ்ணனை பற்றியும், ராமனை பற்றியும் நிறைய பாடல்களில் எழுதி இருக்கிறார்.
வாய் பேச முடியாத தனது மகனை அழைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக கடற்கரைக்கு செல்லும் தந்தை, தூரத்தில் ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒலிக்கும் ''கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்'' என்ற பாடலால் ஈர்க்கப்பட்டு அங்கு செல்கிறான். அங்கு போன பின் அவனும் அந்த பாடலில் ஐக்கியமாகிவிடுகிறான். ''கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா, கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா'' என்று தனது வேண்டுதலை கண்ணனிடம் வைக்கிறான். அதற்கு பலனும் கிடைக்கிறது.
1966-ல் வெளியான 'ராமு' என்ற படத்தில் இடம்பெற்ற 'கண்ணன் வந்தான்' என்று தொடங்கும் இந்த பாடலில், மனமுருகி வேண்டினால் இறைவன் நம் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்ப்பான் என்ற வலுவான கருத்தை கண்ணதாசன் சொல்லி இருப்பார்.
இதேபோல் 'நானும் ஒரு பெண்' என்ற படத்தில் கருப்பாக இருக்கும் தன்னை குடும்பத்தில் உள்ளவர்கள் வெறுப்பதால் மனம்நொந்த கதாநாயகி (விஜயகுமாரி), ''என்னை ஏன் இந்த கோலத்தில் படைத்தாய்?'' என்று கேட்டு கண்ணனிடம் வாதிடுவது போல் அமைந்த பாடல் கேட்பவரின் கண்களை குளமாக்கும். ''கண்ணா கருமை நிற கண்ணா! உன்னை காணாத கண்ணில்லையே! உன்னை மறுப்பார் இல்லை; கண்டு வெறுப்பார் இல்லை, என்னை கண்டாலும் பொறுப்பார் இல்லை'' என்று அந்த பெண் தனது பரிதாப நிலையை சொல்வது போல் அந்த பாடலை அமைத்து இருப்பார். இறுதியில் உச்சக்கட்டமாக, ''எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?'' என்று இறைவனிடம் அவள் நீதி கேட்பதாக முடித்து இருந்தார்.
அவர் சொந்தமாக தயாரித்த வானம்பாடி என்ற படத்தில் ''கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே'' என்ற பாடலில் கண்ணன் மீது பெண்கள் கொண்டிருக்கும் மையலை கவிஞர் அழகாக விவரித்து இருப்பார்.
'லட்சுமி கல்யாணம்' படத்தில் திருமணம் தள்ளிப்போகும் பெண், கண்ணனிடம் முறையிடுவதாக பாடும், ''பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்'' என்ற பாடலில், ''கங்கையின் வெள்ளம் தண்ணீரோ; இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ; கண்ணனின் மனமும் கல்மனமோ; எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ'' என்று அந்த பெண்ணின் அவலநிலையை படம் பிடித்து காட்டி இருப்பார்.
அதே படத்துக்காக எழுதிய 'ராமன் எத்தனை ராமனடி' என்ற பாடலில் ரகுராமன், கோதண்டராமன், கோசலைராமன், அனந்தராமன் என ராம அவதாரத்தின் அத்தனை அம்சங்களையும் விளக்கி இருந்தார்.
திருமாலின் 10 அவதாரங்கள் பற்றியும், அந்த அவதாரங்களை அவர் ஏன் எடுத்தார்? என்பது பற்றிய கதையையும், ''திருமால் பெருமைக்கு நிகரேது'' (திருமால் பெருமை) என்ற பாடல் மூலம் சுருக்கமாகவும் எளிமையாகவும் சொன்னவர் அந்த மகாகவிஞன்.
'ரோஜாவின் ராஜா' என்ற படத்தில் சிவாஜியும் ஏவி.எம்.ராஜனும் நண்பர்களாக நடித்து இருப்பார்கள். சிவாஜியின் காதலி வாணிஸ்ரீ. ஆனால் சிவாஜிக்கு கடந்த கால நினைவுகளெல்லாம் மறந்து போய் இருக்கும். சிவாஜியுடன் தனக்கு பெண் பார்க்க செல்வார் ஏவி.எம்.ராஜன். அந்த பெண் வாணிஸ்ரீ.
பெண் பார்க்கும் படலத்தின் போது மணப்பெண்ணை பெரியவர்கள் பாடச் சொல்ல, தர்மசங்கடமான சூழ்நிலையில் வாணிஸ்ரீ பாடுவதாக கண்ணதாசன் எழுதிய ''ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்'' என்ற பாடல், அவர் ஓர் ஈடுஇணையற்ற கவிஞர் என்பதையும், பாடலிலேயே கதாபாத்திரங்களின் உணர்வுகளை படம்பிடித்து காட்டுவதில் வல்லவர் என்பதையும் நிரூபிப்பதாக அமைந்தது.
ராமாயணத்தில் சீதையின் சுயம்வரத்தில் பல்வேறு நாட்டு மன்னர்கள் கலந்துகொண்டது, அதில் பங்கேற்க விசுவாமித்திரருடன் ராமன் வந்தது, ஒரு மன்னன் வில்லை எடுத்ததை பார்த்து சீதைக்கு ஏற்பட்ட தவிப்பு போன்ற எல்லாவற்றையும் பாடலில் கொண்டு வந்து, அப்படிப்பட்ட ஒரு நிலையில் கதாநாயகி இருப்பதாக பாடலை அமைத்து இருப்பார்.
சிவாஜி, முத்துராமன், நாகேஷ் நடித்த 'மூன்று தெய்வங்கள்' படத்தில், தனது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நாயகி நினைத்துப்பார்ப்பதாக, ''வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ'' என்ற பாடலை கவிஞர் எழுதி இருந்தார். இந்த பாடலிலும் ராமாயண சீதையின் திருமண காட்சிகளை கொண்டுவந்திருந்தார்.
குருஷேத்திர போர்க்களத்தில் தனது சூழ்ச்சியால் மார்பில் அம்புகள் பாய்ந்து உயிருக்கு போராடும் கர்ணனிடம் (சிவாஜி), யாசகம் கேட்டு அந்தணர் வேடத்தில் வரும் பகவான் கிருஷ்ணர் (என்.டி.ராமராவ்) பாடுவதாக கவிஞர் எழுதிய ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்ற பாடல் கல் நெஞ்சையும் கரையச் செய்துவிடும். கர்ணன் தனது தாய், தம்பிகளை பிரிந்ததையும், கவுரவர்களிடம் போய்ச் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த கதையையும் பாடலில் கொண்டு வந்த கவிஞர், தான் செய்த சூழ்ச்சிக்காக தன்னை மன்னித்து அருள்மாறு கர்ணனிடம் கிருஷ்ணர் வேண்டுவதாகவும் பாடலை அமைத்து இருப்பார்.
'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் சாகாவரம் பெற்றது.
'திருவிளையாடல்' படத்துக்காக எழுதிய ''ஒன்றானவன் உருவில் இரண்டானவன்'' பாடலில் சிவபெருமானின் மகிமையை ஒன்று முதல் பத்து வரை வரிசைப்படுத்திய கவிஞர், சிவன் தன்னில் பாதியை உமையாளுக்கு தந்து பெண்மையை பெருமைப்படுத்தியதை, ''சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்'' என்று குறிப்பிட்டு இறைவனுக்கு புகழ்மாலை சூட்டி இருக்கிறார்.
இதே படத்தில், கர்வம் பிடித்த சங்கீத வித்வான் ஹேமநாத பாகவதருக்கு பாடம் புகட்டுவதற்காக சிவபெருமான் சாமானியன் உருவில் வந்து பாடுவதாக கவிஞர் எழுதிய "பாட்டும் நானே பாவமும் நானே" பாடல் "அவனின்றி ஓரணுவும் அசையாது" என்ற தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.
''திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா'' (சுவாமி அய்யப்பன்) என்ற பாடலில் திருமால் இரணியனின் அகந்தையை அழித்தது, கொடியவள் மகிஷியை கொன்றது ஆகிய புராண சம்பவங்களை சொல்லி இருப்பார்.
7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரும், திருப்பாவையை எழுதியவருமான கோதை என்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், கண்ணன் மீது கொண்ட தீராத பக்தியின் காரணமாக, அந்த கண்ணபிரானையே மணம் முடிக்க விரும்பி, திருமணமே செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்து தெய்வமானவர். பூமிப்பிராட்டியின் அவதாரமாக கருதப்படும் ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு சூட்டப்படுகிறது.
'அண்ணன் ஒரு கோவில்' என்ற படத்தில் 'மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை' என்ற பாடலில் ஆண்டாளின் கதையை, ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்" என்று ஒரே வரியில் நறுக்குத் தெறித்தாற்போல் கவிஞர் சொல்லி இருப்பார்.
இதே பாடலில் ராமனுடன் சீதா பிராட்டி காட்டுக்கு சென்றதை, ''மாலை சூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும் பிரியாத சீதை'' என்று எழுதி இருப்பார்.
முருகப்பெருமானைப் பற்றி கண்ணதாசன் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார்.
'கந்தன் கருணை' படத்தில் ''அறுபடை வீடு கொண்ட திருமுருகா'' பாடலில் முருகப்பெருமானின் பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் ஆகிய அறுபடை வீடுகளையும் கொண்டு வந்து, அங்கு நடைபெற்ற புராண சம்பவங்களையும் விளக்கி இருப்பார்.
இதே படத்தில், பார்வதிதேவி தன் மகனான முருகனைப்பற்றி பெருமையுடன் பாடுவதாக அவர் எழுதிய, ''சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா'' என்ற பாடல் மிகவும் இனிமையானது. இந்த பாடலில், ''அழகன் என்றால் முருகன் என்று தமிழ் மொழி கூறும்; அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்'' என்ற வரியும், ''உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது'' என்ற வரியும் கந்தனின் பேரழகை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்.
'பஞ்சவர்ண கிளி' படத்தில் கதாநாயகி, வேலவன் மீது மையல் கொண்டு பாடுவதாக கவிஞர் எழுதிய, ''அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்; அவன் ஆலயத்தில் அன்புமலர் பூஜை வைத்தேன்'', என்ற பாடலில் முருகனின் வசீகரத்தை படம்பிடித்து காட்டி இருப்பார்.
திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் அமையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு 'இது சத்தியம்' படத்தில் ''சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்'' என கதாநாயகி வேண்டுவதாக ஒரு அற்புதமான பாடலை எழுதி இருந்தார் கவிஞர்.
1972-ல் வெளியான 'தெய்வம்', 1975-ல் வெளியான 'திருவருள்' ஆகிய படங்களில் முருகனைப் பற்றி பல பாடல்களை எழுதி இருந்தார்.
'தெய்வம்' படத்தில் ''திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்" பாடலில், திருச்செந்தூர் கோவிலின் பெருமைகள், அங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் பற்றி சொல்லிய கண்ணதாசன் அதே படத்தில் ''மருதமலை மாமணியே'' என்ற பாடலின் சரணத்தில் ஓர் இடத்தில் ''அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்'' என்று எண்களை வரிசைப்படுத்தி இருந்தார்
'திருவருள்' படத்துக்காக எழுதிய ''கந்தன் காலடியை வணங்கினால்'' என்ற பாடலில், பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்ததையும் அதனால் அவனை முருகன் சிறையில் அடைந்த புராண சம்பவத்தையும் குறிப்பிட்டு இருப்பார்.
குழந்தைகளுக்கு இன்னொரு தாயாக விளங்கும் பசுவின் அருமை பெருமைகளையெல்லாம் ''கோமாதா எங்கள் குலமாதா'' (சரஸ்வதி சபதம்) என்ற பாடலில் சொல்லி பசுவை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்தி இருப்பார்.
அதே படத்தில், ''தெய்வம் இருப்பது எங்கே?'' பாடலில், இசையில், கலையில், மழலை மொழியில் இறைவன் இருப்பதாகவும், அவன் ஆடம்பரங்களை விரும்புவதில்லை என்றும் சுட்டிக்காட்டியதோடு, கோவிலில் ''அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்'' என மனதை அலைபாயவிடாமல் இறைவனை வழிபடவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி இருப்பார்.
பிள்ளைகள் உதாசீனப்படுத்தினாலும், அன்னியோன்யமாக வாழும் ஓய்வுபெற்ற பத்மநாப அய்யர்-சாவித்திரி தம்பதியை (சிவாஜி-பத்மினி) பற்றிய படம்தான் வியட்நாம் வீடு.
இந்த படத்தில் வரும் ''பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா'' என்ற அற்புதமான பாடலில், சிவபெருமான் பார்வதிக்கு தன்னில் பாதியை கொடுத்ததையும், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையை இருபுறமும் அமர்த்திக் கொண்டதையும், பாற்கடலில் திருமால் திருமகளை தன் அருகில் வைத்துக்கொண்டதையும் எடுத்து கையாண்ட கவிஞர், அவர்களைப் போல் பத்மநாபன் தன் மனைவியை இதயத்தில் வைத்துக் கொண்டதாக பூரிப்புடன் எழுதி இருப்பார்.
வெறும் கற்சிலையா? கடவுளா? என்பது பார்ப்பவரின் மனதை பொறுத்தது என்பதை, ''கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்'' (ஆனந்தி) என்ற பாடலின் மூலம் நெற்றியில் அடித்தாற்போல் சொன்னவர் அவர்.
'வா ராஜா வா' என்ற படத்துக்காக எழுதிய, ''இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்; மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்'' என்ற பாடலில், ''இரண்டு மனிதர் சேர்ந்த போது எண்ணம் வேறாகும்; எத்தனை கோவில் இருந்த போதும் இறைவன் ஒன்றாகும்'' என்ற வரிகள் மூலம் 'இறைவன் ஒருவனே' என்ற தத்துவத்தை பறைசாற்றி இருப்பார்.
'என் அண்ணன்' என்ற படத்தில், பொய்க்குற்றம் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கதாநாயகன் (எம்.ஜி.ஆர்.) விரக்தியிலும், வேதனையிலும் பாடுவதாக அமைந்த ஒரு பாடல். அந்த பாடலின் பல்லவியில், ''கடவுள் ஏன் கல்லானார்?'' என்று கேள்வி எழுப்பும் கவிஞர், ''மனம் கல்லாய் போன மனிதர்களாலே'' என்று அதற்கு பதிலும் அளித்து இருப்பார்.
'இதயகமலம்' படத்தில் இடம்பெற்ற ''உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'' என்ற பாடலில், ''ஒரு கோவில் இல்லாமல் தெய்வமும் இல்லை. ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை. நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம், தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல'' என்று எழுதி இருப்பார். ''நீ எனக்கு கோவிலை போன்றவன். தீபத்தை போன்ற நான் இல்லாமல் உன் வாழ்க்கையில் பிரகாசம் ஏது?'' என்று கேட்டு பிரிந்த மனைவி கணவனை நினைத்து பாடுவதாக அமைந்த இந்த பாடலில் காதலை தெய்வீக நிலைக்கு உயர்த்தி இருப்பார் கவிஞர்.
''ஆறு மனமே ஆறு'' (ஆண்டவன் கட்டளை) என்ற பாடலில், ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்த கவிஞர், முத்தாய்ப்பாக, ''நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'' என்று வாழ்க்கை தத்துவத்தின் சாறை ஒரே பாடலில் உள்ளடக்கி இருப்பார்.
'அன்னை வேளாங்கண்ணி' என்ற படத்தில், நடக்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்காக, ''கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ, கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ'' என்று மேரி மாதாவிடம் வேண்டியவர் கவிஞர்.
'பாவமன்னிப்பு' படத்துக்காக எழுதிய ''எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாவின் பேரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி'' என்ற பாடலில்; ''நூறு வகை பறவை வரும், கோடி வகை பூ மலரும், ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா'' என்றும், ''கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை'' என்றும் சமூகநல்லிணக்கத்தை பேணினார்.
''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை'' என்றவர் கவியரசர்.
ஆம்... அது உண்மைதான். அவர் உடல்தான் அழிந்ததே தவிர, அவரைப்பற்றிய நினைவுகளுக்கும், அவரது புகழுக்கும் அழிவே கிடையாது. இந்த பூமி உள்ளவரை அவரது பாடல்கள் உலகம் முழுவதும் காற்றில் தவழ்ந்துகொண்டே இருக்கும். அந்த பாடல்கள் மூலம் நாம் அவருடனும், அவர் நம்முடனும் பேசிக்கொண்டே இருப்போம்...
கடவுள் கடனாளியா?
கண்ணதாசன் ஒருவர்தான் கடவுளை 'கடன்காரன்' என்றும் 'குடிகாரன்' என்றும் உரிமையோடு திட்டியவர்.
1972-ல் சிவாஜிகணேசன், ஜெயலலிதா, சவுகார்ஜானகி நடிப்பில் வெளியான 'நீதி' என்ற படத்தில், ''நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்'' என்று சிவாஜி பாடுவதாக ஒரு பாடல் காட்சி வரும். அதில் சரணத்தில் ஓர் இடத்தில் ''கடவுள் என் வாழ்வில் கடன்காரன். கவலைகள் தீர்த்தால் கடன் தீரும்'' என்று கவிஞர் எழுதி இருப்பார். விபத்தில் மரணத்தை ஏற்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டு கஷ்டங்களையும், மனவேதனையையும் அனுபவித்து வரும் லாரி டிரைவரான கதாநாயகன், ''இறைவா எனக்கு நீ நிறைய கவலைகளை கொடுத்து இருக்கிறாய். அந்த கவலைகளையெல்லாம் தீர்த்தால்தான் நீ எனக்கு பட்ட கடன் தீரும்'' என்று கேட்பது போல் அந்த பாடலை அமைத்து இருப்பார்.
இந்த பாடலில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. படத்தில், கதாநாயகன் குடித்துவிட்டு பாடுவதாக இடம்பெறும் இந்த பாடல் காட்சிக்கான சூழ்நிலையை விளக்கிவிட்டு பாடலை எழுதுமாறு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்ல கண்ணதாசன், ''இன்று முதல் குடிக்கமாட்டேன்'' என்று பல்லவியை ஆரம்பித்து இருக்கிறார்.
உடனே எம்.எஸ்.விஸ்வநாதன், ''கண்ணதாசா! இன்று முதல் குடிக்கமாட்டேன் என்று எந்த குடிகாரனும் சத்தியம் செய்யமாட்டான்; நாளை முதல் குடிக்கமாட்டேன் என்றுதான் சொல்வான்'' என்று கூறி இருக்கிறார். அதன்பிறகே கண்ணதாசன் பல்லவியை, ''நாளை முதல் குடிக்கமாட்டேன்'' என்று தொடங்கி பாடலை எழுதி முடித்து இருக்கிறார்.
பேச்சிலோ, பாடல்களிலோ அறச்சொல் வரக்கூடாது என்றும், அது நல்லது அல்ல என்றும் சொல்வார்கள். அறச்சொல் என்பது அபசகுனமான வார்த்தையை குறிக்கும்.
காதல் தோல்வி பாடல் என்றால் கவிஞரின் கற்பனை குதிரை அலாதி வேகமெடுக்கும். காதலியால் ஏற்படும் வேதனைகளுக்கெல்லாம் அவர் இறைவனை திட்டுவதோடு, தண்டிக்கவும் துடிப்பார்.
'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'எங்கே நிம்மதி' என்ற பாடலில், ''பெண்ணை படைத்து கண்ணை படைத்த இறைவன் கொடியவனே'' என்று குற்றம்சாட்டினார்.
'வானம்பாடி' படத்தில் கவிஞர் எழுதிய அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை. அதில் ஒன்றுதான், ''கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்'' என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல்.
இந்த பாடலில் முதலில், ''அவன் காதலித்து வேதனையில் சாகவேண்டும்'' என்று கண்ணதாசன் எழுதி இருந்தார். ஒலிப்பதிவின் போது பாடலை பாடுவதற்காக வந்த டி.எம்.சவுந்தரராஜன், வரிகளை படித்துப் பார்த்துவிட்டு, ''கவிஞரே, இவன் (கதாநாயகன்) காதலித்துவிட்டு ஏமாற்றத்தில் வாடுவதற்காக கடவுளை ஏன் சாகச் சொல்லவேண்டும்? சாக வேண்டும் என்பது அறச்சொல் அல்லவா? அதை மாற்றிக் கொடுங்கள்'' என்று கேட்டார். அவர் கூறியதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட கவிஞர், 'சாகவேண்டும்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வாடவேண்டும்' என்று திருத்திக் கொடுத்ததாக சொல்வார்கள்.
இதேபோல் 'வசந்தமாளிகை' படத்தில் காதலில் தோல்வி அடைந்த நாயகன் பாடுவதாக வரும், ''இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்; நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று'' என்ற பாடலில், ''கண்களின் தண்டனை காட்சி வழி, காட்சியின் தண்டனை காதல் வழி, காதலின் தண்டனை கடவுள் வழி'' என்று எழுதிய கவிஞர் இறுதியில் ''கடவுளை தண்டிக்க என்ன வழி?'' என்று கேட்டு இருப்பார்.
''சோதனைமேல் சோதனை போதுமடா சாமி'' (தங்கப்பதக்கம்) என்ற பாடல் மூலம், ரொம்ப சோதனைகளை கொடுக்காதப்பா மனிதர்களால் தாங்க முடியாது என்று இறைவனிடம் கெஞ்சிய கவிஞர், மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்பதை 'அவன்தான் மனிதன்' படத்துக்காக எழுதிய, ''மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று; இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று" என்ற பாடலில் உணர்த்தி இருப்பார்.
முதலும் கடைசியும்...
திரையுலகில் வாய்ப்பு தேடி போராடிக்கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன், சினிமாவுக்காக எழுதிய முதல் பாடல் 'கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே'. 1949-ம் ஆண்டு வெளியான 'கன்னியின் காதல்' என்ற படத்துக்காக அவர் இந்த பாடலை எழுதினார். அவர் எழுதியது போலவே பிற்காலத்தில் அவரது கனவெல்லாம் நனவானது. அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவருக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கிடந்தார்கள். திரையுலகில் அவர் ஒரு ராஜா போலவே வாழ்ந்தார்.
தாலாட்டு பாடல்கள் என்றால் கண்ணதாசன்தான். தமிழகத்தின் மண்வாசனை, கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அவர் எழுதிய தாலாட்டு பாடல்கள் மயிலிறகு போல் நம் மனதை வருடிக்கொடுத்து மெய்மறக்கச்செய்யும். 'ஏன் பிறந்தாய் மகனே', 'ஒரேயொரு ஊரிலே ஒரேயொரு ராஜா', 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்று அந்த வகை பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் கடைசியாக எழுதிய, 'கண்ணே கலைமானே' என்ற பாடலும் தாலாட்டு பாடல்தான். 'மூன்றாம் பிறை' படத்துக்காக இளையராஜா இசையில் 1981-ல் இந்த பாடலை எழுதினார். பாடலை எழுதிவிட்டு அமெரிக்கா சென்ற கவிஞர் அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.
அந்த பாடலின் பல்லவியில், ''ஏதோ தெய்வம் சதி செய்தது; பேதை போல விதி செய்தது'' என்று ஒரு வரி எழுதி இருப்பார்.
அதுபோலவே நடந்து விட்டது. அவருக்கும், அவரது எழுத்துக்கும் இறைவன் ஓய்வு கொடுத்துவிட்டான். அவரது தாலாட்டில் அவரே மீளாத்துயில் கொண்டுவிட்டார்.
குழந்தையும் தெய்வமும்...
குழந்தைகள் தெய்வத்துக்கு சமமானவர்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்ல தெரியாது; சூதுவாது கிடையாது. மனதில் வஞ்சம் இருக்காது. சண்டையிட்டால் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு மகிழ்ச்சியுடன் கூடிக்குலாவும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஆனால் வளர வளரத்தான் குழந்தைகள் பெரியவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றன. எனவே விவரம் தெரியும் வரையிலான குழந்தை பருவம் தெய்வீகமானது.
இதைத்தான், 'குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில், ''குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, பிறர் குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று" என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
வாழ்க்கையை பற்றிய ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறானது. ஒருவனுக்கு சுகமாக இருப்பது, இன்னொருவனுக்கு சுமையாக இருக்கும். இந்த தத்துவத்தையும் மனிதனைப்பற்றிய இறைவனின் பார்வையையும், அவனது அருமை பெருமைகளையும் 'சாந்தி நிலையம்' படத்துக்காக எழுதிய இரு பாடல்கள் மூலம் அருமையாக படம்பிடித்து காட்டி இருப்பார் அந்த ஒப்பற்ற கவிஞர்.
அதில், ''கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தாராம்'' என்ற பாடலில், கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா? என்று இறைவன் கேட்ட போது, ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்று சொல்ல மற்றொருவன் அதுவே கொடுமை என்று சொல்ல. இறைவன் சிரித்துவிட்டதாக எழுதி இருப்பார்.
''கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது. காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது? எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது, எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது? இறைவனுக்கே அது புரியவில்லை, மனிதரின் கொள்கை தெரியவில்லை!'' என்று மனிதர்களின் சுயநலத்தை சாடி இருப்பார்.
இறுதியாக பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் போய் நின்றதாகவும், அங்கு குழந்தைகள் பேசிச் சென்ற மழலை மொழியில் தன்னை கண்டதோடு, உண்மையையும் அறிந்து அவர் வானம் சென்றதாகவும் முத்தாய்ப்பாக முடித்து இருப்பார்.
மனிதர்கள் மற்றும் குழந்தைகளை பற்றிய இறைவனின் மதிப்பீடாக அமைந்த இந்த பாடல் மனித குலத்துக்கே ஒரு பாடம் என்றால் அது மிகையல்ல.
''இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்'' என்ற பாடலில் மலரில் வாசத்தையும், சிப்பிக்குள் முத்தையும் வைத்த இறைவன் படைப்பின் மகத்துவத்தை சொன்ன அந்த ஒப்பற்ற கவிஞர், மனிதன் எப்படி வாழவேண்டும் என கடவுள் வழிகாட்டி இருப்பதையும் சுட்டிக்காட்டி இருப்பார்.