ஜோஷிமத்: புதையும் நகரம் புகட்டும் பாடம்
|உத்தரகாண்டில் சமோலி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஜோஷிமத் அடிப்பாகத்தில் மண் சரிந்ததால் பல வீடுகள், கட்டிடங்கள் பூமிக்குள் இறங்கி புதைந்தன.
மக்கள் குடியேற்றம், தொழில் வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு, சாலை அமைத்தல், அணைகள் கட்டுதல், நீர்மின்நிலையங்கள் அமைத்தல், அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல் என்ற பெயரில் உலகில் பல நாடுகளிலும் காடுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.
நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த வசதிகளையெல்லாம் ஏற்படுத்தவேண்டிய கட்டாய நிலை உள்ளது. விரைவான போக்குவரத்துக்கு தரமான சாலைகளும், உணவு உற்பத்தியை பெருக்க புதிய அணைகளும், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தி நிலையங்களும் மிகவும் அவசியமானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் இவற்றையெல்லாம் உருவாக்க எந்த அளவுக்கு இயற்கையை அழிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாட்டில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் கண்மூடித்தனமாக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை. நீதிமன்றங்கள் எத்தனை முறை கண்டித்தாலும் உரிய பலன் இல்லை.
மலைப்பிரதேசங்கள் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகள் என்றபோதிலும், சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அங்கு அதிக அளவில் தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் கட்டப்படுகின்றன. புற்றீசல் போல குடியிருப்புகளும் பெருகுகின்றன. சமவெளி பகுதியைப் போல் மலைப்பகுதியையும் கருதிக்கொண்டு அங்கு இஷ்டம் போல் கட்டுமானங்களை மேற்கொள்வது ஆபத்துக்கு வழிவகுக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் 'ஜோஷிமத் பூமி வெடிப்பு'.
மலைப்பகுதியின் இயற்கை வளத்தை அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற பாடத்தை ஜோஷிமத் புகட்டி இருக்கிறது.
பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம்தான் உத்தரகாண்ட்.
இமயமலையின் இயற்கை எழில் சூழ்ந்த உத்தரகாண்டில் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்துவார், ஹேமகுந்த் சாகிப் போன்ற ஏராளமான புனிதத்தலங்கள் உள்ளதால் இதை 'தேவ பூமி' என்று அழைக்கிறார்கள். நைனிடால், முசோரி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் உள்ளன. இதனால் இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
இந்த மாநிலத்தின் வடக்கே சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தும், தெற்கே உத்தரபிரதேசமும், கிழக்கே நேபாளமும், மேற்கிலும், வடமேற்கிலும் இமயமலையும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இங்குள்ள சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரமான ஜோஷிமத் (ஜோஷிமடம்) கடல் மட்டத்தில் இருந்து 6,150 அடி உயரத்தில் இருக்கிறது. நகரசபை அந்தஸ்து பெற்றுள்ள இந்த சிறிய நகரில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆதிசங்கரர் நிறுவிய 4 பீடங்களில் ஒன்று ஜோஷிமத்தில் உள்ளது. (கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடம், குஜராத்தில் உள்ள துவாரகா பீடம், ஒடிசாவில் உள்ள கோவர்த்தன பீடம் ஆகியவை மற்ற 3 பீடங்கள் ஆகும்.) அலக்னந்தா ஆறு இந்த நகரின் வழியாக செல்கிறது.
இந்தியாவின் வடக்கே, காஷ்மீரில் இருந்து கிழக்கே அருணாசலபிரதேசம் வரை மிகப்பெரிய அரண்போல் இமயமலை அமைந்துள்ளது. இது ஒரே மலையாக இல்லாமல் 4 பெரிய மடிப்புகளாக உள்ளது. வடக்கு ஓரத்தில் உள்ள மடிப்பு 'டிரான்ஸ் இமயமலை' எனவும், அடுத்ததாக உள்ள மடிப்பு 'பெரிய இமயமலை' (ஹிம்மாத்ரி) எனவும், அதற்கு அடுத்ததாக உள்ள மடிப்பு 'மத்திய இமயமலை' (இமாச்சலம்) எனவும், அதற்கு தெற்கே கடைசியாக அமைந்துள்ள மடிப்பு 'கீழ் இமயமலை' (சிவாலிக்) எனவும் அழைக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அசாம், அருணாசலபிரதேச மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் இமயமலை தொடரில்தான் உள்ளன. சிக்கிம் மாநிலம் முழுவதும் இமயமலையில்தான் அமைந்திருக்கிறது.
இமயமலைத்தொடர் பகுதியில் நேபாளம், பூடான் நாடுகளும், சீனா மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் சில பகுதிகளும் உள்ளன.
இமயமலையும் அதையொட்டிய பகுதிகளும் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களாக கருதப்படுகிறது. எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் மற்றும் நிலச்சரிவு ஆபத்து இருக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள நகரங்களில் கட்டுமானப் பணிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் 1976-ம் ஆண்டில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் யோசனை தெரிவித்து இருந்தது.
திருடன் எப்போது வருவான் என்று தெரியாது. ஆனால் எப்போது வேண்டுமானலும் வரலாம் என்பதால்தான் தினந்தோறும் வீட்டை பூட்டுகிறோம். தங்கள் வீட்டின் மீது ஒவ்வொருவருக்கும் இருக்கும் அக்கறையைப் போல் நாட்டின் மீது அரசாங்கங்களுக்கு இருக்கவேண்டும்.
இருந்திருந்தால் மிஸ்ரா ஆணையம் வழங்கிய சிபாரிசுகள் கண்டிப்புடன் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அந்த யோசனையை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. உத்தரகாண்ட் உருவான பிறகு, உறுதியான-சரியான நகரமைப்பு திட்டங்கள் எதையும் மாநில அரசு உருவாக்கி செயல்படுத்தவில்லை. அதனால்தான் ஜோஷிமத் தற்போது நிலைகுலைந்து போய் நிற்கிறது.
இந்த நகரத்தின் வழியாகத்தான் ரிஷிகேஷ், பத்ரிநாத், ஹேமகுந்த் சாகிப் போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியும். இதனால் இங்கு எப்போதும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பனிச்சறுக்கு போட்டிக்கான சர்வதேச மையமாகவும் இந்த பகுதி விளங்குகிறது. இமயமலையில் ஏறுவதற்கான மலையேற்ற பாதையும் இங்குதான் தொடங்குகிறது. மேலும் சீன எல்லையையொட்டி அமைந்திருப்பதால் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது.
அப்படிப்பட்ட ஜோஷிமத் நகரில் கடந்த சில வாரங்களாக திடீரென்று வீடுகள், கடைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கோவில்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. சாலைகள் பாளம் பாளமாக பிளந்தன. அடிப்பாகத்தில் மண் சரிந்ததால் பல வீடுகள், கட்டிடங்கள் பூமிக்குள் இறங்கி புதைந்தன. ஒரு ஓட்டலும் புதைந்தது.
இதனால் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். கட்டிடங்களில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த நகரமும் பூமிக்குள் புதைந்து விடுமோ? தங்கள் எதிர்காலம் என்னாகுமோ? என்ற பீதியில் இருக்கிறார்கள்.
நிலைமை மோசமானதை உணர்ந்த அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். நகரில் உள்ள 4,500 கட்டிடங்களில் 600-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால், அவை வசிப்பதற்கு லாயக்கற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோசமான நிலையில் உள்ள வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களில் அபாயத்தை குறிக்கும் வகையில் பெருக்கல் குறி போடப்பட்டு அவற்றை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி இருக்கிறார்கள். அத்துடன், ஜோஷிமத் நகரை நிலச்சரிவு மண்டலமாக மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
ஜோஷிமத் நகருக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, பாதுகாப்பு கருதி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த விஷயத்தில் உத்தரகாண்ட் பாரதீய ஜனதா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருக்கிறார்.
ஜோஷிமத்தில் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜோஷிமத்தில் இருந்து 82 கி.மீ. தொலைவில் உள்ள புனிதத்தலமான கர்ணபிரயாக்கின் பகுகுணா நகர் என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதலே விரிசல் ஏற்பட்டு வந்தது வெளியுலகுக்கு தெரியவந்து இருக்கிறது. ஜோஷிமத்தில் இருந்து 292 கி.மீ. தொலைவில் முசோரியில் உள்ள லாண்டோர் மற்றும் ரிஷிகேஷ் அருகேயுள்ள அடாலி கிராமத்திலும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வது, இதற்கு கனரக எந்திரங்களை பயன்படுத்துவது, தீப்பெட்டிகளை ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்தாற் போன்று விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டுவது, அலக்நந்தா, பிண்டார் நதிகளால் ஏற்படும் நிலஅரிப்பு, வெள்ளத்தை முறையாக வெளியேற்றாதது ஆகியவையே, வீடுகளில் விரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்று ஜோஷிமத் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுடைய குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன் பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவானதுதான் ஜோஷிமத் பகுதி என்றும், இதனால் அதிகமான எடையை தாங்கும் திறன் இந்த பகுதிக்கு கிடையாது என்றும் புவியியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இயற்கை. இதை மாற்றி அமைக்க முடியாது.
அதேசமயம் எந்த வரைமுறையும் இன்றி சகட்டுமேனிக்கு மலைச்சரிவுகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்கு சரியான வசதிகளும் கிடையாது. இதனால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி பூமிக்குள்ளேயே இறங்கியது. மலைப்பகுதி என்பதால் ஜோஷிமத் நகரில் அலக்நந்தா ஆற்றின் அகலம் வெறும் 8 முதல் 12 மீட்டர்தான். ஆற்று நீரிலும், சிற்றோடைகள் வழியாக செல்லும் நீரிலும் கணிசமான அளவு பூமிக்குள் கசிந்து கொண்டே இருக்கும். கடினமற்ற தரைப்பகுதிக்குள் தொடர்ந்து தண்ணீர் இறங்கியதன் காரணமாக அங்குள்ள மண் நிலைத்தன்மையை இழந்து கீழ்ப்பகுதியை நோக்கி சென்று இருக்கிறது.
இதன் காரணமாகவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு அவை பூமிக்குள் புதைய தொடங்கியதாகவும், சாலைகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் புவியியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த அவலநிலைக்கு மற்றொரு காரணமாக, ஜோஷிமத் அருகே அலக்நந்தா ஆற்றின் குறுக்கே தேசிய அனல்மின் கழகத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின்திட்டத்தையும் மக்கள் குறை கூறுகிறார்கள். மிகப்பெரிய இந்த திட்டத்துக்காக சுரங்கம் தோண்டப்படுவதாலும், இதற்கு கனரக வாகனங்களும், எந்திரங்களும் பயன்படுத்தப்படுவதாலும் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுபற்றி ஜோஷிமத் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாத்தி என்பவர் கூறுகையில், நீர்மின் திட்டத்துக்காக சுரங்கங்கள் தோண்டப்பட்ட போது நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், தாங்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பணி நிறுத்தப்பட்டதாகவும், இதேபோல் ஹேலங்க்-மார்வாரி புறநகர் சாலை பணியின் போதும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த திட்டங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்றும், தங்களுடைய எச்சரிக்கையை முன்பே கேட்டிருந்தால் தற்போதைய நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் அவர் கூறினார்.
ஜோஷிமத் நகரின் பொருளாதாரம் அந்த நகருக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சார்ந்தே இருக்கிறது. அவர்கள் அதிக அளவில் வருவதால்தான் நகரில் புதுப்புது ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் என காளான்கள் போல் கட்டிடங்கள் வேகமாக முளைக்க தொடங்கின. அந்த அளவுக்கு சரியான வடிகால் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. எனவே நகரில் கட்டுமானங்களை கட்டுப்படுத்துவதோடு, மேற்கண்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் இன்னொரு யோசனையையும் கூறுகிறார்கள். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் பூடான் அரசு தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நாளொன்றுக்கு கணிசமான தொகையை அபிவிருத்தி கட்டணமாக வசூலிப்பது போல் இமயமலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களிடம் வசூலிக்கலாம் என்றும் அந்த தொகையை அந்த பகுதியின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இமயமலையும் அதையொட்டியுள்ள இடங்களும் பூகம்பம் ஏற்பட மிக அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் அங்கு பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
அதேசமயம் ஒழுங்குபடுத்தப்படாத கட்டிடங்கள், மோசமான கழிவுநீர் வடிகால்கள், அபிவிருத்தி என்ற பெயரில் அபரிமிதமாக மேற்கொள்ளப்படும் சாலைவசதி, நீர்மின் திட்டங்கள் போன்றவற்றால் ஒட்டுமொத்த இமாலய பகுதியும் சீரழிந்து வருவதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
எனவே, ஜோஷிமத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த துயர நிலைக்கு இயற்கைக்கும் மனிதனுக்கும் சமபங்கு உள்ளது.
ஏற்கனவே இயற்கையின் அச்சுறுத்தல் இருக்கும் போது, அங்கு மனிதன் மேலும் மேலும் தவறுகளை செய்தால், ஆபத்தை விலைகொடுத்து வாங்குவது போல் அமைந்துவிடும்.
இயற்கையால் இந்த பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுத்து நிறுத்த முடியாது. அதேசமயம் மனிதன் நினைத்தால் அந்த ஆபத்தினால் வரும் சேதங்களை குறைக்கமுடியும் என்பதோடு, தன்னாலும் தீங்குகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
அபிவிருத்தி, முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையை பாழ்படுத்துவது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமம். இதை உணர்த்தும் வகையில் 'ஜோஷிமத் சம்பவம்' அபாய சங்கை ஊதி எச்சரித்து இருக்கிறது.
இனிமேலாவது பாடம் கற்றுக்கொள்வோம்...
இமயமலை பகுதியில் பூகம்ப ஆபத்து
நாம் வாழும் இந்த பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தியா தட்டு, அண்டார்டிக் தட்டு, ஆஸ்திரேலியா தட்டு, யுரேசியா தட்டு, வட அமெரிக்கா தட்டு, தென் அமெரிக்கா தட்டு, ஆப்பிரிக்கா தட்டு, பசிபிக் தட்டு ஆகிய 8 பெரிய பாறை தட்டுகளின் மீதுதான் அனைத்து நாடுகளும், கடல்களும் அமைந்து இருக்கின்றன. இந்த பாறை தட்டுகள் ஒவ்வொன்றும் பல்லாயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டவை. இவை தவிர 12 சிறிய தட்டுகளும் உள்ளன.
இந்த தட்டுகள் அவ்வப்போது ஒன்றுடன் ஒன்று உரசுவதும், நகருவதுமாக இருக்கின்றன. அந்த சமயங்களில்தான் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த சம்பவங்கள் பெரிய அளவில் கடலுக்கு அடியில் ஏற்பட்டால் சுனாமி அலைகள் உருவாகின்றன. 2 ரிக்டர் அளவுக்கு குறைவாக ஏற்படும் பூமி அதிர்ச்சிகளை நம்மால் உணர இயலாது.
இந்தியா, ஆஸ்திரேலியா பெருந்தட்டுகளில்தான் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அமைந்து இருக்கின்றன. இதில் இந்திய தட்டு மெல்ல மெல்ல வடகிழக்கு நோக்கி நகர்வதாக கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன், இந்தியா தற்போதுள்ள இடத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 4 ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்திருக்கலாம் என்று புவியியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால், தற்போது இமயமலை இருக்கும் இடத்தில் 'டெத்தீஸ்' என்ற கடல் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். பூமிக்கு அடியில் அப்போது ஏற்பட்ட பெரும் அழுத்தத்தின் காரணமாக இந்திய தட்டு வடகிழக்கு திசையில் நகர, அதன் காரணமாக ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக பூமிப்பகுதி பிதுங்கிக் கொண்டு மேல வந்ததால் 'டெத்தீஸ்' கடல் தூர்ந்து இமயமலை உருவானது.
இந்த மலைத்தொடரில் பூமிக்கு அடியில் வெகு ஆழத்தில் அடிக்கடி அதிர்வுகளும், அழுத்தமும் ஏற்படுவதாகவும், எனவே அங்கு பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர்பில் ஏற்கனவே எச்சரித்து இருக்கிறார்.
அவர் சொல்வது போல் 1905-ம் ஆண்டு இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.
அந்த பூகம்பத்தின் காரணமாக பூமிக்கு அடியில் உள்ள இந்திய பாறை தட்டில் 600 கி.மீ. நீளத்துக்கு பிளவு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அந்த இடத்தில் இருந்து மியான்மரின் மேற்கு கடற்கரை, வங்காளதேசம் வழியாக இமயமலையின் கிழக்கு முனை வரை பூமிக்கு அடியில் 1,000 கி.மீ. நீளத்துக்கு பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
பூமிக்கு அடியில் உள்ள இந்திய தட்டும் யுரேசிய தட்டும் அடிக்கடி உரசிக் கொள்வதால் இந்திய தட்டின் சில பகுதிகள் பலவீனம் அடைந்து இருப்பதாகவும், 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிக்கு இதுதான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் பூகம்பம் ஏற்படும் பகுதிகள் 2-வது முதல் 5-வது வரை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5-வது மண்டலம் 9 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்படுவதற்கான மிகஅதிக வாய்ப்புள்ள பகுதியாகவும், 2-வது மண்டலம் 6 ரிக்டர் அளவுக்கும் கீழ் பூகம்பம் ஏற்பட குறைவான வாய்ப்புள்ள பகுதியாகவும் உள்ளது.
இதில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்கள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சில பகுதிகள், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடாவில் உள்ள ரான் மற்றும் வடக்கு பீகார், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகள் 5-வது மண்டலத்தில் உள்ளன.
சிக்கிம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் பீகார், குஜராத், மத்தியபிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், லடாக் ஆகியவை 8 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியான 4-வது மண்டலத்தில் அமைந்துள்ளன.
கேரளா, கோவா, லட்சத்தீவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் 7 ரிக்டர் அளவில் மிதமான பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ள 3-வது மண்டலத்திலும், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மீதமுள்ள பகுதிகள் 2-வது மண்டலத்திலும் உள்ளன. 1-வது மண்டலம் இந்தியாவில் இல்லை.
உயிர்ப்பலி வாங்கிய நீர் மின்நிலையம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது 3,600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 39 பெரிய மற்றும் சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவைதவிர கூடுதலாக 2,400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 25 நீர் மின்நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் நீர் மின்நிலையங்களில் ஜோஷிமத் அருகே கட்டப்பட்டு வரும் 520 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தபோவன் விஷ்ணுகாட் மின்நிலையம் குறிப்பிடத்தக்கது. அலக்நந்தா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் இந்த நீர் மின்நிலையத்தின் கட்டுமானப்பணி 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. கடந்த 2013 ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு மேல் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வேலை முடிந்தபாடில்லை.
2013 முதல் 2021-ம் ஆண்டுக்குள் ஆற்றில் இருமுறை ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் கட்டுமானப்பணிகள் நாசமாயின. இதனால் கட்டுமானச் செலவு திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு அதிகரித்தது.
2021-ல் இமயமலையில் பெருமளவில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததால் அலக்னந்தா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் நீர் மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் உள்பட 200 பேர் பலியானார்கள்.
''எங்களை வெளியேற்றாதீர்கள்''
மலைப்பகுதியை விட்டு வெளியேறி கீழே சமவெளி பகுதிக்கு சென்று வாழுமாறு அதிகாரிகள் தங்களிடம் கூறுவதாக 'மனா' என்ற கிராமத்தின் தலைவர் பிதாம்பர் சிங் மோல்பா வருத்தத்துடன் கூறினார். மனாதான் ஜோஷிமத் அருகே சீன எல்லையையொட்டி அமைந்துள்ள கடைசி இந்திய கிராமம் ஆகும். குளிர்பிரதேசத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட தங்களை கட்டாயப்படுத்தி சமவெளி பகுதிக்கு அனுப்பக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், தங்கள் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கர்ணபிரயாக்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான 85 வயது கப்பார் சிங் ரவாத் கூறுகையில், கடந்த ஆண்டு கனமழை பெய்தபோதே நிலைமை மோசமாகி தங்கள் வீட்டின் தூண்கள் சாய தொடங்கிவிட்டதாகவும், அரசாங்கம் ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தும் இதுவரை ஒரு பைசா கூட கைக்கு வந்து சேரவில்லை என்றும் சோகத்துடன் கூறினார். இரவில் குடும்பத்துடன் காப்பகத்துக்கு சென்று தூங்கிவிட்டு பகலில் எல்லோரும் வீட்டுக்கு வருவதாகவும் வருத்தத்துடன் கூறிய அவர், மரணத்துக்கு பிறகுதான் நான் இந்த வீட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் கண் கலங்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே தங்கள் வீட்டில் விரிசல் விட தொடங்கியதாகவும், தற்போது பூமிக்குள் புதைந்து வருவதாகவும் கர்ணபிரயாக் நகரசபை உறுப்பினர் ஹரேந்திர பிஷித் தெரிவித்தார்.
பூமியில் மிகப்பெரிய வெடிப்பு
பூகம்பம், எரிமலை வெடிப்பு, கனமழை, அதிக வெப்பம் போன்றவற்றின் காரணமாக பூமியில் பெரிய அளவில் வெடிப்புகள் ஏற்படுவது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அபார் என்ற இடத்தில் திடீரென்று ஒரு நாள் பூமியில் வெடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் 8 கி.மீ. நீளத்துக்கு இருந்த இந்த வெடிப்பு 3 வாரங்களில் 60 கி.மீ. நீளம் வரை சென்றது.
இதேபோல் கென்யாவில் தலைநகர் நைரோபிக்கு தென்மேற்கே சுஸ்வா என்ற பகுதியில் ஒரு நாள் இரவு 50 அடி ஆழத்தில் 65 அடி அகலத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டது. 'கிழக்கு ஆப்பிரிக்க பிளவு' என்ற பெயர் கொண்ட இந்த வெடிப்பு நெடுஞ்சாலையை இரண்டாக துண்டித்தது. என்றாலும் அதில் மண்ணை நிரப்பி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.