பெண்களுக்கு தற்காப்பை கற்றுக்கொடுக்கும் களரி
|கேரளத்தைச் சேர்ந்த பெண் ஆரிபா, நான்கு முறை களரி தற்காப்புக்கலையில் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, களரி பயிற்சியாளர்களுக்கான போட்டியில், ஆறு வயதிலேயே கலந்துகொண்டு, ஆரிபா அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறார்.
"என் தந்தை ஹனீப் குருக்களுக்கு அவருடைய தந்தையார் ஹம்சத்தாலி குருக்கள், களரி கற்றுக்கொடுத்தார். நான் அவரிடமிருந்து களரி கற்றுக்கொண்டேன். நாங்கள் வசிக்கும் மலபார் பகுதியில் எங்களைப் போன்ற ஒருசில குடும்பங்கள் களரி போன்ற தற்காப்புக்கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்" என்று மெதுவாக பேச தொடங்கினார், ஆரிபா.
நான்கு முறை மாநில சாம்பியன் பட்டம் வென்ற ஆரிபாவுக்கு வயது 26. இவரது பங்களிப்பால், இன்று களரி போட்டிகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.
''ஒவ்வொரு பெண்ணும் தங்களைத் தற்காத்துக்கொள்ளக் களரியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கையையும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலையும் அளிக்கும். என்னை பின்பற்றி, நிறைய பெண்கள் களரி பயில்கிறார்கள். குறிப்பாக என் தந்தையிடம் ஆண்கள் மட்டும் பயின்று வந்த நிலையில், இப்போது 60 மாணவிகளும் பயிற்சி பெறுகிறார்கள்'' என்று விளக்கமாகப் பேசுகிறார் ஆரிபா.
ஆரிபாவின் தந்தையும் அவரது குருவுமான ஹனீப் குருக்கள், ''என் மகளுக்கு 4 வயதில் களரி தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்தேன். பெண்கள் உடலுக்குக் களரி ஒத்து வராது என்று சொன்னார்கள். ஆனால், அவளுக்குப் பயிற்சியளித்தபோது அவர்கள் சொன்னது தவறு என்பதை உணர்ந்தேன். பயிற்சிபெற தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் களரி போட்டிகளில் வெல்லத் தொடங்கினாள். அன்று தொடங்கி, இன்று வரை அவளது வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது'' என்கிறார் ஹனீப்.
எல்லோருமே களரியைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறார் அவர். ''இது உடலை நெகிழ்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கான ஒரு வழியாகும். களரியை எல்லோருக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்க எங்களிடம் 'களரி வந்தனம்' என்ற அமைப்பும் இருக்கிறது'' என்றார்.
அரியானாவில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் களரியையும் சேர்த்தது மத்திய அரசு. அதனால் களரிக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்று சொல்லும் ஆரிபா, தேசிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.
பாலக்காட்டில் உள்ள செக்கனூரில் தன் கணவருடன் வசித்துவருகிறார் ஆரிபா. அவரது கணவர் சமீருக்கு, களரியில் சாம்பியனாகவும் பயிற்சியாளராகவும் மனைவி இருப்பதில் பெருமை அதிகம்.
"எடப்பால் போகும்போதெல்லாம் களரி வகுப்புகள் எடுப்பது வழக்கம். என் மாணவிகளில் ஒருவர் சமீபத்தில் முதல் பரிசு வாங்கியிருக்கிறார். இது தேசிய அளவிலும் தொடரவேண்டும் என்ற ஆசையில் தீவிரமாக பயிற்சி அளிக்கிறேன்" என்கிறார் ஆரிபா.